நான் என் சூழலின் விளைபொருளாக இருப்பதை விரும்பவில்லை. என் சூழல் எனதொரு விளைபொருளாக இருப்பதையே விரும்புகிறேன்.

(ஃப்ராங்க் கோஸ்டெல்லோ எனும் கதாபாத்திரம் பேசும் வசனம் The Departed 2006)

மதுரை நகரின் வரைபடத்தில் சுமார் பதினேழு அல்லது பதினெட்டுத் தெருக்கள் அதன் உப வீதிகள் இவற்றை உள்ளடக்கிய பகுதியின் பெயர் சுப்ரமணியபுரம். தனக்கென்று தனி முகம் ஒன்றை உருவாக்கிக் கொண்ட பிரதேசம். அதே சமயத்தில் மதுரையின் முகமாக வெளி நிலங்களின் புரிதலைப் பராமரித்து வருகிற பகுதிகளில் சுப்ரமணியபுரமும் ஒன்று. ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளெயும் வெளியேயும் நிரம்பியும் கசிந்தும் அவரவர் கதைகளைக் காலத்தோடு இயைந்த சரித்திரத்தில் மனிதப் பெயர்களோடும் சம்பவங்களோடும் சேர்த்தெழுதப்படுகிற அவனது முதல் விபரம். ஊர் என்பது வெறும் ஊர் மட்டுமல்ல. பல கதைகளின் தலைவாசலும் அதுவே.

பழி மற்றும் பகை ஆகிய இரண்டும் இரட்டைக் குழந்தைகள். வீரம் என்பதன் நிரூபணம் உயிர்த்திருத்தல் மற்றும் பழிவாங்கல் என இரண்டுமாகையில் மனித வாழ்வில் இயல்பாகக் காணப்படுகிற அச்சமற்ற தன்மை அற்றுப் போகிறது. நீ என்னைக் கொல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வேன் என்று எல்லோரும் எல்லோரிடமும் சொல்லத் தலைப்படுகையில் காரணம் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சமாதானம் என்பது எட்டிக்காயாய்க் கசக்கையில் தீர்வுகள் எல்லாமுமே ஒருமுகம் கொள்கின்றன. அது யாராவது அழிந்த பிறகு யார் மட்டும் எஞ்சப் போவது என்கிற சூத்திரத்தின் நிரந்தர விடையாகிறது. ஆயுதமும் அச்சமும் இணையாத வரைக்கும் எல்லாக் கதைகளும் நெடியனவாக இருக்கின்றன. அச்சம் ஆயுதத்தின் பிடியாகையில் ரத்தம் அதன் நுனியாகிறது.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது போன்ற முதுமொழிகள் தங்களுக்குள் சேமித்து வைத்திருக்கிற ரத்த சாட்சியங்கள் ஆயிரமாயிரம். இந்த உலகத்தில் கொன்றழிக்கப்பட்டவர்களின் கதை இருவிதமானது. ஒன்று போர் என்ற பேரில் பெரும் எண்ணிக்கையிலான கொன்றொழித்தல். இன்னொன்று காரண காரிய நியாய தர்மத் தேவைகளுக்காகக் கொல்லப்பட்டவர்களின் கணக்கு. இதுவரை போரே பார்த்திராத நிலமென்ற ஒன்று இருக்குமானால் அதுகூடக் கொலை மற்றும் பழி ஆகியவற்றை நிச்சயமாகப் பார்த்திருந்தே தீரும். இது குருதியின் நியதி.

