பிரதாப் போத்தன் மலையாளக் கரையொற்றித்  தமிழ் நிலம் நோக்கி வந்த நடிக மீன். தனக்கு முன்பிருந்தவர்களையோ அல்லது தன் சமகாலத்தவர்களையோ எந்த விதத்திலும் போலச்செய்யாமல் நடிப்பை நல்குவதுதான் ஒரு தேர்ந்த நடிகனின் முதல் தகுதி. அதனை சரிவரக் கொண்டவர் பிரதாப். அவரது முகம் யூகிக்க முடியாத நிரந்தரத் தடையாகவே விளங்குவது. பிரதாப்பின் கண்கள் பலமொழி பேசும் பண்டிதம் மிகுந்து பொங்குபவை. பூச்சியத்திலிருந்து நூறுவரை பகுபடக்கூடிய கதாபாத்திரங்களின் தன்மைகளை அனாயாசமாக உள்ளெடுத்து நல்குவதில் மிகச்சிறந்த கலைஞன் பிரதாப். அவருடைய படங்களில் பல காலத்தால் அழியாதவை. அவற்றில் முதற்பெயரெனவே தங்குவது மூடுபனி.

ஷோபா கிடைத்தற்கரிய நல்முத்து. இந்தியத் திரைவானில் நிகழ்ந்த நட்சத்திரங்களில் இன்றளவும் பூர்த்தி செய்யப்படாத வெற்றிடம் ஷோபாவினுடையது. அந்தக் கண்களும் சிரிப்பும் நடிப்பதற்கான தளவாடங்கள் என்பதனை மெய்ப்பித்தவர் ஷோபா. உறங்கும் சித்திரமாகத் தேங்கக் கூடிய மங்கி ஒளி குன்றிய மிட் ஷாட் ஒன்றில் கூட ஷோபாவின் தோன்றலொளியைக் குறைத்துவிட முடியாது. ஒப்பிடற்கரிய டல் கலர் தேவதை ஷோபா. சிறிய தூரமே உடன்வந்த சன்னல் பயணத் தூறல் போலவே மாறா ஞாபகமாய் விளைந்து மறைந்தார் ஷோபா. அவரது நடிப்பில் உருவான அத்தனை படங்களுமே சோடை போகாத நல்மணிகள். அவற்றில் சிறந்தது மூடுபனி.

பாலுமகேந்திரா அறியப்பட்ட ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே தன் அகக்குரலுக்குப் பதில்சொல்லும் படங்களை இயக்கவும் செய்தார். கன்னடத்தில் கோகிலா அவரது பெயரை ஓங்கி ஒலித்தது. அழியாத கோலங்களுக்கு அப்பால் அவர் தமிழில் தன் மூடுபனியை இயக்கினார். இளையராஜா இசைத்தார். ராஜேந்திரக் குமாரின் இதுவும் ஒரு விடுதலைதான் என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கினார் பாலு மகேந்திரா. தனக்கே உண்டான திரைமொழியும் காட்சிகளை அமைப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மற்ற படங்களிலிருந்தெல்லாம் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமையும் தனிக்கச் செய்தன. இந்தப் படத்தை இயக்கும்போதே பாலுவின் பெயருக்கு உரித்தாக அரைடஜனுக்கு மேலான அரசு விருதுகள் பல மொழிகளுக்காக அணிவகுத்திருந்தன.

மூடுபனியின் நாயகன் சந்துரு மனம் பேதலித்தவன். அடுத்தடுத்து இரண்டு விலைமாதர்களைக் கொல்கிறான். இன்ஸ்பெக்டர் ரகுநாத்தின் மகள் ரேகா அவள் மனம் கவர்ந்த ரவியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் அவளைத் தேடி பெங்களூருவுக்கு வருகிற பல்லவியை விபச்சார விடுதி நடத்தும் ஒரு பெண்  ஏமாற்றி அழைத்துச் சென்று அடைத்து வைக்கிறாள். தன்னைத் தேடி வந்த பல்லவியைக் காணாமல் தேடுகிறாள் ரேகா. அந்த விடுதியிலிருந்து பல்லவியைத் தன் காரில் அழைத்துச் சென்று கொல்கிறான் சந்துரு. அவர்களுக்கு பரஸ்பரம் அறிமுகம் உண்டென்றாலும் கூட அவன்தான் கொலைகாரன் என்பதை ரேகாவோ ரகுநாத்தோ அறியவில்லை.

