திரைப்பட இயக்குனராவதற்கு நீங்கள் தலைமையேற்று பிறரை வழி நடத்த வேண்டும்.உங்கள விருப்பத்தினை உளவெறியுடன் முயல வேண்டும் பெரும்பாலான மக்கள் எப்போதும் எளிய வழிகளையே விரும்புகிறார்கள் நீங்கள் மிகுந்த பிரயத்தனத்தை செலவழித்தே வித்யாசமான மற்றும் அபூர்வமானவற்றை அடைய வேண்டியிருக்கிறது

-டேனி போயல்

நாடறிந்த மயிலின் காவியக் கதைதான் பதினாறு வயதினிலே ஸ்ரீதர், பாலச்சந்தர் இருவருக்கும் அப்பால் விளைந்த இயக்கப் பேருரு பாரதிராஜா திரைப்படம் எனும் கலையின் வாயிலாக மண்ணையும் மக்களையும் பிரதிபலித்ததோடு அல்லாமல் மண்ணை நோக்கிப் படமாக்கலைத் திருப்பிய இயக்குனர். அதுவரைக்கும் ஏற்படுத்தப்பட்டு புனைந்துருவாக்கப்பட்ட கிராமம் எனும் நிலத்தை ஸெட் ப்ராபர்டிகளின் போலிப் பதாகைகளை அகற்றி எறிந்து விட்டு நிசமான கிராமத்துக்குக் கேமிராவைக் கொண்டு சென்றவர் பாரதிராஜா.

அவரது மனிதர்கள் எளிமையின் சாட்சியத்தை பறைசாற்றினார்கள் எல்லாருக்கும் எல்லா இடங்களிலும் காண வாய்த்தார்கள் நிகழ்ந்த கதைகளைக் கலந்து பிசைந்து தன் திரைக்கதையை உருவாக்கினார் பாரதி ராஜா. தமிழ் சினிமாவில் அதிகக் கிளைத்தலைத் தன்னகத்தே கொண்ட மாபெரிய இயக்குனர் அவர். அதிகம் அடுத்தவர்களின் கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இயக்குனர் அவர். இயக்கம் என்பது தனது திரைமொழி என்பதை உரக்கச் சொன்ன படைப்பாளி அவர். பல்வேறு வகைப்பாடுகளிலான படங்களை உருவாக்கிய பாரதிராஜா பெருவெற்றியையும் உலர்தோல்விகளையும் ஒன்றெனப் பாவித்து அடுத்தடுத்த படங்களுக்குள் நகர்ந்தவர். தன் படைப்பின் பெருமையைப் பாத்திரமாக்கலின் கனத்தை முந்தைய வெற்றிகளின் இனிப்பைத் தனக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அவர் உருவாக்கிய பல படங்கள் இந்தியத் திரைவரிசையில் முக்கிய இடம் பிடிக்கின்றன. பாரதிராஜா இந்தியாவின் மாபெரும் திரைமனிதர்களின் ஒருவர். தமிழின் முதன்மைக் கலைமுகம்.

பாரதிராஜாவின் படங்கள் தைரியமான முடிவுகளைக் கொண்டிருந்தன. தீர்க்கமான வெட்டுக்களையே தன் படமுடிவுகளாக அவர் முன்வைத்தார் மெல்லிய சலனங்களையும் ஊடாட்டங்களையும் மனித மனதில் எளிதாக உருவாக வாய்ப்புள்ள மனக்குழப்பங்களையும் கதாமுடிவுகளாக அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை. மாறாக மரணம் பிரிவாற்றாமை களப்பலி களவுமணமேகி ஊர்தாண்டுதல் சிறைவாசம் என்று மிகவும் ஆணித்தரமான தீர்மானங்களைத் தன் படமுடிவுகளாக முன்வைத்தார். அவருடைய திரைப்படங்களில் மனிதர்கள் வாழ்ந்தார்கள், மடிந்தார்கள் கலைந்தும் தனித்தும் தெரிந்தார்கள். நிசம் என்பதன் புகைப்பட ஆல்பங்களைப் போலத் தன் படங்களாய் உண்டாக்கினார் பாரதிராஜா.