அவரவர் தரப்பின் வழக்காடலாகத்தான் ஆயுதங்களைக் கைக்கொள்வது நடக்கிறது. ஒரு கொலை பிறகு நடக்கப் போகும் பல கொலைகளைக் கைப்பிடித்து அழைத்து வருவது அதன் இயல்பு. முதற்கொலை நல்விதை நிலத்தில் விழுந்தால் போலத்தான் அந்த உயிரைப் பறிக்கிறது. தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டே இருக்கையில் ஒரு கட்டத்தில் எஞ்சுவோர் யாருமின்றித் தனிக்கும் ஒரு தரப்பும் அதன் எதிர்தரப்பில் எஞ்சும் சிலருமாய்க் கதை அப்போதைக்கு முடிவதுபோல நேர்கிறது. உலகம் கொலைகளின் சுரங்கம். காலம், மானுட வாழ்தலைத் தோண்டத் தோண்டக் கொலைகள் பூத்துக் குலுங்கும் உயிரழியும் வனம்.

சின்னப் பொறிதான் பெருவனத்தை அழிக்கும் என்பதுபோல முதல் முதலில் விழும் சாவு பல காவுகளைக் கேட்ட வண்ணம் அந்தரத்தில் அமைதியின்றி அலையும் ஆன்மாபோல அலைகிறது. உறவுக்காகவும் நட்புக்காகவும் உடனிருந்தவர்கள் தங்கள் கைகளை உயர்த்தியபடி கொலைக்கடவுளின் முன்பாகச் சரணடைகிறார்கள். கூட இருந்ததற்காகவும் உதவி செய்ததற்காகவும் வெட்டி வீசப்பட்டவர்களின் சரித்திரமானது இன்னும் நெடியது. சட்டமும் தர்மமும் சற்றே தள்ளியிருப்பதாகவே பாவிக்கும் மானுட எத்தனம் கொலைகளுக்குப் பழியெடுக்காமல் சமாதானமடைவதே இல்லை.

ஊடு வேலை என்றொரு பதம் காலங்காலமாகப் புழக்கத்தில் உண்டு. ஒரு கொலை என்பது வெறும் சம்பவமல்ல. அதொரு திட்டமிட்ட நிகழ்வு. கொலை என்பது ஒரு மனிதனை இந்த உலகத்திலிருந்து நீக்குவது. அவனது வாழ்கால மிச்சத்தை அவனிடமிருந்து பறித்துக் கொள்வது. இந்த உலகத்தில் யாரெல்லாம் இருக்கக்கூடாது என்பதை கருணையோடு ஒருபோதும் இயற்கை தீர்மானிப்பதில்லை. இதற்கு மேல் இருக்கமுடியாது எனும் நிலையில் இயற்கை, மரணத்தை ஒரு பரிசைப்போல எல்லோர்க்கும் வழங்குவதில்லை. நோய் விபத்து தற்கொலை சட்டம் வழங்குகிற தண்டனை இவற்றுக்கிடையே சக மனிதனால் அல்லது சக மனிதர்களால் கொல்லப்படுதல் இருப்பதிலேயே வன்மம் மிகுந்த மரணவழியாகிறது.

யார் வாளைப் பாய்ச்சுவது என்பதைவிட யார் சம்பவ இடத்துக்கு வரவழைப்பது என்பது நுட்பமாகப் பார்க்க வேண்டியது. எதிரிகளை அருகருகே வரச்செய்வதைக் காட்டிலும் வாள் நுனி ஒன்றும் கொடுமையானதல்ல. எப்படி நிகழ்ந்தது என்பதிலிருந்துதான் கொலையின் கதை தொடங்குகிறது. யார் சொல்லி யாரை நம்பி யார் அழைத்துச் சென்று கொலையாகும் இடத்துக்குச் சென்று சேர்ந்தான் சம்மந்தப்பட்டவன் என்பது காலமெல்லாம் வெவ்வேறு தரப்புகளால் மற்றும் மனிதர்களால் நினைவில் வைத்துக்கொண்டே இருக்கப்படுவதான முள்கொத்து. அதுவெறும் நிகழ்வின் உப குறிப்பல்ல.

