பழிவாங்குவதலில் பெரும் பணம் இருப்பதில்லை

-THE PRINCESS BRIDE படத்தில் நாயகன் இனிகோ மோண்டோயா (Mandy Patinkin)

அண்ணன், தம்பி இருவரின் கதை. நாம் இருவர் ராமசாமிக்கு ஜெயக்குமார், சுகுமார் இரண்டு மகன்கள். வாழ்வின் லட்சியமாக சினிமா எடுப்பதுதான் எனப் பெருங்காலத்தையும் நிறையப் பணத்தையும் இழந்து மனம் மாறித் திரும்புகிறான் சுகுமார். அவனைத் தாயன்போடு ஏற்கிறான் ஜெயக்குமார். பணம் கண்ணை மறைக்கத் தன் பேத்தி வயதில் இருக்கும் கண்ணம்மாவை இரண்டாவது கலியாணம் செய்துகொள்ளத் துடிக்கிறார் ராமசாமிப் பிள்ளை. பேங்கர் சண்முகம் பிள்ளையும் அவரும் கூட்டு சேர்ந்து கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கோடிகளைக் குவித்துப் பணத்தைப் பதுக்குபவர்கள். கண்ணம்மாவைக் காதலிக்கிறான் சுகுமார். ஒரு நாள் ஒரு கொலை நடக்கிறது. அதற்கான சூழலை முதலில் பார்த்துவிடுவோம்.

சண்முகம் பிள்ளை தன் வீட்டுத் தோட்டத்தில் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். அதில் வந்திருக்கும் செய்தியை வாய்விட்டுப் படிக்கிறார். ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதப் படித்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லும் அவர் என் பணமெல்லாம் போச்சே செல்லாதா பணம் என்றபடியே அங்கே இருக்கும் பெஞ்சியில் அமர்கிறார். நியாயப்படி அப்படியே விட்டிருந்தல் சற்றைக்கெல்லாம் அவரே நெஞ்சடைத்துச் செத்திருப்பார். ஆனால் கருப்புத் துணியைத் தன்மீது போர்த்திக் கொண்டு ஒரு உருவம் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பும். பேங்கர் சண்முகம் பிள்ளையைக் குத்திக் கொன்றது யார்?

தன் மகள் கண்ணம்மாவோடு பேசியதற்காக சுகுமாரனைக் கன்னத்தில் அடித்து அவச்சொல் பேசி அவமதிக்கிறார் சண்முகம் பிள்ளை. சுகுமார்தான் அவரைக் கொன்றதாக வழக்குத் தொடங்குகிறது.

தன்னைத் தொழிலில் ஏமாற்றிப் பெருந்தொகையை அபகரித்துவிட்டதால் தானே சண்முகம் பிள்ளையைக் கொன்றதாக விளக்குகிறார் அவருடைய பார்ட்னர் ராமசாமிப் பிள்ளை.

தன் தம்பி சுகுமாரனுக்குப் பெண் கேட்டுச் சென்ற தன்னை அவமரியாதை செய்த ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறான் சுகுமாரனின் அண்ணன் ஜெயக்குமார்.

தன் காதலை நிராகரித்தபடியால் தந்தை என்றும் பாராமல் அவரைக் கொன்றதாகப் பழியேற்கிறாள் கண்ணம்மா.

கோர்ட் குழம்புகிறது முடிவில் ராமசாமிதான் அவரைக் கொன்றதாக நிரூபணமாகிறது. மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

தன் பெண் கண்ணம்மா மீது மையல் கொண்டிருக்கும் ராமசாமிப் பிள்ளையின் ஆசையை நெய் ஊற்றி வளர்த்தபடி ப்ளாக் மார்க்கெட் தொழிலில் அவருடைய பெரும்பணத்தை சேகரித்துக் கொண்டு கொழுத்த லாபம் அடைவார் சண்முகம். அவ்வப்போது வந்து நமக்குள்ள என்னங்க என்று குசலம் பேசிச் செல்லும் ராமசாமிப் பிள்ளை ஒரு கட்டத்தில் வந்து தன் பங்குப் பணத்தையும் லாபத்தையும் கேட்கும்போது இவ்ளோதான் கிடைச்சது என்று ஏய்த்து அவரிடம் பொய்க் கணக்கை நீட்டுவார். அதிர்ச்சியடைந்து என்னய்யா இது உம்மபொண்ணை எனக்கு கட்டி வைப்பீர்னுதானே இத்தனை நாளும் கணக்கு வழக்கெல்லாம் பாராம இருந்தேன் என்று அயர்வார் ராமசாமி.

