தொண்ணூறுகளுக்கு முன்பிருந்த தமிழ் சினிமாவுடன் ஒப்பிடுகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே வித்யாசமான மடைமாற்றும் நோக்குடனான திரைக்கதை முயல்வுகள் உருவாக்கப் படத் தொடங்கின. உதாரணமாகச் சொல்வதானால் ஒற்றைக் கதா முறையுடனான போலீஸ் படங்களும் கிராமத்துப் படங்களும் ஆங்காங்கே தொடக்கம் பெற்றன. இரண்டாயிரம் வரையிலான திசைவழிக்கான தொடக்கத் திருப்பங்களாக இவை அமைந்தன.

காதல் படங்கள் என்ற எப்போதைக்குமான வணிக நிர்ப்பந்த சினிமாவின் பின்புலமாக அதுவரை கையாளப்பட்ட கல்லூரி என்ற களனை முன்பில்லாத அளவுக்கு நிஜத்துக்கு நெருக்கமாய்ச் சென்று அவதானித்து எடுக்கப்பட்ட சொற்ப திரைப்படங்கள் காலம் கடந்து இன்றும் ரசிக்க வைக்கின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் கல்லூரிக் களத்தினை மையப்புலமாக்கி எடுக்கப்பட்ட படங்களில் தலையாயதென்று தலைவாசல் திரைப்படத்தினை முன் வைக்கலாம்.தொலைக்காட்சியில் செல்வாக்குப் பெற்ற நீலா மாலா தொடரின் மாந்தர்கள் அதே ஹன்சாலயா பேனரில் சோழா பொன்னுரங்கம் விமலாரமணன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய முதல் படம் தலைவாசல். தென் தமிழகத்தின் புதியவர்களான செல்வா பாலபாரதி சந்தானம் தொடங்கிப் பலரும் ஒன்றிணைந்து உருவான படம் இது.

இதன் மூலம் அறிமுகமான செல்வா தன் அடுத்த படமான அமராவதியில் இதே பேனருக்காக அறிமுகம் செய்த நாயகன் தான் அஜீத் குமார். செல்வா அதன் பிற்பாடு பல வணிகப் படங்களை இயக்கினார். தலைவாசல் தமிழின் கலை அடையாளங்களில் ஒன்றாக தனித்ததற்கு ஒன்றல்ல பல காரணங்கள் உண்டு.கானா எனப்படுகிற பாடல்வகைமையை முன்பு அங்குமிங்கும் அதன் நீர்த்த வடிவங்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் முன்பில்லாத வகையில் இந்தப் படத்தின் ஒரு அரூபப் பாத்திரமாகவே சித்தரித்திருந்தார் செல்வா. பாலபாரதி சந்திரபோஸ் அஷோக் ஆகியோர் பாடிய கானா பாடல்கள் அன்றைக்கு எல்லோரின் விருப்பங்களாக மாறின. இந்தப் படத்தின் வசனங்கள் அன்றைய காலத்தில் பெரும் பிரசித்தி பெற்றன.திரும்பத் திரும்ப உச்சரிக்க வைத்தன. போறியா போறதுக்கு முந்தி ஒரு கானா வுட்டுட்டு போ என்று விட்டில்பூச்சிகளின் விட்டேற்றி மனங்களை அத்தனை அழகாக முன்வைத்தது தலைவாசல் படம்.

இளையராஜாவின் இசைமீது பெரும் பற்றுக்கொண்ட பாலபாரதி தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டார். அமராவதி உள்ளிட்ட வேறு படங்களுக்கும் இசை அமைத்தார் என்றாலும் முதல் படத்தின் அதே ஒளிர்தலைப் பற்றிக்கொண்டு மாபெரும் இசைமனிதனாக வந்திருக்க வேண்டியவர். இந்தப் படத்தில் அதிகாலைக் காற்றே நில்லு பாடலை புதியவர் சந்தானம் எழுதினார். கானா பாடல்களை எழுதிய மூர்த்தி ரமேஷின் கைவண்ணத்திலேயே இந்தப் படத்தின் வசனங்களும் அமைந்தன. மற்ற பாடல்களை எல்லாம் வைரமுத்து எழுதினார்.வாசல் இது வாசல் தலைவாசல் பாடலையும் வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை பாடலையும்  உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி பாடலையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார்.