சுப்ரமணியபுரத்தின் கதை மேலோட்டமாகப் பார்த்தால் பழியெடுத்தலின் கதைதான் என்றாலும் இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை அது பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தன. கதையின் வழங்கல் விதம் முதல் காரணம் காலம் என்பதைக் கதையின் ஒரு பாத்திரமாகவே ஆக்கியது இயக்கத்தின் புத்திசாலித் தனம் என்பதை மீறிக் கதையின் பிடிக்குள் காண்பவரை வரவழைத்து லயிக்கச் செய்துவிட்ட சாமர்த்தியமும்கூட. 1980 ஆமாண்டு தொடங்கும் கதைக்கு முன்பாக இந்தக் கதையின் நிகழ்காலமான 2008ஆமாண்டு ஜெயில் வாசலில் ரிலீசாகி வெளியே வரும் ஒருவனை கொட்டும் மழையில் வாசல் தாண்டிச் சாலையில் கால்வைக்கும் கணத்தில் கத்தியால் குத்துகிறான் ஒருவன் அவனுடன் இருக்கிறான் இன்னொருவன். குத்தியதும் குத்துப்பட்டதும் யார் என்பதெதுவும் தெரிவதற்காகும் முன்
1980 ஆமாண்டு என்று காலக்குறிப்போடு பழைய கதைக்குள் நுழைகிறது கதை.

பரமன், அழகர், காசி, சுப்ரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள். முன்னாள் கவுன்ஸிலர் சோமு அவரது தம்பி கனகு அடிக்கடி இவர்களுக்கு உதவுகிறாற்போல் போலீஸூக்குப் பசங்களைப் பற்றிப் புகாரும் அளித்து வருகிற இரட்டைநிலைக்காரன். கனகுவின் அண்ணன் மகள் துளசியும் அழகரும் காதலாகின்றனர். அண்ணனுக்கு வரவேண்டிய மாவட்டச் செயலாளர் பதவி இன்னொருவருக்குச் செல்லவே ஆத்திரமடையும் கனகு அழகரையும் பரமனையும் கொம்புசீவி விடுகிறான். ஏரியா நன்மைக்காக புதிய செயலாளரைக் கொன்றுவிடுமாறு தூபம் போடுகிறான். துளசி மீதான ஈர்ப்பும் ஒரு காரணியாக கனகுவிடம் நற்பெயர் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அதனை ஏற்கும் அழகருக்காக பரமனும் சேர்ந்து மாவட்டச் செயலாளரைக் கொன்றுவிடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் முன் திட்டமிட்டபடி சரணடைகின்றனர்.

கனகு தன் இரட்டை வேடத்தை தொடங்குகிறான். வெளிப்படையாக அவர்களை ஆதரித்தால் அரசியல் வாழ்வு கெட்டுப்போகும் என்று ஒதுங்குவதாக முடிவெடுத்தால்கூட மறைமுகமாக இருவருக்கும் உதவுவான் என நண்பர்கள் நம்புவதும் கெடுகிறது. சுயநலக் கனகு தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்றாற்போல் உருவிக் கொண்டு கழன்றுவிடுகிறான். கையறு நிலையில் தவிக்கிறார்கள் நண்பர்கள். ஜாமீனில் வெளியே எடுக்க உள்ளே ஜெயிலில் கிடைக்கும் புதிய நண்பர் ஒருவர் உதவுகிறார். நண்பர்கள் நன்றியோடு வெளியே வருகிறார்கள். தேடிச் சென்று வெட்டினால்தான் ஆச்சு எனக் கனகுமீது வெறியாகிறார்கள். கனகு தப்பி விடுகிறான். தங்களை ஜாமீனில் எடுத்த நண்பருக்காக அவரது பகையாளியைக் கொல்கிறார்கள். கனகுவைக் கொல்வதற்காக அலையும் அதே சமயம் துளசியைச் சந்திப்பதையும் தொடர்கிறான் அழகர். கனகுவின் ஆட்களின் கையிலகப்பட்டு சாவின் விளிம்புவரை சென்று தப்பிக்கிறான் அழகர். தான் உயிர் வாழ்வதற்கான துருப்புச்சீட்டாகத் தன் அண்ணன் மகள் துளசியை அனுப்புகிறான் கனகு. காதலியை நம்பி வரச்சொன்ன இடத்துக்குச் செல்லும் அழகரைக் கனகுவும் ஆட்களும் கொல்கிறார்கள். சூழ்நிலையின் பிடியிலகப்பட்ட துளசி அழுது வெறித்தபடி சித்தப்பாவோடு செல்கிறாள்.

