திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

படத்தின் தொடக்கமே ஆங்கிலப் படங்களுக்கு இணையான விறுவிறுப்போடு அமைந்திருக்கும். நகைக்கடை கண்ணாடியை உடைத்து ஒரே ஒரு நெக்லேஸை மட்டும் எடுக்கும் பாலு துரத்தப்படும்போது யாருமறியாமல் அவனைக் காப்பாற்றுகிறது ஒரு உருவம். அந்த உருவத்தை பார்த்துவிடலாம் என்று தீப்பெட்டி எடுத்து உரசுகிறான் பாலு. அந்த ஒளியை ஊதி அணைக்கும் அவ்வுருவம்  “இருட்டிலே ஏற்பட்ட சினேகம் இருட்டிலேயே இருக்கட்டும். உன் திருட்டைப் பத்தி நான் யாருட்டயும் சொல்லமாட்டேன். உன்னைத் துரத்திட்டு வந்தவங்க போயிட்டாங்க. இனிமே நீ போகலாம்” என்று வழியனுப்புகிறது. பாலு அங்கேயிருந்து மெல்ல நகர்ந்து காணாமற் போகிறான்.

இப்போது வெளிச்சம் அந்த இருள்முகம் மீது பாய்கிறது. அங்கே நிற்பவன் துளசிங்கம் (எம்.என்.நம்பியார்.) அதன் கையில் பாலு திருடி வந்த நெக்லேஸ்
நம்மிடம் இப்படிச் சொல்கிறான் துளசிங்கம் “அவன் திருட்டுக்கு ராஜான்னா நான் திருட்டுக்கு சக்கரவர்த்தி” இதிலிருந்து கிளைத்துத்தான் கதைபெருகுகிறது.

பாலு வேலை கிடைக்காததால் தன் தாயைப் பேணவேண்டுமே என்ற நோக்கத்தில் திருடனாகிறான். திருட்டு என்பதன் யாதொரு விளைவையும் அறியாமல் அவ்வப்போது திருட்டுகளில் ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் தபாலாபீஸில் பணம் கட்ட வந்திருக்கும் ராஜூவிடமிருந்து பணத்தைத் திருடுகிறான். பணம் பறிபோன அதிர்ச்சியில் ராஜூ காலமாகிறான். தன் செயலின் விளைவை அறிந்து மனம் நொறுங்கும் பாலு ராஜூவின் வீட்டைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டை அடகிலிருந்து மீட்கதான் கொள்ளையடித்த பணத்தைத் தந்து உதவுகிறான்.

ராஜூவின் முதலாளி பொன்னம்பலத்தின் இரண்டாவது முகம் பர்மாவில் தேடப்படுகிற பெருங்கொள்ளையன் துளசிங்கம் என்பது யாருக்கும் தெரியாதது. அவனிடமிருந்து ராஜூ எடுத்துச்சென்று பாலுவிடம் களவுகொடுத்த பணம்கூட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விள்ளல் தான். இது தெரியவரும்போது போலீஸ் பாலுவைத் தேடுகிறது. பொன்னம்பலத்தின் அண்ணன் மகள் பாலு மீது ஒருதலைப் பித்தாகிறாள். அவனையே மணக்க வேண்டுமென்று பல சாகசங்களைச் செய்து பார்க்கிறாள். எல்லாமே பொய்க்கின்றன. பொன்னம்பலத்துக்கும் பிரத்யேக நோக்கங்கள் இருக்கின்றன. இருவருமே எப்படியாவது பாலுவை அவளுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்று தீராப் பேராவலோடு திரிகின்றனர்.

