எப்போதும் கைவிட்டுவிடாதே எப்போதும் சரணடைந்துவிடாதே

-கமாண்டர் க்வின்ஸி டகார்ட் காலக்ஸி க்வெஸ்ட்

கதையை வித்யாசப்படுத்துவதற்காக எதையுமே செய்யத் தேவையில்லை. அது நடக்கிற காலம் நிகழ்கிற களம் அடுத்தடுத்த நகர்தல்கள் இவற்றை வழமைக்குச் சம்மந்தமில்லாமல் மாற்றி யோசித்தால் மட்டுமே போதுமானது. இவ்வளவு ஏன்? கதையை வித்யாசப்படுத்துவதற்குக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை மட்டும் மாற்றி யோசித்தால் போதும். கதை தானாய்ப் புரண்டு அழக்கூடிய குழந்தை மாதிரி.

நலன் குமரசாமி எழுதி இயக்கிய சூதுகவ்வும் கலைத்துப் போட்ட சீட்டுக்களைக் கொண்டு புதிய ஆட்டமொன்றைத் துவங்குவதைத் தவிர புதிய திசை புது நியாயம் ஏதுமில்லை என்பதாகத் தன்னைத் தொடங்கிக் கொள்கிறது கதை.

எப்படியாவது யாரையாவது கடத்தி எதையாவது சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட நாயகன் ஒரு பெண்ணைக் கடத்த முயலுகையில் கார் ஸ்டார்ட் ஆகத் தாமதமாகவே அவள் தர்ம மொத்து மொத்துகிறாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடுகிறான். அவனது கண்களுக்கு மட்டும் புலப்படும் இல்யூஷன் ஷாலினி தன்னிடம் மணி கேட்பவனிடம் சில்றை இல்லைப்பா என்று விரட்டுகிறான். நானென்ன பிச்சையா கேட்டேன் மணி என்னான்னு தானே கேட்டேன் என்று அந்த ஸ்ப்ரிங் சிகையாளர் வாழ்வு வெறுத்து நாயகனைத் துரத்துகிறார்.

க்விக் மணி அதாவது வருந்தாமல் விரைவாகப் பணம் சேர்க்க வேண்டும் என்பது மனித மூளையின் விசித்திரக் கனவுகளில் ஒன்று எல்லாருக்குமே தனக்கு எதாவதொரு அதிர்ஷ்டம் வராதா என்று ஏங்கப் பிடிக்கிறது. அடுத்தவர் கைப்பொருளைக் கவர்ந்து களவு செய்வதுவரை எல்லோரும் அப்படியான கனவை உதிராமல் பற்றிக்கொண்டு பின்தொடர்ந்து செல்லும் சிலர் அதை குற்றப்பூர்வமாக சாத்தியம் செய்திட விழைகிறார்கள்.

அங்கதம் என்றைக்குமே அபூர்வம் தான். இந்தப் படத்தின் வசனம் ஆகப் பெரிய பலம். இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட ஒத்துக்காதுடா என்பதில் ஆரம்பித்து வசனம் மூலமாகவும் காட்சிமொழியாலும் சின்னஞ்சிறு அசைவுகளாலும் ஸ்பூஃப் என்பதற்கான இலக்கணத்தை விஞ்சாமல் பல தெறிப்புக்களோடு சூதுகவ்வும் மலர்ந்தது.

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் தன் பின்புறத்தில் ஸ்டைலாக துப்பாக்கியை செருகும்போது அது வெடித்துவிடுகிறது என்பதை ஒரு படத்தின் களைமேக்ஸ் ட்விஸ்ட் ஆக யோசிக்க முடியும் என்பதுதான் இக்கதையின் விசித்திரத்துக்கு ஒரு சான்று.