பரமன் கனகுவை சந்தர்ப்பம் பார்த்து கொல்கிறான். அவனது தலையை வெட்டி எடுத்துக்கொண்டு சென்று அழகர் கொல்லப்பட்ட இடத்தில் வைக்கிறான். தன்னை அரும்பாடுபட்டு சந்திக்க வரும் காசியிடம் எப்படி அழகர் கொல்லப்பட்டான் என்பதையும் கனகுவைத் தான் கொன்றதையும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனோடு சோமுவின் ஆட்கள் வந்திருப்பதை அறிகிறான். காசி அங்கிருந்து சென்ற பிற்பாடு பரமன் கொல்லப்படுகிறான்.

கதை தீர்ந்து போய் மறுபடி 2008க்குள் எழுகிறது. சிறைவாசலில் குத்திச் சாய்க்கப்பட்டவன் காசி. தண்டனைக் காலம் முடிந்து அவன் வெளியே வரும் வரை காத்திருந்த டும்கானும் இன்னொரு நண்பனும் தங்கள் நண்பன் பரமனுக்காகப் பழியெடுக்கச் செருகிய கத்திதான் அது. பின்னரும் உயிருக்குப் போராடும் காசியின் மூக்கிலிருந்து உயிர்க்காற்றுக்குழாயைப் பறித்து அவன் இறப்பதைப் பார்த்து உறுதி செய்தபிறகே ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறுகிறான் டும்கான்.

பழியின் சரித்திரத்தின் களமாக உறைகிறது சுப்ரமணியபுரம். பழிவிதைகள் கொலைமலர்களைப் பூத்துத் தருவதன் ஆவேசவனம் இந்தப் படம்.ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்துக்கான பின்னணி இசையை நின்று ஒலிக்கும் மென் கோர்வைகளின் சரளியாகவே உண்டாக்கினார். எல்லா இடத்திலும் சற்றே நிதானிக்கப்பட்ட இசைத்தல்கள் ஒருவிதமான மேற்கத்திய மெல்லியல் உணர்வை நிச்சயித்துத் தந்தன. ‘காதல் சிலுவையில் அறைந்தாய் என்னை’ பாடல் ஒரு துன்பியல் நட்சத்திரம். ஷங்கர் மகாதேவனின் அரிய மற்றும் காத்திரமான குரல்வகைமைக்கு நூறு சதவீதம் பொருந்திய பாடலானது. ‘கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்’ எண்பதுகளின் காதல் பாடல்களை நினைவுகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ‘தலையைக் குனியும் தாமரையே’ இவ்விரண்டு பாடல்களையும் அதிகம் நெருக்கமாக உணரச்செய்த மீவுருத் தன்மையோடு உண்டாகியிருந்தது கண்கள் இரண்டால் பாடல். பொய்யின் மேனிமுழுவதுமிருக்கக் கூடிய செதில்களைச் சுரண்டி எடுத்துவிட்டு நம்பவே முடியாத மெய்மையின் நிறத்தை ஏற்றிவிடுவதன் மூலமாக இல்லா மீன் ஒன்றை மெய்யென்று நம்பச் செய்தாற்போல் அரிதினும் அரிய பாடலொன்றை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வஸந்தன்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் ரெம்போனின் கலை இயக்கமும் ராஜாமுகமதுவின் தொகுப்பும் மெச்சத்தக்க வகையில் முன் எப்போதோ வாழ்வில் கடந்துவிட்ட காலமென்னும் ரயிலை ஞாபகக் கயிற்றால் பிணைத்துப் பின்னோக்கி இழுத்து வந்து மனக்கண் முன் நிறுத்தின.

