பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; 5
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

கடல் கரையில் குருத்து மணல் கொட்டிக் கெடக்கு.

கடல் அலைகளால் கரை ஒதுங்கிய பூக்கள் அந்தக் கடல்கரை நெடுகக் கெடக்கு.

அந்தக் கடல் கரைப் பாதையில் ஒரு தேர் அசைந்து அசைந்து மெள்ள மெள்ள வந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கடல்கரைப் பாதை நெடுகிலும் நண்டுகள் அங்கிட்டும் இங்கிட்டும் ஆக ஓடிக்கொண்டிருக்கின்றன.

குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிற அழகான அந்தச் சின்னஞ்சிறு நண்டுகள் மேல் தேர்ச்சக்கரம் ஏறிநண்டுகள் செத்து விடக் கூடாது என்று தேர்ப்பாகன் குதிரையின் வாரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறான். தேர்ப்பாகன் அவன் குதிரைகளை மெல்லமா லாவகமா நடக்க வைக்கிறான்.

தேர்க்காலில் சிக்கி நண்டுகள் நசுங்கிச் சாகாமல் இருக்க தேர்ப்பாகனுக்குப் பகல் போன்ற நல்ல வெளிச்சத்தைக் கொடுத்து உதவிக்கொண்டிருக்கிறது முழு நிலவு.

உலோச்சனார்
நற்றிணை 11