ஒரு கட்டத்தில் பாலு காவலர்களுக்குத் தப்பி ஒளிந்தபடி நிசத் திருடனைக் கண்டுபிடிக்க முனைகிறான். அவனது உற்ற நண்பன் ஜம்பு அவனுக்கு உதவுகிறான். ராஜூவின் தங்கை சாவித்ரி பாலுமீது தன் உயிரையே வைத்திருக்கிறாள். முதலில் பாலுவை நம்பாத அவள் பிற்பாடு நிசம் தெரிந்து தெளிகிறாள். கடைசியில் குற்றவாளி பொன்னம்பலத்தைக் காவலர்கள் கைது செய்கிறார்கள். பரிசும் பாராட்டும் தந்து பாலுவை கவுரவிக்கும் அதே சமயத்தில் பழைய குற்றங்களுக்காக அவனுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. தன்னைப் புடம்போடுவதற்கான நற்சந்தர்ப்பமென்று எண்ணி மகிழ்ச்சியோடு அதனை ஏற்கிறான் பாலு.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ‘திருடாதே பாப்பா திருடாதே’ கடந்த நூற்றாண்டு உலகத்துக்கு அளித்த நன்மறைகளில் ஒன்று. திரைப்பாடல் என்பதனைத் தாண்டிப் பள்ளிகளில் பாடமாக்கப்படவேண்டிய ஒன்று. அதன் தத்துவ அலசலும் ஏன் திருடக்கூடாது என்பதற்காக அவர் தரும் விளக்கங்களும் கடைசியில் அவர் முன்வைக்கிற தீர்வுகளுமாக இப்பாடல் திறந்து தருகிற ஞானம் பெரியது.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசை மேதமைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருடாதே படத்தைச் சொல்ல முடியும். படத்தின் டைட்டிலின் பொழுது அவர் இசைத்துத் தரும் கோர்வை ரசிக மனங்களை ஒரு வித்யாசமான அனுபவத்தினை நோக்கித் திருப்பி வைக்கிறது. படமெங்கும் பல இடங்களில் இடைமௌனத்தைத் தன் அதீதமான ஒப்பில்லா இசைக்கோர்வைகளின் மூலமாக எஸ்.எம்.எஸ். வழங்கிய அனுபவம் அலாதியானது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் சரோஜாதேவியை அடைத்து வைத்திருப்பார் நம்பியார். அங்கே இருந்து தப்புவதற்காக காவலுக்கு இருக்கும் குண்டு என்பவனை நைச்சியமாகப் பேசி ரேடியோவை ஒலிக்கச் செய்வார் சரோஜாதேவி. அப்போது ஒலிக்கும் இசையின் துள்ளல் 60 வருடங்களைக் கடந்தும் தன் புத்தம்புதுத் தன்மையைத் தக்கவைத்திருப்பது ஆச்சரியம். ‘என்னருகே நீ இருந்தால்’ என்ற பாடல் அனைத்துகாலப் ப்ரியப் பாடல்களின் வரிசையில் வரும் ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் படத்தில் அரிதினும் அரிய பைலா வகை பாடலொன்றை இசைத்திருப்பார் எஸ்.எம்.எஸ். ‘கண்ணும் கண்ணும் சேர்ந்தது’ எனத் தொடங்கும் அப்பாடல் அந்தக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைத்தாண்டி இரண்டாயிரமாம் ஆண்டுவாக்கில் தயாரான அலைபாயுதே படத்திலிடம் பெறுகிற செப்டம்பர் மாதம் எனத் தொடங்கும் வேகவகை ராப் பாடலுக்கான முன்னோடியாக விளங்குவது அழகிய திருப்பம்.

இரண்டு பாடல்களுமே அடுத்தடுத்த இயங்குதிசைகளில் நகர்பவை என்பது தொடங்கி இரண்டுக்குமான ஒற்றுமைகள் அதிகம். தன் செல்வாக்கை அழுத்தந்திருத்தமாக அலைபாயுதே பாடலில் பதிந்திருக்கும் கண்ணும் கண்ணும் பாடல்.

ரிக்ஷாக்காரன் படத்துக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது பெற்றார் எம்ஜி.ஆர். ஆனால் அவரது நடிப்புவரிசையில் திருடாதே படத்துக்காக அந்த விருதை வழங்கியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். திருட்டு என்பதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால் மேலோட்டமான பிரச்சாரப் படமாக மாறியிருக்கும் அபாயத்தைத் தன் அளவான ஈடுபாட்டாலும் இயல்பான நடிப்பாலும் கச்சிதமாக நிறைவேற்றித் தான் ஏற்றவேடத்துக்கு நியாயம் செய்தார் எம்ஜி.ஆர்.

சரோஜாதேவி, நம்பியார், நாகைய்யா, டணால், தங்கவேலு உள்பட அனைவருமே மிளிர்ந்தார்கள். ப.நீலகண்டனின் துல்லியமான இயக்கம் எம்ஜி.ஆர் எனும் நாயகபிம்பத்தை வலுவாக மக்கள் மனங்களில் செதுக்கித் தந்தது. கண்ணதாசன் தன் பன்முக ஆளுமையை நிரூபித்த படங்களில் முக்கியமான படம் திருடாதே. பாடலாசிரியராக கவிஞராக அறியப்பட்ட அவர் சிறந்த வசனகர்த்தாவாக மிளிர்ந்தார். வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதான வசனங்களை எழுதியதற்காகக் காலம் கடந்து போற்றப்பட வேண்டியவராகிறார். திருடாதே படம் அதன் வசனத்திற்காக மேலோங்கிய கவனத்திற்கு உரியதாகிறது.

பாலுவின் அம்மா ஜம்புவிடம்,

அம்மா:ஏம்பா இப்பிடித் திருடித் திங்குறியே உனக்கு வெக்கமாயில்ல…
ஜம்பு:ஏம்மா எனக்கு முன்னால திருடிக்கிட்டிருந்த எவனுக்கும்மா வெக்கமிருந்தது எனக்கிருக்கறதுக்கு..?

