இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் அகாதமி விருதுபெற்ற புதினம். அதன் திரையாக்கம் ஸ்ரீதர்ராஜனின் முதற்படமாக வெளியாகி தேசிய விருதை அவருக்குப் பெற்றளித்தது. அனந்துவும் கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமியும் வசனங்களை எழுத இளையராஜா இசையில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றானது.

கலைகளெல்லாம் பாம்பு உரிச்சு போட்ட சட்டை மாதிரி. அதை எறும்பு இழுத்துட்டு போறபோது பாம்பு ஊர்றமாதிரி ப்ரம்மைல இருக்காங்க எல்லாரும்.
கலை இயக்கம் அது இதுன்னு ஒரு சிலர் தங்களைத் தாங்களே ஏமாத்திக்கிறாங்க. இன்னும் சிலர் சமூகத்து கண்ல மண்ணைத் தூவுறாங்க.

இது ஒரு ஸாம்பிள் வசனம் மட்டுமே. படம் முழுவதும் அனல் தெறிக்கும் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

கௌதம் பத்திரிக்கையாளன், புகைப்படக்காரன், சினிமா நாட்டம் கொண்டவன், ஓவியனும் கூட. அதிகாரவர்க்கத்தின் பாரபட்சத்தினால் அயர்வுறுகிறவனுக்கு பரத நாட்டியம் கற்கும் அருந்ததியின் சினேகம் வாய்க்கிறது. நந்தனாரின் வாழ்க்கையைப் பரதநாட்டியத்தில் அங்கம் பெறச் செய்ய விரும்புகிறாள் அருந்ததி. கௌதமின் ஆலோசனைக்கப்பால் கூத்துக் கலை ஆசான் தம்பிரானை சந்திக்க கௌதமும் அருந்ததியும் வெண்மணிக்குச் செல்கிறார்கள். பெரும் பணக்காரரான ராஜரத்தினத்தின் வீட்டில் தங்குகிறார்கள். வெண்மணி கிராமத்தில் ஆண்டையாகத் திகழும் ராஜரத்தினத்தை எதிர்த்து உழைக்கும் மக்களுக்குரிய கூலிக்காக போராடுகிறான் வைரம். அவனுக்கு உறுதுணையாக நிற்பவன் காளை. அருந்ததியின் கலை முயல்வும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் ஒன்றாய்ப் பின்னுகிற திரைக்கதையின் மிகுதியில் சுயநலமும் அடுத்தவர்களைச் சுரண்டுகிற யுக்தியும் நிரம்பிய ஆண்டேயின் சதியால் ஊரே தீக்கிரையாகிறது. காளை கொல்லப்படுகிறான். வைரம் கைதாகிறான். எல்லாம் தன் திட்டப்படி நடந்து முடிந்ததாய் சந்தோசப்படும் ஆண்டேயை அவர் வயல் நடுவே அவர் வீட்டில் வேலை பார்த்த பாப்பாத்தி கத்தியால் குத்திக் கொல்கிறாள்.

சௌமேந்து ராய் நான்கு தேசிய விருதுகளைத் தன் ஒளிப்பதிவுக்காகப் பெற்ற மேதை. தமிழில் அவர் பணியாற்றிய ஒரே படமான இதற்கும் தமிழகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெற்றார். அனேகமாக பிசி.ஸ்ரீராமின் ஆதர்ஸமாக இவரைக் கருதமுடியும். இந்தப் படத்தின் எண்ணற்ற இரவு நேர ஷாட்கள் ஒன்றுக்கொன்று அளவாக வழங்கப்பட்ட ஒளியோடு இயற்கையில் இயல்புவரம்புகளுள் உறுத்தாமல் ஒளிர்ந்தன. படத்தின் அடிநாதமாக ஒரு இரவுப் பொழுது தனிமையை ஒரு பருவமெங்கும் தொடர்கிற சூழல் நிமித்தத் தனிமையாகவே தொடர்ச்சியான காட்சிகளின் மூலமாக உருவாக்கித் தந்தார். இந்தப் படத்தைப் பொறுத்தளவு இரவென்பது ஒரு குணச்சித்திர நடிகருக்கு உண்டான பொறுப்பேற்றலுடன் பங்கேற்றது.

வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பூ இந்தப் பாடல் படத்தின் மைய நதியோட்டத்திற்குச் சற்றே விலகினாற்போல் கேட்கும்போது ஒலித்தாலும் படத்தில் முழுவதுமாக மாண்டேஜ் ஷாட்களால் நிரம்பி நகரும் இந்தப் பாடல் இளையராஜா குரலில் அடியாழத்தில் இதனைப் பாடினார். இதன் முதல் சரணத்தின் நிறைகணத்தில் பூர்ணிமாவைத் தேடி அவரது அறை நோக்கி வருவார் விஜய்மோகன். அப்போது பூர்ணிமாவுக்குப் பின்புலத்தில் இருக்கும் சுவரில் பெரிய செவ்வண்ண ஓவியத்தில் சே குவேரா தோற்றமளிப்பார். அனேகமாக சே குறித்த ஆரம்ப தமிழ்நிலத் திரைத் தோற்றமாக இந்த ஷாட் இருக்கக்கூடும். ‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ என்ற பாடல் வைரமுத்துவின் ஆரம்பகால முத்திரைப் பாடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இன்றளவும் அதன் வெம்மை குன்றாமல் ஒலிக்கிறது.

ஜெய்சங்கர், பூர்ணிமா, ஜெயமாலா, சுபத்ரா ராஜேஷ், விஜய்மோகன், கல்கத்தா விஸ்வநாதன், ரவீந்தர் ஆகியோரது நடிப்பில் தமிழில் யதார்த்தத்தின் ஆட்டக்களத்தின் எல்லைக்கோடுகளுக்குள் முழுப்படமும் விழிவசம் விரிந்த வெகு சில படங்களுக்குள்  ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்துக்கு முக்கிய இடமுண்டு.

முந்தைய தொடர்: https://bit.ly/2I8QvvB