பாஸ்கர் எனும் ஸ்டில் புகைப்படக்காரன் தனது தோழியை விதவிதமாய்ப் புகைப்படம் எடுக்கும் போது ஒரு படத்தில் வீடொன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் புல்லட் மோட்டார் சைக்கிளின் நம்பர் ப்ளேட் அதில் பதிந்துவிடுகிறது. அந்த வீட்டிலிருக்கும் ஒரு பெண்ணை சந்துரு கொன்றுவிட்டு தப்புகிறான். மறுதினம் அந்த இடம் குறித்து நாளிதழ்களில் செய்தி பார்த்து பாஸ்கர் ரகுநாத்திட்ம தன் புகைப்படங்களைத் தருகிறான். வழக்கு சூடுபிடிக்கிறது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தன் நண்பர் ஒருவரிடம் அந்த பைக்கைத் தந்திருப்பதாக சொல்கிறார்.

இந்த இடத்தில் தன் தொடர்கொலைகளில் அயர்ச்சியுற்று  மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறான்.அவர் சீக்கிரமே திருமணம் செய்துகொள் என்கிறார்.இவனது தீராக்கோபத்தின் விளைவுகளாய்  செய்த கொலைகளை அம்மருத்துவர் அறிவதில்லை.அவர் சொன்ன பிறகு அதையே சிந்திக்கும் சந்துரு அடுத்து இயல்பாக சந்திக்கும் ரேகாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறான்.திரும்பத் திரும்பக் கெஞ்சுகிறான்.அவனது விசித்திரமான அணுகலை தன் அப்பாவிடம் சொல்கிறாள் ரேகா.அவர் சந்துரு மீது கோபமாகிறார்.ரேகாவை ஒரு சந்தர்ப்பத்தில் ஊட்டியிலிருக்கும் தன் வனமாளிகைக்கு கடத்திச் செல்கிறான் சந்துரு.அவன் மன விகாரத்தை முன்பே யூகித்து விடும் ரேகா அவனிடம் முரண்படாமல் நல்லதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாள்.இன்னொரு புறம் ரேகாவைத் தேடும் ரகுநாத் சந்துருவின் அலுவலகம் சென்று அவனது இருப்பிடம் மற்ற தகவல்களை தோண்டுகிறார்.சந்துருவின் உள்முகம் அறியவருகிறது.

சந்துருவின் அம்மாவை அவன் குழந்தையாக இருக்கையில் கொடுமைப் படுத்திய தந்தைமீதும் அவர் தினமும் உறவு கொண்ட பெண்கள் மீதும் மனம் சிதைந்து ஆறாக் கோபமாகும் சிறுவன் சந்துரு வளர்ந்து தன் மன நோயினால் கொலைகாரனாக மாறிவிட்டிருப்பது அவனது வாழ்க்கைக் கதை.கடைசியில் சந்துருவிடமிருந்து ரேகா தப்புவதும் சந்துரு கைதாவதுமாக முடிவடைகிறது மூடுபனி.

மூடுபனி இளையராஜாவின் நூறாவது படம்.கங்கை அமரன் எழுதி கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய என் இனிய பொன் நிலாவே நிலம் தாண்டி விழும் நிழலாய்க் காலத்தின் மேனியெங்கும் படர்ந்தது.இன்றளவும் ராஜாவின் இசைத்தலில் பெருவிருப்பப் பாடல்களில் கட்டாயம் இடம்பெறுகிறது இந்தப் பாடல்.பல மேதமைகள் இந்தப் பாடலுக்கு உண்டு.மீவுரு செய்யவேண்டிய தேவையற்று இன்றைய காலத்திலும் நின்றொலிக்கும் நற்கானமாகவே தனிக்கிறது இந்தப் பாடல்.ஏகாந்தத்தின் வெறுமையின் உலர்ந்த மனவெளிப் பயணமாகவே இந்தப் பாடல் தமிழ் மனசுகளை வென்றெடுத்தது.ஜேசுதாஸின் டாப் ஹிட்ஸ் பட்டியலிலும் அனேகமாகத் தன் முதலிடத்தைப் பெருங்காலம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் இயக்கிப் பெரும்புகழ் பெற்ற சைக்கோ படத்தின் உந்துதல் கொண்டே இப்படத்தை உருவாக்கியதாகப் பின் நாட்களில் தனது பேட்டிகளில் தெரியப்படுத்தினார் பாலுமகேந்திரா.இந்தப் படத்தின் காலம் 1980 என்பதை நம்பமுடியாத தகவலாகவே புறத்தில் வைத்து விட்டு சென்ற வருடம் வெளியான புத்தம் புதிய சித்திரமாகவே இதனை இன்றைக்கும் உணரமுடிவதே மூடுபனியின் மாபெரிய வெற்றி.சொல்லப் பட்ட விதம் உருவாக்கத் திறன் நடிகர்களின் உடல்மொழி மற்றும் பங்கேற்பு இசை ஒளிப்பதிவு எனப் பல காரணிகளுக்காகத் தமிழில் எடுக்கப் பட்ட நேர்கோட்டு த்ரில்லர் படங்களில் முக்கியமான படம் மூடுபனி.

முந்தைய தொடர்: https://bit.ly/2MMN4Pw