வெறுமனே திறமையை மட்டும் கொண்டு உங்களால் வென்றுவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? கனவான்களே.. வெறுமனே திறமையை மாத்திரம் வைத்துக் கொண்டு வெல்வதற்குத் தேவையான திறமை உங்களிடம் கிடையாது.

(ஹெர்ப் ப்ரூக்ஸ் எனும் கோச் கதாபாத்திரமாக கர்ட் ரஸ்ஸெல் miracle 2004 திரைப்படத்தில்) எழுதியவர் Eric Guggenheim

திரைப்படம் எனும் கலை பிற கலைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகிறது. அவற்றில் முதன்மையானது திரைப்படக்கலை மற்ற பல கலைகளின் சங்கமமாக பலவற்றின் கலந்தோங்குகிற பதாகையாக விளங்குவது. இன்னொரு வேறுபாடு என்னவென்றால் திரைப்படமும் காலமும் பிறகலைகளைப் போலன்றிப் பலவிதங்களில் பின்னிப் பிணைந்து ஒழுகுவது. தொழில்நுட்பங்கள் தொடங்கி இசை, கலை, இயக்கம், கதை தொடங்கும் விதம் சண்டைக்காட்சிகள் பாடல்கள் என்றாகிப் பயன்படுத்தப்படுகிற உத்திகள் வரைக்கும் காலத்தோடு இயைந்து பல விடுபடுதல்களும் கைக்கொளல்களுமாகத் தன்னைப் புத்துயிர்த்தபடி விரைந்தோடுகிற மின்னல் ரயில்தான் திரைப்படமென்பது. நேற்றிருந்த ஒன்று இன்று அறவே இல்லை என்பது எதற்குப் பொருத்தமோ திரைப்படத்தில் சாலப் பொருந்தும். இத்தனைக்கும் மேலாக திரைப்படங்களைப் பொறுத்தவரை கைவிடப்பட்ட ஒன்று பெரும் கால இடைவெளிக்கப்பால் மீண்டும் செல்வாக்குப் பெறுவதென்பது காலம் முன்வைத்தால் ஒப்புக்கொள்ளப்படுமே ஒழிய நேரடியாக நிகழ்வதில்லை.

1960ஆம் ஆண்டுகளில் எடுக்கப்படக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கான திரைக்கதையை எடுத்து பத்து ஆண்டுகள் கழித்துப் படமாக்கினாலேகூட ரசிகர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படக்கூடிய இடரேற்பு உண்டு. ஆனால் அதையே 2016 ஆமாண்டு திரைப்படமாக்கி அந்த வருடத்தின் மாபெரிய வெற்றிப் படமாக ஆக்குவதென்பது மந்திரத்தால் மாத்திரமே சாத்தியமாகக்கூடிய மாங்கனிக்கு ஒப்பான மாயம். ஆனால் நிசத்தில் அதுதான் நிகழ்ந்தது. அப்படியான வருகையும் கொண்டாடப்பட்ட வெற்றியுமாக இந்தியத் திரைப்பட வரலாற்றின் மாபெரும் செல்வாக்குப் பெற்ற செண்டிமெண்டல் சினிமாவாக உருவெடுத்தது சசி இயக்கிய பிச்சைக்காரன்.

அன்னை என்பது உலகளாவிய மனித மையம். மாபெரும் செல்வந்தன் ஒருவன் தன் அன்னை இனிப் பிழைக்கவே மாட்டாள் என்றான பிறகு தெய்வத்திடம் அன்னையைக் காப்பாற்றித் தா என்று வேண்டிக் கொண்டு தன் செல்வந்தத்தை பாம்பு சட்டையை உரிக்கிறாற்போல் உரித்தெடுத்து எறிகிறான். 48 நாட்கள் யாசகம் எடுத்து தன் உணவுக்குரிய பணத்தைத் தவிர மீதமனைத்தையும் கோயில் உண்டியல்களில் சேர்ப்பித்தபடி யாதொரு வசதியையும் கொள்ளாமல் வறியவர்களோடு தங்கி வாழ்ந்து கொண்ட விரதத்தை முடிக்க வேண்டும் என்பதில் மனித சதிகள் உறவுக்காரர்களின் சூழ்ச்சிகள் பகை முரண் காவல் துறையின் அதிகாரம் எனப் பல குறுக்கீடுகள் வருகின்றன. அவனை உற்று நோக்கி உணர்வுரீதியாக உடன்வரும் மனம் கவர் தோழியிடத்திலும் தன் உண்மையை ஒரு சொல்லாகக்கூட சொல்வதன் மூலம் விரதகாலத்தில் தன் பழைய செல்வந்தத்தை மீட்டெடுக்க விரும்பாத அருள் புதிய பிறப்பெடுத்தாற்போல் பிடிவாதத்தோடு வேண்டுதலை நிறைவேற்றுகிறான்.

