ஒரு படம் ஏன் ஓடுகிறது என்பது மட்டும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாத சூத்திரம். சினிமாவை உலகமெல்லாம் இன்றளவும் உந்திக் கொண்டிருக்கும் மந்திரமும் அதுவே. என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் கூட வெளியாகும் முன் மக்கள் தீர்ப்பை முன் கணிதங்களால் அறிந்துகொள்ளவே முடியாது. அந்த வகையில் சினிமாவின் சரித்திரத்தில் தனி சரிகை இழையால் கட்டப்பட்ட வெற்றிப்பதாகைப் படங்களின் வரிசைப்பட்டியல் ஒன்று உண்டு. சாதாரணமாக ஓடியவையாக இருக்காது. எல்லா ஊர்களிலும் தலை தெறிக்க ப்ரேக் லெஸ் வெஹிகில் என்பார்களே அப்படி நிறுத்துவதற்காகாக வாகனத்தைப் போல் ஓடிய படங்கள் அவை.

சினிமா மொழியில் சொல்லவேண்டுமானால் ஒரு படம் வெளியான மறு நாள் அந்தப் படத்தின் லைட் மேனுக்குக் கூட மாற்றியமைக்கப்பட்ட அந்தஸ்தும் பெருக்கெடுத்த ஒளிவெள்ளமும் கூடுதல் சம்பளமும் இன்னபிறவுமெல்லாம் ஏற்பட்டு இருக்கும். அப்படி ஏற்பட்டால் அதன் பெயர்தான் சூப்பர்ஹிட்.
சின்னத்தம்பி அப்படிப் புரிந்துகொள்ள முடியாத வெற்றிகளிலொன்றாக அமைந்தது. அதுவரைக்குமான தமிழ் சினிமா வசூல் எல்லைகளை எல்லாம் தகர்த்தெறிந்தது. பி.வாசு இயக்கத்தில் கேபி பிலிம்ஸ் கேபாலு தயாரிப்பில் இளையராஜா இசையில் கங்கை அமரன், வாலி பாடல்கள் எழுத ராதாரவி, மனோரமா, குஷ்பூ, கவுண்டமணி இவர்களொடு பிரபு நாயகனாக நடித்த படம்.

ஆண் வாசனையே அனுமதிக்கப்படாத அரண்மனைக்கு நிகரான மாளிகையில் வளரும் நாயகி. அவளுக்குக் காணக் கிடைக்கும் வெகுளி ஆடவன் சின்னத் தம்பி. தாயைத் தவிர வேறொன்றும் அறியாத வெள்ளந்தி அவன். அவனுக்கு அபாரமாகப் பாடவரும். மாளிகையில் வந்து செல்லக்கூடிய அவன்மீது காதலாகிறாள் நாயகி. தன் வீட்டு இளவரசியை வழிபடுகிற அளவுக்கு அன்பாயிருக்கும் அண்ணன்கள் மூவரும் அவளுடைய காதலை ஏற்க மனம் வராமற் போகிறது. காதலைக் காதலென்றே அறியாத சின்னத் தம்பியோடு நாயகி சேர்ந்தாளா என்பதுதான் கதை. வெற்றிலையில் பாதி அளவு காகிதத்தில் எழுதி விடக்கூடிய எந்த விதத்திலும் நம்பகத்தின் அருகாமைக்குக் கூட வராமற் போன இந்தக் கதையைத் தான் தமிழகம் ஒரு ஆண்டு ஓடச்செய்து அழகு பார்த்தது. கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகளும்கூட எப்போதைக்குமான கோர்வையாகவே திகழ்கிறது. நடித்த யாருமே குறை சொல்ல முடியாத பங்கேற்பைத் தந்ததும் நிசம். எல்லாவற்றுக்கும் மேலாகத் திரும்பிய திசையெல்லாம் சின்னத் தம்பி என்று ஒலிக்கச் செய்ததற்கு இன்னொரு காரணம் இசை.

இளையராஜாவின் இசையை எடுத்துவிட்டு இந்தப் படத்தைப் பார்க்கவே முடியாது. இது வெறுமனே ஏற்றிச் சொல்கிற சொல்லாடல் அல்ல. கிட்டத்தட்ட குழந்தமையின் பித்து நிலைக்குக் குறைவற்ற நாயக கதாபாத்திரத்தின் மனோபாவங்கள் ஒருபுறமும் அடக்கி வைக்கப் பட்டதாலேயே விடுதலைக்காகச் சதா சர்வகாலமும் விரும்புகிற நாயகியின் தீவிரத் தன்மையும் ஒருங்கே உள்ளடக்கிய திரைக்கதையின் மேலோட்டமான உலர்தன்மையை முழுவதுமாய்த் தன் பாடல்கள் இசையால் நிரப்பிப் பசுமையாக்கித் தந்தார் ராஜா. தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுத் தன்மை பொங்கும் பாடலில் எல்லோரும் தங்களது மனங்களை இசையால் பூட்டிக் கொண்டார்கள். படம் முடியும்வரை மெய்மறந்தது மாத்திரமே இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாயிற்று. அதன் பின்னால் இருந்து காரியமாற்றியவர் இளையராஜா.

போவோமா ஊர்கோலம் என்ற பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மாபெரும் அடையாளமாக மாறிற்று. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடலாகட்டும் உச்சந்தலை உச்சியிலே பாடலாகட்டும் நீ எங்கே என் அன்பே பாட்டாகட்டும் ஏற்படுத்தப் பட்ட செயற்கையான சூழல்களை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு அவரவர் மனங்களைக் கொண்டு இந்தப் படத்தை அதன் பாடல்களுக்குள் சிக்கிக் கொள்ளச் செய்ததனால் சின்னத் தம்பி எல்லோர்க்குமான இசைப்பேழையாகவே மாறிற்று. இன்றளவும் அகற்றி எறியமுடியாத அன்பின் தடங்களாய்த் தமிழ் சமூகத்தின் போற்றிக்குகந்த பாடல்களைக் கொண்ட மறக்க முடியாத படம் சின்னத் தம்பி.