படத்தின் ஆரம்பத்தில் சொந்த ஊரான திருச்சியில் நடிகை நயன்தாராவுக்கு கோயில் கட்டியதாக செய்தித் தாட்களில் பேருடன் செய்தி வருகிற பாபி சிம்மா, இனி ஊரில் இருக்கமுடியாது எனும் நிலையில் வீட்டார் நிர்ப்பந்திக்க சென்னைக்குத் தன் நண்பன் அருள்செல்வனது அறையைப் பகிர்ந்துகொள்ள வந்து சேர்கிறார். அந்த செய்தியோடு அடுத்தடுத்த பக்கங்களில் ரவுடி டாக்டர் விடுதலை என்று வருகிறதையும் வாய் திறந்து பேசாத சைக்கோ போலீஸ் அதிகாரி பிரம்மா மாற்றலாவதையும் வாசிக்க முடிகிறது. நண்பன் வந்து சேர்ந்த நேரம் அருள்செல்வனுக்கும் வேலை போகிறது ஏற்கனவே அவருடன் அறையைப் பகிர்ந்திருக்கும் ட்ரைவரான இன்னொரு நண்பர் ஒரு வாரம் முன்பு தான் வேலை இழந்திருக்கிறார். இவர்கள் மூவரும் தனக்கென்று தனிக் கொள்கையோடு ஆள் கடத்தி சம்பாதிப்பதற்கான முயற்சியில் இருக்கும் விஜய் சேதுபதியுடன் கூட்டு சேர்ந்து கொள்வது படத்தின் முதல் விள்ளல்.

ரெண்டாவது விள்ளல் சுவாரசியம் அதிகம் எனலாம். அருமை நாயகம் என்ற பேரில் இந்தியாவின் கடைசி நேர்மையான அரசியல்வாதி என்று கருதப்படுகிற அமைச்சர் ஞானோதயத்தின் ஒரே மகன். அப்பா அமைச்சர் என்பதன் பலனாக ஒரு பன்ரொட்டி கூட வாய்க்கப் பெறாதவன் தொழில் தொடங்க காசு கேட்கும்போது நீ வேலைக்கு போயி சம்பாதி. அப்பறம் அந்தக் காசுல தொழில் பண்ணு என்று விரட்டும் தந்தை. அவரொரு புகழ்விரும்பி தன்னிடம் லஞ்சம் கொடுக்க வரும் தொழிலதிபர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கைக்களவாகப் பிடித்துத் தருகிறார். அந்தத் தொழிலதிபரின் தம்பி எப்படியாவது அமைச்சரைப் பழிவாங்க வேண்டுமென்று சில்லறைக் கடத்தல் சேதுபதியிடம் வந்து அமைச்சர் மகனைக் கடத்தி ரெண்டு கோடி பணம் டிமாண்ட் செய்து அமைச்சரிடமிருந்து நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆஃபர் வைக்கிறார். இது நல்லாருக்கே என்று தன் புது டீம் சகிதம் இந்த முயற்சியில் இறங்கி சொதப்புகிறார்கள்.

மூன்றாம் விள்ளல் ஆரம்பம். தன்னைத் தானே கடத்த ஆள் செட்டப் செய்து திட்டத்தைச் செயல்படுத்தும் போது குறுக்கே வந்து கெடுத்துவிட்ட விஜய் சேதுபதி அண்ட் டீமை மன்னித்து மறுபடி அதே ப்ளானை தன் கூட்டாளிகளாக செயல்படுத்த செய்கிறான் வெற்றிகரமாக இரண்டு கோடி பணம் கை வந்து சேர்கிறது. மந்திரி ஞானோதயத்தின் நேர்மை பலிக்காமல் போகிறது. கட்சி நிதியிலிருந்து 2 கோடி பணத்தைத் தந்து மகனை ஒழுங்கா மீட்டுட்டு வீடு போய் சேரு என்று முதல்வர் வலியுறுத்துகிறார். அப்படியே செய்தால் பணத்தை பகிர்வதில் மக்களுக்குள் சண்டை வர மந்திரி மகன் மீண்டும் தன் வீட்டுக்கு மொத்தப் பணத்தோடு சென்று சேர்கிறான். சிறு வண்டி விபத்தில் மற்ற சகாக்கள் அடிபட்டு விழிப்பதோடு இடைவேளை.

