தமிழ் சினிமாவுக்கென்று தனித்த குணங்கள் காலம் காலமாய் பார்த்துப் பராமரிக்கப்பட்டு வந்தன. அவ்வப்போது திசை திருப்பும் மடைமாற்றும் படங்கள் வரத்தும் நிகழும். எல்லா மாற்றங்களையும் எந்தக் கலையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கலையின் உடலில் ஒவ்வொரு படைப்புமே அதன் திசையை போக்கை மற்றும் அணுகுமுறையை இன்னபிறவற்றையெல்லாம் மாற்றி அமைப்பதற்கான முயல்வுகள்தானே..? அது வரையிலான கதையைத்தானே திருத்தி எழுதுகின்றன ஒவ்வொரு புதிய வரவுகளும்?

சில ஆதார விசயங்களை எப்போதும் மாற்றுவதற்கான அல்லது மீறுவதற்கான தைரியம் எல்லாக் கலைப் படைப்பாளிகளுக்கும் இருந்து விடுவதில்லை. வணிகம் பணம் எனும் இரண்டு சொற்கள் லெவல் க்ராஸிங்கில் பூட்டப்படுகிற ராட்சஸ இரும்புக் கதவுகளுக்குப் பின்னதான நிர்ப்பந்திக்கப்பட்ட காத்திருப்பு கணம் போலவே எந்தப் படைப்பாளியையும் அச்சுறுத்துவதுண்டு. அதை மீறி அவ்வப்போது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் வந்தே தீரும். அது கலையின் தன்மை.

1992 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான 70 எம்.எம் படமான அமரன் அப்படியான தைரிய முயல்வுகளில் ஒன்று. தமிழில் டான் வகைப் படங்களில் முக்கிய இடம் அமரன் படத்துக்கு உண்டு. பில்லாவுக்கும் அதன் மீவுருவுக்கும் இடையிலான நெடுங்காலத்தினுள் குறிப்பிடத்தக்க டான் வகைப் படம் என நிச்சயம் அமரனைச் சொல்ல முடியும். தப்பானவனைத் தண்டித்து அழிக்கிற கதைமுடிவு அனேகமாக தமிழ்ப் படங்களில் சிலாகிக்கப்பட்டதைவிட புறக்கணிக்கப் பட்டதே அதிகம். அப்படி இருந்தும் அமரன் அதே போன்ற முடிவை நோக்கி பார்வையாளர்களை அழைத்துச் சென்ற படம்.

அமரனின் ஒளிப்பதிவு உலகத் தரமாயிருந்தது. பிசி.ஸ்ரீராமின் படங்களில் அனேகமாக முதற்படமாகவே சொல்லத்தக்க அளவில் இந்தப் படமெங்கும் அவர் கோர்த்துத் தந்த ஷாட்கள் அதிகதிக லாங் ஷாட்களைக் கொண்டதாக மிகப் பிரம்மாண்டமாக கண்கள் முன் விரிந்தது. பின் நாட்களில் அனேகப் படங்களில் கண்டதும் ரசித்ததுமான பல விஷயங்களின் ஆரம்பங்களைத் தொடங்கி வைத்தது அமரன் படம். மிக முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளை ஒளிவழிக் காதலோடு படமாக்கித் தந்தார் ஸ்ரீராம். முன் பார்த்திராத துல்லியத்தோடு அமைந்தன சண்டைகள்.

அடுத்த விடயம் இசை. ஆதித்யன் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். பாடல்கள் தேவைக்கு அதிகமான பரபரப்பை உண்டு பண்ணி இருந்தன. கார்த்திக் தன் சொந்தக் குரலில் பாடிய வெத்தல போட்ட ஷோக்குல பாடல் முந்தைய அத்தனை ஹிட் பாடல்களையும் வந்து பார் என்றது. இத்தனைக்கும் ரஜினியின் தளபதி கமலின் குணா தொடங்கி பிரம்மா, மன்னன், ரிக்சாமாமா, பாண்டித்துரை என ஒரு டஜன் ஹிட் பேழைகளைத் தொடர்ந்து தந்தார் இளையராஜா. அத்தனைக்கும் எதிராய் அனாயாசம் காட்டியது இந்த ஒற்றைப் பாடல். படத்தின் தொடக்கத்திலேயே இந்தப் பாடலைக் காணச்செய்தது பின்னதான படத்தின் மீதான எதிர்பார்த்தலைக் குறைத்ததென பார்வையாளர்கள் கருதினார்கள். பின்னணி இசையில் வழக்கத்தை முற்றிலுமாக உடைத்தார் ஆதித்யன். சண்டைகளுக்கெல்லாம் பின்னால் ஹிந்துஸ்தானி கோர்வைகளைப் பயன்படுத்தி தனித்துவம் செய்தார். சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே பாடல் இன்றளவும் அமானுட வாஞ்சையோடு ஒலித்து வருகிறது. வசந்தமே அருகில் வா பாடலும் இன்னொரு சூப்பர்ஹிட்டாக மாறியது. பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து அறியப்பட்ட இசையமைப்பாளர் விஸ்வகுரு இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலான முஸ்தஃப முஸ்தஃபாவைப் பாடி ஆடினார் கார்த்திக்..