அதே ஜம்புவை மறுபடி அழைத்து நன்றாக உணவளிக்கும் அன்னையிடம் உணவுக்கு நன்றி சொல்கிறான் ஜம்பு
அம்மா:ஆமா…உலகத்துலயே பசிதான் பல கொடுமைகளுக்கு காரணமாயிருக்கு
ஜம்பு:ஆங்க்…அப்டி சொல்லுங்க.. இது தெரியாம ஒருத்தன் அட்றாங்குறான், ஒர்த்தன் புடிறாங்குறான், காலை ஒட்றாங்குறான், போலீஸ் ஸ்டேஷனுக்கு நட்றாங்குறான்.. ஏது ஏது வருங்காலத்துல திருடவிடமாட்டானுங்க போலருக்கே
அம்மா:எதுக்காகப்பா திருடணும் உன்னைப் பார்த்தா நல்ல பிள்ளை மாதிரி தெரியுதே நாணயமா வாழக்கூடாதா..?
நீ ஒருத்தன் கிட்டே திருடுனா அந்தப் பணத்தைப் பறிகொடுத்தவன் எவ்வளவு வேதனையடைவான்..? அதை சம்பாதிக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்..?உலகத்துலயே ஈனத்தனமான தொழில் திருடறது தான்ப்பா.. மானமா உயிர்வாழ முடியலைன்னா செத்தாவது போகலாம். திருடக் கூடாது.

பாலுவிடம் சாமியார் நாகையா

அய்யய்யோ இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே. தாயின் பேரால திருடுறேன்னு சொல்லாதே அப்பா… நமக்கெல்லாம் கண் கண்ட தெய்வம் தாய்தான். எந்தத் தாயும் தன் மகன் திருடித் தன்னைக் காப்பாற்றுவதை விரும்பவே மாட்டா. இன்னைக்குச் செய்யுற சின்னத் திருட்டு நாளைக்குப் பெரிய கொள்ளை கொலைவரைக்கும் போனாலும் போகலாமப்பா. தம்பி கொஞ்சம் மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டா நீயும் சமூகத்தில நல்ல மனுஷனாயிடுவே அப்பா.

ராஜூவின் மனைவி ராஜூவிடம்

கவலைப்படாதீங்க.
மானம் உயிருக்கு நகை
இது உடலுக்குத் தானே நகை..?
அவசரத்துக்கு உதவாதது அழகுக்கு எதுக்கு
இதை வித்து அந்தப் பணத்தோட சேர்த்து ஊருக்கு அனுப்பி வையுங்க

பாலு சாமியாரிடம்

நான் திருடிக்கிட்டு இருந்தேன் யாரும் என்னைய ஒன்னும் சொல்லல திருடு ரக நிப்பாட்டினேன் எல்லாரும் என்னை நல்லவன் சொல்லனும்னு நினைச்சேன் எல்லாரும் திருடன் சொல்றாங்க

கண்ணதாசன் தானே அத்தனை கதாமாந்தருமாக மாறி அவரவர் மனங்களை ஊடுருவி எண்ணங்களை அகழ்ந்தெடுத்து அத்தனை வசனங்களை அமைத்தார் என்றால் நம்பலாம். திரைப்படம் சமூகத்தைப் பண்படுத்தக் கூடிய ஊடகம். பல்லாயிரக்கணக்கான மனிதர்களை அது பண்படுத்தி இன்னும் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்ல வல்லது. தன் திரைப்படங்களின் சின்னஞ்சிறிய அசைவுகளையும் உன்னிப்பாக மேற்காணும் கட்டுப்பாட்டிற்கு உகந்து அடங்கிச் செல்வதாகவே அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.. அவரது சமூகப் பங்களிப்புகளாகவும் அரசியலுக்கான அடித்தளங்களாகவும் அவரது படங்களைப் பார்க்கலாம். கதாபாத்திரத்தின் சின்னஞ்சிறிய மௌனம்கூட மக்களுக்குத்தான் அளிக்கும் சமிஞைகள் என்பதை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அவர் நிழலைப் பின்பற்றி நிஜத்திலும் கோலொச்சினார்.

இதற்கான சின்னஞ்சிறு சான்று திருடாதே மற்றும் நல்லதுக்குக் காலமில்லை என இரண்டு டைட்டில்களை இப்படத்துக்காக திரைக்கதையை கண்ணதாசனோடு சேர்ந்தெழுதிய வித்வான் லட்சுமணன் பரிந்துரைத்தபோது நல்லதுக்குக் காலமில்லை என்று எம்ஜி.ஆரே சொல்லிட்டார் என்று பலரும் நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே திருடாதே என்பதே டைட்டிலாக இருக்கட்டும் என்று கறார் காட்டினாராம் மாண்புமிகு நடிகர் எம்.ஜி.ஆர்.

முந்தைய தொடர்:https://bit.ly/30EIUeJ