தன் முதல் படமாக இதனை இயக்கித் தயாரித்து பரமனாக நடிக்கவும் செய்தார் எம்.சசிக்குமார்.

அழிதலை நோக்கித் திருப்புவதற்கு வாழ்வின் மாபெரிய சம்பவங்கள் அல்லது மானுட எத்தனங்கள்தான் தேவை என்று மீண்டும் மீண்டும் பதியவைத்துக் கொண்டிருந்த சினிமா கதைகளுக்கு மத்தியில் மீனுடலின் துண்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய சிறுமுள் நுனிகூடப்போதும் என்பதான கதானுபவத்தை முன்வைத்த வகையில் முக்கியமான திரைப்படமாகிறது சுப்ரமணியபுரம்.

கொஞ்சமே கொஞ்சம் கனகுவின் சூது வினயத்தைக் குறித்த முன் யோசனை இருந்திருக்குமேயானால் பரமனின் அறிவுறுத்தலை அழகர் ஏற்றிருந்தானேயானால் சுப்ரமணியபுரத்தின் கதை நகர்ந்து விரியும் சாலைகள் எல்லாமும் மாற்றப்பட்டு மொத்தக் கதையுமே மாறி இருக்கும். அரசியல் என்பது உச்சபட்ச நிராகரித்தலுக்கும் எள்ளலுக்கும் உரித்தானது என்பதை முன்வைக்கும் கோயில் ட்ரஸ்டியின் சொற்களில் தெறிக்கும் வன்மமும்தானே வலியச் சென்று செலவை ஏற்கும் சோமுவின் நைச்சியமும் எப்படியாவது தன் அண்ணன் நிலையை உயர்த்திவிட வேண்டுமென்று துடிக்கும் கனகுவின் சுயநலமும் காதலியின் உறவினன் தேடி வந்து தன்னிடம் உதவி கேட்பதைத் தனது வாழ்வின் நகர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகவே உணரத் தலைப்படும் அழகரும் தனக்காக ஒரு கொலை செய்யுமாறு வேண்டும் ஜெயில் நண்பனின் முகத்துக்கு நேரான கோரிக்கையும் அழகரின் மரணத்துக்குத்தான் காரணமாகப் போகிறோம் என்று தெரிந்தும் குடும்பத்துக்காக அதனைச் செய்தேவிடும் துளசியின் இயலாமையைத் தாண்டிய துரோகமும் அழகருக்காகப் பழியெடுக்கும் பரமனின் வன்மமும் பரமனைக் காட்டிக் கொடுத்துத்தான் லாபமடைய நினைக்கும் காசியின் காட்டிக்கொடுத்தலும் கடைசிவரை நட்புக்கான கொலைகள் தொடர்கதை என்று அறிவித்தபடி கதையை பூர்த்தி செய்யும் டும்கானுமாக இந்தப் படத்துக்கு முன்னும் பின்னுமாய் மதுரை என்ற பெருநகரத்தின் காலம் மாந்தர் கதை இவற்றிலெல்லாம் பின்னிப் பிணையப்பட்ட நம்பமுடியாத அதீதங்களுக்கு நடுவே தனித்த நம்பக மலராய்ப் பொன்னை நிகர்த்து ஆர்ப்பரிக்கிறது சுப்ரமணியபுரம். இந்தக் கதையின் உபகதைகளோடு பெருகும் நகைச்சுவைக் கிளைகள் அத்தனையும்கூட சினிமாவில் காணவாய்த்த அதி உன்னதத் தனி அனுபவங்களே.

சுப்ரமணியபுரம்: வன்மத்தின் வழிபாடு.

முந்தைய தொடர்: https://bit.ly/2M1KIur