‘அதற்கு போய்யா கட்டையில போறவயசுல கல்யாணம் என்ன வேண்டி கிடக்கு’ என்று நிசமுகம் காட்டுவார். இன்னும் அதிர்ந்து ஒழுங்காகத் தன் பாகப் பணத்தைத் தர வேண்டும் ராமசாமியிடம் நான் தர்ற பணத்தைப் பேசாம வாங்கிட்டு கெளம்புறதானா கெளம்பு இல்லாட்டி கோர்ட்ல பார்த்துக்க என்பார் ஈவிரக்கம் ஏதுமின்றி இன்னும் அதிர்ச்சியாகி, என்னய்யா இது ப்ளாக் மார்கெட் பஞ்சாயத்தை கோர்ட்டுக்கு எப்படி கொண்டுபோறது நான் சும்மா விடுவேன்னு நினைக்காதே உன்னைய கவனிச்சிக்குறேன் பார் என்று முகம் வெளிறி அங்கே இருந்து கிளம்புவார். உடனே தன் ஸீட்டிலிருந்து எழுந்திருக்கும் சண்முகம் பிள்ளை போடா. இவன் ஒரு திருட்டுப்பய நான் ஒரு திருட்டுப்பய இவன் என்ன என்னைக் கவனிக்கிறது?” என்பார் அஸால்டாக. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் மிகையும் புனைவுமற்ற யதார்த்த பாணி நடிப்பையும் இயல்வழக்கு வசன உச்சரிப்பையும் கொண்டு அறிமுகமான படத்திலேயே எல்லோரின் கவனம் கவர்ந்தார் வீகே ராமசாமி. நெடுங்காலம் வற்றா நதியென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தமிழின் முதன்மையான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரெனப் போற்றப்படுபவர் வீ.கே.ஆர்.

ஆர் சுதர்ஸனம் இசை. மகாகவி பாரதியாரின் பாட்டுக்கள் தேசியவசம் ஆவதற்கு முன் ஏவி.எம் வசம் இருந்தபடியால் அனேக பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன. கேபி காமாட்சிசுந்தரமும் சில பாடல்களை எழுதினார். டி.ஆ.மகாலிங்கம் டி.எஸ்.பகவதி டிகே பட்டம்மாள் தேவநாராயணன் எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பாடியது மொத்தம் 15 பாடல்கள் இடம்பெற்றன.

ஏ.வி.மெய்யப்பன் இயக்கினார். ப.நீலகண்டனின் நாடகம் தியாக உள்ளம் நாம் இருவர் எனும் பெயரில் படமாக்கம் கண்டது. அவரே படத்தின் வசனத்தையும் எழுதினார். டி.ஆர் ராமச்சந்திரன், டி.கே ராமச்சந்திரன், பி.ஆர் பந்துலு, சாரங்கபாணி, குமாரி, கமலா ஆகியோருடன் வீகே ராமசாமி இதன் மூலம் அறிமுகமானார். அவருக்கு வயது வெறும் 21 ஆனால் சண்முகம் பிள்ளையாக ஜொலித்தார் வீகே.ஆர்

டி.ஆர் மகாலிங்கம் பெரும் புகழேந்திய படங்களில் ஒன்று நாம் இருவர்

சினிமா பேசத் தொடங்கிப் பாடல்களின் பிடியினின்று மெல்ல வெளியேறி வசனகாலத்தில் நுழையத் தலைப்பட்ட முற்பகுதியில் வெளியான சமூகப் படங்களில் மிக முக்கியமானது நாம் இருவர். கதாபாத்திரங்களின் வினோதமான பேராசைகள் கோபங்கள், இயலாமை, ஆத்திரம் ஆகியவற்றின் பின்னலாகவே கதையைப் பின்னியிருந்தது பெரிதும் ரசிக்கவைத்தது. நடிப்பில் நாடகமேடையில் முன்னின்றபடி நடிப்பதை நெருக்கமாய்ச் சென்று படமாக்கும் ஆதிகால யுத்தியைத் தாண்டி பலவிதமான ஷாட்களும் கேமிரா கோணங்களைக் கலைப்பதன் மூலமாகப் பார்ப்பவர் மனங்களைப் பலவித உணர்வுகளுக்குத் தயாரித்துவிடுகிற உத்திகளுக்காகவும் டி.முத்துச்சாமியின் ஒளிப்பதிவும் ராமனின் எடிட்டிங்கும் கவனிக்கத் தகுந்தவைகளாகின்றன. டாக்கி என்பதைப் பாடல்களின் பேர்சொல்லி வரவேற்றாக வேண்டிய காலகட்டத்தில் வீகேராமசாமியின் முழு போர்ஷனுமே இயல்காலப் பேச்சுவழக்கில் அமைக்கப்பட்டிருந்தது இன்றளவும் ரசிக்க வைக்கிறது

நாம் இருவர் அன்பின் கதையாடல்