அந்தப் பாடலை அவரோடு இணைந்து பாடியவர் சித்ரா.அதிகாலைக் காற்றே நில்லு பாடல் எஸ்.ஜானகியின் அடைமழைக்குரலால் பெருகிற்று.வான் நிலவே என்றாரம்பிக்கும் பாடல் அஷோக் குரலில் மின்னிற்று.இந்தப் படத்தின் இசைப்பேழை இன்றளவும் தன் ஒலித்தலை நிறுத்தாத நல்லிசைப் பறவையாய் ஜொலிக்கிறது.நாச்சியப்பன் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வந்து அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் மனிதர்கள் அவர்களை இயக்கும் நகரத்தின் பயங்கர மனிதன் பீடாசேட் அவனது பேச்சிற்கு எதிர்ப்பேச்சு பேச திராணியற்ற அவன் மனைவி சாரதா அவர்களது ஒரே மகன் சிறுவன் சித்தார்த்.

கல்லூரி மாணவர்களின் உபசரிப்பில் வாழ்வை ஓட்டும் பழைய மாணவன் கானா பாபு அந்த ஊரில் விலைமகளிர்கூடம் ஒன்றை நடாத்தி வரும் பெண் அம்சா அவளுக்கு பாபு மீது ஒருதலையாய்க் காதல் இரு தரப்பு மாணவர்களில் ஒரு தரப்பின் நாயகன் சுதாகர் எனும் வேடத்தில் ஆனந்த் என இந்தப் படத்தின் மனிதர்கள் அனைவருமே நம்பகத்தின் வரம்புகளுக்குள் சுழல்பவர்கள் என்பது பெரும் ஆறுதல்.எப்படியாவது ப்ரின்சிபால் ஆகிவிட வேண்டுமென்று துடிக்கும் வைஸ் பிரின்சிபல் வேடத்தில் நெப்போலியன் அவரது இம்சை தாங்காமல் பழைய பிரின்சிபல் விலக மாணவர்கள் பிரச்சினைகளை சமாளித்து கல்லூரியைப் புத்தாக்கம் செய்யப் புறப்பட்டு வரும் புதிய பிரின்சிபல் சண்முக சுந்தரமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர் மகள் அந்தக் கல்லூரியிலேயே படிக்க சேர்கிறாள்.அவரது தம்பி அசிஸ்டெண்ட் கமிஷனர்தன் சுயநலனுக்காக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் இரக்கமற்ற பீடாசேட்டின் பிடியிலிருந்து நாச்சியப்பன் கல்லூரி எப்படி மீள்கிறதென்பதே தலைவாசல் படத்தின் கதை. ராஜூவின் எடிடிங்கும் ராயின் ஒளிப்பதிவும் படத்திற்கு உறுதுணையாகின.பாடியறிந்த பாலுவை நடிப்பின் மூலமாக அறிவதற்கான சிறந்த வாய்ப்பாகவே இந்தப் படம் அமைந்தது.

வஸந்த் ஆனந்த் தலைவாசல் விஜய் சபீதா ஆனந்த் வைஷ்ணவி விசித்ரா சீனுமோகன் பரதன் தொடங்கிப் பலரும் சிறப்பாக மிளிர்ந்திருந்தார்கள் என்றாலும் இந்தப் படத்தின் மொத்த அறுவடையும் நாஸருக்குப் பின்னால் தான் சகலருக்கும் என்றானது. மனிதர் நம் கண்முன் பீடா சேட்டாகவே தோன்றினார் நம்பச் செய்தார். இன்றளவும் மனசுக்குள் பீடா சேட் என்று உச்சரித்தாலே நாஸரின் சகல பரிமாணங்களும் வந்து செல்கின்றன.அந்த அளவுக்கு ஸ்கோர் செய்தார் நாசர்.கல்லூரி என்ற பதத்தை இத்தனை அழகாக முன்வைத்த படம் இன்னொன்றைச் சொல்வது அரிது என்ற அளவில் தொண்ணூறுகளின் தேவகானம் தலைவாசல் படம்.

முந்தைய கட்டுரை:https://bit.ly/2w1Pejf