பாரதிராஜாவின் திரைப்பரம்பரை பெரியது. மாபெரிய கூட்டுக்குடித்தனத்தின் கர்த்தாவைப் போல அவரை வழிபடுகிறவர்கள் சினிமாவெங்கும் நிரம்பி இருக்கின்றனர். கிழக்கே போகும் ரயில், நிழல்கள், சிகப்புரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை, முதல்மரியாதை, கடல்பூக்கள், கிழக்குச்சீமையிலே, கடலோரக்கவிதைகள் போன்ற பல படங்கள் காலம் கடந்து ரசிக்கப்படுபவை.

பதினாறு வயதினிலே பாரதிராஜாவின் முதல் படம். முதல் படத்தின் மூலமாய்க் கவனம் ஈர்த்தவர்களில் பாரதிராஜாவுக்குத் தான் முதலிடம். தன் படத்திற்கு முன்பின்னாய் அவர் தமிழ் சினிமாவின் போக்கையே இரண்டாய்ப் பகுத்தார். இளையராஜாவுடைய இசை பாரதிராஜாவுக்கு விடாமழையாக உதவிற்று. பாடல்களைக் கொண்டே தன் பாதித் தோரணத்தை மெய்ப்பித்து விடுகிற மாயவாதியாகவே பாரதிராஜா திகழ்ந்தார். வைரமுத்துவை திரைக்கு எழுதச் செய்தவர் பாரதிராஜா.

பொம்மலாட்டம் என்ற படம் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வெளியான பாரதிராஜா படம் புதியவர்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருந்தது அவரது திரைவசீகரத்தை எடுத்துக்காட்டியது.

நாடறிந்த மயிலின் கதை 16 வயதினிலே

குருவம்மாளின் மகள் மயில். வயது பதினாறு. குருவம்மாளின் பராமரிப்பை எப்போதும் அண்டிப்பிழைக்கும் ஆதரவற்ற சப்பாணி ஒரு வெள்ளந்தி. அவனது சின்னஞ்சிறிய உலகத்தின் மகாதேவி மயில்தான். அவள் மீது காதல் என்று வகைப்படுத்தி அறியமுடியாத பேரன்பை கொண்டவனாக வாழ்பவன் கோபால். நிறைய படிக்க வேண்டும் என்பதும் ஆசிரியைக்கான பயிற்சியை வெற்றிகரமாகத் தேறி வேலையை அடைந்து ஒரு பண்பட்ட படித்த நளினமான மனிதனுக்கு மனைவியாக வேண்டும் என்பதுதான் மயில் தன் மனதில் கொண்டிருக்கும் கனவு.

பரட்டை அதே ஊரைச் சேர்ந்த போக்கிரி. தன் போக்கில் வாழ்பவன் எல்லோரையும் வம்பிழுப்பவன் பொறுக்கி என்று பெயர் பெற்றவன். அவனுக்கு மயில் மீது ஒரு கண் அந்த ஊருக்கு வரும் பிராணிகள் நல மருத்துவர் சத்யஜித் மயில் மீது ஆர்வம் காட்டுகிறார். மயில் அவரது நாட்டத்தைக் காதலென்று நம்புகிறாள். அவளுக்கு டாக்டரை மிகவும் பிடிக்கிறது. அவரோடு சென்னை செல்ல வாய்க்கிறது. மயிலுக்கு திருமணத்துக்கு முன் தன்னை தொட அனுமதிக்காத மயில் மீது அதிருப்தி கொள்ளும் சத்யஜித் அதிலிருந்து மெல்ல அவளிடம் இருந்து விலகி விடுகிறார். தன் சொந்த ஊருக்குச் சென்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடுகளை முன்னெடுக்கிறார் சத்யஜித். தன் காதலை கைவிட வேண்டாம் என்று மயில் அவரிடம் கெஞ்சுகிறாள் மயில். உன்னை எப்போதும் நான் காதலித்ததே இல்லை உன் உடல் மீதுதான் எனக்கு நாட்டம் என்று அவளை புறக்கணித்துவிட்டு செல்லுகிறார் டாக்டர்.