தன் மானம் அழிந்துவிட்டதாக புலம்பும் மந்திரி ஞானோதயம் மைத்துனர் மணிகண்டன் எனும் ஐஜியை அதட்டி திண்டுக்கல்லில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரம்மாவை சென்னைக்கு வரவழைத்து தன் மகனைக் கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் பிடித்தாக வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இன்ஸ்பெக்டர் பிரம்மாவிடமிருந்து எப்படி அந்தக் குழு தப்புகிறது என்பது ப்ரீ க்ளைமேக்ஸ்.

இனி நீ கட்சிக்கு தேவையில்லை என்று அடுத்து வரவிருக்கும் எலக்சனில் ஞானோதயத்துக்குப் பதிலாக அருமை நாயகத்துக்கு ஸீட் தரப்பட்டு அவரும் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி மந்திரியுமாகிறார். கடத்தல் சகாக்களில் சேது தவிர்த்த இருவரும் அவரது அந்தரங்க காரியதரிசிகளாகி லஞ்சங்களை மேலாண் செய்வதோடு படம் நிறைகிறது.ஓய்வு பெற்ற மந்திரி ஞானோதயம் தன் செல்லா நேர்மையோடு முறைத்துப் பார்க்கிறார். இல்யூஷன் நாயகி நிசமாகவே எதிர்ப்பட அவளைக் கடத்துகிறார் நோய்மை சேதுபதி.

நலன் குமரசாமி படமெங்கும் சிறுதூவல்களாக வைத்திருந்த உலர் அங்கதம். இந்தப் படத்தை முக்கியமான அனுபவ சாத்தியமாக்கிற்று. எல்லாமே வெவ்வேறாக என வழக்கத்திலிருப்பதையே எடுத்து வழக்கத்திற்கு மாற்றாக்கி அடுக்கிக்கொண்டே சென்றிருப்பது திரைக்கதை அமைப்பின் பலம். நடிகர்களும் சம்பவங்களும் கடைசிவரை வண்ணமயமான காண் இன்பமாக இப்படத்தை மாற்றியது சுவை.

உனக்கு நடிக்கத் தெரியுமா இது தாஸ்
ம்ஹூம் மண்டை ஆட்டி தெரியாதென்பது பாபி சிம்மா
ஸ்கூல்ல காலேஜ்ல எதுனா நாடகம் நடிச்சிருக்கியா மறுபடி தாஸ்
இதற்கும் தலையை ஆட்டி மறுக்கும் பாபி
நடிப்பு சொல்லிக் குடுத்து நடிக்க வச்சா நடிச்சிருவியா இது தாஸ்
இதற்கும் முடியாது என்றாற் போலவே தலையை ஆட்டும் பாபி
இந்த இடத்தில் ஹப்பா என்று தன் இரு கண்களை மூடித் திறந்து நிம்மதியாகி
உன்னைதாண்டா எட்டு மாசமா தேடிட்டிருந்தேன் நீ தாண்டா என் படத்தோட ஹீரோ என்பார் தாஸ்.
அவரே பட நிறைவில் பாபியின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து ஏன் ஏன் ஏண்டா இந்த மூஞ்சிக்கு ரொமான்ஸ் வரமாட்டேங்குது என்பார்.

சந்தோஷ் நாராயணன் மெனக்கெட்டது வீண் போகவில்லை. இந்தப் படத்தின் தீம் ம்யூசிக்கும் முக்கியமான கட்டங்களில் பின்னணி இசையும் காசு பணம் துட்டு மணி மணி பாடலும் இன்றளவும் மனனத்திலிருந்து நீங்காமல் ஒலித்தவண்ணம் இருப்பது இசையின் மேன்மைக்குச் சாட்சி.

அருள்தாஸ், பாபி சிம்மா, யோகிபாபு, அருள் செல்வன், வெங்கட், முனீஷ்காந்த், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, சஞ்சிதாஷெட்டி, கருணாகரன் என நடிகர்களும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் ஜான்பால் லியோவின் எடிட்டிங்க் என எல்லாமே நன்றாக அமைந்திருந்தது எனலாம்.

அபூர்வமான அங்கத படங்களில் முக்கியமான ஒன்று.

முந்தைய தொடர்:http://bit.ly/2lmZbWY