கார்த்திக்கின் இருவேறு தோற்றங்கள் ஃபங்க் கூந்தலிழையும் முன் தோற்றமும் வழித்து வாரப்பட்ட டான் தோற்றமும் இரண்டு நிலைகளுக்குமிடையே தன் உடல்மொழி குரல் என எல்லாவற்றிலும் அவர் காட்ட விழைந்த வித்யாசங்கள் ரசிக்க வைத்தன.

பழிவாங்கும் கதைதான். ஆனால் எடுத்த விதம் வித்யாசம்.

பத்து பேர்ல ஒருத்தன் புத்திசாலி ஆக முடியும் லட்சத்துல ஒருத்தன் மேதையாக முடியும். கோடில ஒருத்தன்தான் தலைவனாக முடியும். கோடிகோடில ஒருத்தன் தான் அவதாரமாக முடியும். அமரன் மனுஷன் ஆண்டவப் பெருமாள் ஆதாரம் வேண்டாம் எங்கிட்ட வேண்டாம் என்பார் ராதாரவி

அவதாரம்…ஒரு மன நோயாளியோட பேசுறதுக்கு நேரமில்லை எனக்கு எனப் பதில் வரும் அமரனிடமிருந்து

எங்கிட்ட யாரும் இப்படிப் பேசுனதில்ல இது ராதாரவி

உன் மிருகபாஷை தெரியாதது தப்பு அமரன் இப்படிச் சொல்கையில் அரங்கங்கள் நொறுங்கும்.

பின்னால் பல படங்களில் நல்ல வில்ல சந்திப்புக் காட்சிகள் வந்திருந்தாலும் இதில் அமரனும் ஆண்டவர்பெருமாளும் சந்திக்கிற காட்சியின் அபாரம். முதன்முதலாகப் பெருகியது.

ஆண்டவர் பெருமான்தான் தன் அப்பாவைக் கொன்று குடும்பத்தை அழித்தவனென்பதை அமரன் விளக்கிய பின்னரும் “அதெல்லாம் பேசிக்குவம் நம்ம சமரசம்…” என்பார் ராதாரவி… அதற்கு பதிலாக “உன் சாவுதான் எனக்கு சமரசம். நான் உன்னை அழிக்க வந்த ஆயுதம்” என முடிப்பார் கார்த்திக்.

ஆண்டவர் பெருமாளாக இந்தப் படத்தின் மூலமாக இந்தியத் திரையின் க்ரூர வில்லன்களில் ஒருவராக பேரெழுச்சி கண்டார் ராதாரவி. அவருடைய மேக் அப் மற்றும் குரல் ஆகியனவும் அவருக்குத் துணை புரிந்தன. சந்தர்ப்பவசத்தால் அமரன் எப்படி ஆண்டவர் பெருமாளைக் கொன்றழிக்கிறான் என்பதுதான் ஒன்லைன். அதை திரைக்கதை அமைத்து இயக்கியவர் கே.ராஜேஷ்வர். படத்தின் தயாரிப்பும் அவரே.

அமரனுக்கும் ஆண்டவர் பெருமாளுக்கும் இடையிலான படிப்படியான முரண்களும் இறுதிவரை அழகாகப் பின்னப்பட்டிருந்தாலும் அதிகரித்து வைக்கப்பட்ட முன் எதிர்பார்ப்பு.

அமரன் அந்தக் காலகட்டத்தில் புரிந்துகொள்ள முடியாத மௌனத்தையே மறுவினையாக அறுவடை செய்தது என்றபோதும் இன்றைக்கும் தமிழில் எடுக்கப் பட்ட வித்யாசமான காட்சியனுபவப் படங்களில் ஒன்றாக முன்வைப்பதற்கான பல கூறுகளைத் தனதே கொண்டிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

அமரன் – குருதியின் கதையாடல்

முந்தைய தொடர்: https://bit.ly/2WK2SlX