எதுவும் செய்ய முயலாத ஏழை தாயான குருவம்மா மயிலுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கிறார். மயிலால் அவமானப்படுத்தப்பட்ட பரட்டை மயிலைப் பற்றிப் பல கட்டுக்கதைகளைக் கிளப்பி விடுகிறான். திருமண ஏற்பாடுகள் நிற்கின்றன. தங்கள் குடும்பம் மீது சுமத்தப்படும் அவமானத்தை தாங்க இயலாமல் குருவம்மா மரணிக்கிறாள்.

கோபால் மயில் மீது கரிசனம் காட்டுகிறான். அவளைத் துக்கத்திலிருந்து மாற்றி எப்படியாவது பழைய மலர்ச்சிக்கு கொண்டுவர முயலுகிறான். மெல்லமெல்ல கோபாலை ஒரு மனிதனாக உருவாக்க முனைகிறாள் மயில். அவனுடைய பழக்கவழக்கங்களை உடல்மொழியை பேச்சை எனப் பலவற்றையும் மாற்றுகிறாள். யாராவது உன்னை சப்பாணி என்று கூப்பிட்டால் அடி, உன் பெயர் கோபாலகிருஷ்ணன் இனி அப்படித்தான் உன்னை யாராயிருந்தாலும் அழைக்க வேண்டும் என்கிறாள். பரட்டை சப்பாணி என்று அழைக்கும்போது அதேபோல சொல்லுகிறான் கோபால் ஆத்திரத்தில் பரட்டை கோபாலகிருஷ்ணனைத் தாக்குகிறான் மயில் அவனைக் காப்பாற்றி பரட்டையைக் காறி உமிழ்கிறாள்.

கோபாலைக் கல்யாணம் செய்துகொள்ள மயில் முடிவெடுக்கிறாள். திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர கோபாலை அருகில் அமைந்த நகரத்துக்கு அனுப்புகிறாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மயில் வீட்டுக்குச் செல்லும் பரட்டை அவளை உடல்ரீதியாகத் துன்புறுத்தி வீழ்த்த முயலுகிறான். வீடு திரும்புகிற கோபால் விட்டுவிடும்படி பரட்டையைக் கெஞ்சுகிறான். அதனை பொருட்படுத்தாத பரட்டையை ஆத்திரம் தீரக் கல்லால் தாக்கிக் கொல்கிறான். கோபாலன் சிறையிலிருந்து வரும் நாளுக்காகக் காத்திருக்கிறாள் மயில்.

ஸ்ரீதேவி மறக்க முடியாத பூமுகமயிலாளாக தோன்றினார். ரஜினி மனக்குரலற்ற பரட்டையாக வந்தார். கமல் சப்பாணி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு அதை ஆட்சேபித்துத் தன்னை கோபாலகிருஷ்ணனாக நிலை நிறுத்திக்கொண்ட கதாபாத்திரத்தை வாழ்ந்து காட்டினார். குருவம்மாவாக காந்திமதியும் பரட்டையின் உடனாளியாக கவுண்டமணியும் டாக்டராக சத்யஜித்தும் கச்சிதமாய் தோன்றியபடம் 16 வயதினிலே. செந்தூரப் பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே தமிழரின் மனமன்றத் தென்றல்கானமாயிற்று. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா, மஞ்சக்குளிச்சி அள்ளிமுடிச்சி பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் வகையறாக்களாகின. பின்னணி இசையும் முன்பிலா உக்கிரத்தோடு நிகழ்ந்தது.

இந்தப் படம் முன்வைத்த பேரன்பும் புரிதலும் காதலுக்கான புதிய இலக்கணத்தை வகுத்தன. இன்றளவும் ஒரு கலாச்சாரச் செவ்வியல் பிம்பமாகக் கொண்டாடப் படுகிறது

பதினாறு வயதினிலே: பேரன்பின் பெருமொழி

முந்தைய தொடர்: http://bit.ly/2z1QHrq