வேண்டுதலை முடிக்கும் நேரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து அருளை மிரட்டுவார். அப்போது அவர் கையைப் பற்றிக் கெஞ்சும் அருளிடம் பிச்சைக்காரன் நீ என் கையைப் பிடிக்கிறியா என்று அடிப்பார். பொறுமையாக ஒவ்வொரு நாணயமாக எதுவும் சிதறிவிடாமல் உண்டியலில் போட்டு விரதத்தை முடித்த அடுத்த கணம் அருள் இருக்கும் இடத்துக்கு மாபெரிய செல்வச்செழிப்பு மிளிரும் கேரவன் எனப்படுகிற உற்சாகப் பேருந்து வந்து சேரும். அது ஒரு நடமாடும் ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான கட்டமைப்பை கொண்டது. அதனுள் நுழைந்து குளித்துத் தன் பகட்டாடைகள் அணிந்து மீண்டும் மில்லியனர் அருள் செல்வனாகத் திரும்பும்போது அதே இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்டு அருளின் கையைப் பற்றும்போது நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்திருக்கேன். அதெல்லாம் எனக்கு அருவெறுப்பா இல்லை. இந்த நிமிஷம் நான் ஒரு பணக்காரனா இருக்குறது எனக்கு அருவெறுப்பா இருக்குது என்பான்.

படம் முடிவில் அம்மா பிழைத்து வருகிறாள். அவளுக்குத் தன் மகன் பட்ட கஷ்டம் தெரியவே தெரியாது. அவளோ போகிற போக்கில் அவனுக்கொரு அறிவுரை சொல்கிறாள் ஏனப்பா உங்கிட்டே யாசகம் கேக்குறவங்களை காக்க வைக்கிறே..? இருந்தா குடு இல்லைன்னா உடனே மறுத்திட்டு அனுப்பிடு. காக்க வைக்கிறது தப்பு அருளு… ஒரு நா அவங்க படுற கஷ்டத்தை நம்மால படமுடியுமா சொல்லு என்கிறாள் அதை ஒப்புக்கொள்கிறவனாய் வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டு உடன் செல்கிறான் அருள். இறைவனுக்கும் அவனுக்குமான டீல் அவனது ப்ரார்த்தனை. அதுவும் நிறைவேறிப் பல நாட்கள் ஆன பிறகும் அதனை யாரிடமும் ஒரு சொல்லாய்க்கூட வெளித்திறக்காத அளவுக்கு அருள் என்னும் மகானைவிடச் சிறந்த நன்மகன் வேடத்தில் மிளிர்ந்தார் விஜய் ஆண்டனி.

தொழில் முறை இசை அமைப்பாளராகத் திரை உலகத்தினுள் நுழைந்த விஜய், மாயூரம் வேத நாயகம் பரம்பரையில் ஒரு வாரிசு. அண்டர் ப்ளே நடிப்பின் உன்னதமான நடிப்பாற்றலைத் தன் படங்களில் தொடர்ந்து தந்து வரும் நடிகராகவும் கவனம் பெற்றவர். ஏக்நாத் ராஜ் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடிய நூறு சாமிகள் இருந்தாலும் பாடலானது பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வுகளுக்குள் அவர்தம் உணர்விழைகளில் சிலவற்றை மனதாழத்தில் எப்போதும் தாலாட்டுகிற பெரும்ப்ரியமாகவே மாறியது.

சசி மனித உணர்வுகளைக் கொண்டு மெல்லிய நூலாம்படைகளைப் பின்ன விழையும் கலைச் சிலந்தி. ஆனால் எத்தனையோ கற்சித்திரங்கள் சின்னாபின்னமான பிற்பாடும் சசி போன்றவர்கள் ஏற்படுத்திவிடுகிற ஞாபகவலைகள் அப்படியே அந்த இடத்திலேயே உறைந்து நிரந்தரித்து விடுவது கலையின் பேரியல்பு.

பிச்சைக்காரன் கடந்துவிட்ட ரயிலைப் பின்னோக்கி அழைத்து வந்து ஏறினாற் போன்ற அதிசயம். நம்ப முடியாத அற்புதம்.

முந்தைய தொடர்: https://bit.ly/2xZuIkq