ஷங்கர் தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய படம். அடுத்த காலத்தின் பெருவெற்றிகர மனிதராக ஷங்கர் ஆவதற்கான அனைத்துக் கூறுகளையும் தனதே கொண்டிருந்தது அவரது முதற்படமான ஜெண்டில்மேன். அப்போது பெரும் வணிக மதிப்பினைக் கொண்டிருந்த பிரபுதேவா இதன் நடன இயக்கத்தோடு ஒரு பாடலில் தோன்றினார். உடன் அவரது அண்ணன் ராஜூ சுந்தரம். வசனம் எழுதியவர் பாலகுமாரன். ஒளிப்பதிவு ஜீவா, எடிடிங் லெனின், வீடீ விஜயன், பாடல்களை எழுதியவர்கள் வாலியும் வைரமுத்துவும். திரும்பிய திசையெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த நேரமும் கூட. இத்தனை வலுவான கூட்டணியோடு தன் பேனரில் அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவரான கேடி.குஞ்சுமோனின் மூன்றாவது தயாரிப்பாக உருவானது ஜெண்டில்மேன். அதனை இயக்கினார் அறிமுக இயக்குனர் ஷங்கர். கமல் தொடங்கி சரத்குமார் வரை பலரும் வெவ்வேறு காரணங்களுடன் இதன் நாயக பாத்திரத்தை மறுக்க இறுதியில் அமைந்தவர் அர்ஜூன்.

அவருக்கு ஜோடி ரோஜா மூலம் நாடெங்கும் தன் முகத்தைப் பலரது அகங்களுக்குள் விதைத்திருந்த மதுபாலா. நம்பியார், மனோரமா, அஜய்ரத்னம், சுபாஸ்,ரீ சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில், ராஜன், பி தேவ் எனப் பலரும் உடன் நிற்க 1993ஆம் ஆண்டின் ஜூலை 30ஆம் நாள் வெளியான ஜெண்டில்மேன் ஒரு ட்ரெண்ட் செட்டர். திசைவழி திருப்பிய நற்படம்.

இன்றளவும் கவுண்டமணி செந்திலின் மகாத்மியங்களின் வரிசையில் இதற்கு முக்கிய இடமிருக்கிறது.

வாட் யூ வாண்ட்?

“பீஸ் ஆஃப் மைண்ட்”

இதெல்லாம் அடக்க முடியாத பெருஞ்சிரிப்புக்கான திறப்பு. கவுண்டமணிக்கு காமிக் வேடத்தைத் தாண்டிய உடன்பங்காளி கதாபாத்திரம் நன்றாகவே செய்தார்… லெஸ் டென்சன் மோர் ஒர்க் போன்ற செந்திலிச டயலாக்குகளும் வண்டுருட்டான் தலையா, பச்சிலைப் பிடுங்கி போன்ற மணிமொழிகளும் உக்கிரம் காட்டின.

நாட்டின் பல பாகங்களிலும் பல கோடி ரூபாய்களைத் தொடர்ந்து கொள்ளை அடிக்கிற பலே எத்தன் ஒருவனை என்ன செய்தும் பிடிக்க முடியவில்லை. அவன் யாரென்றே தெரியாமல் விழிக்கிறது போலீஸ். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கிறார் அழகர் நம்பி (சரண்ராஜ்). அவர் திருமணமாகாதவர். கறார் அதிகாரி. தன் நண்பன் மணி(கவுண்டமணி) உதவியுடன் அப்பளக் கம்பெனி நடத்தி வருகிறான் கிச்சா. அவனது தொழிலை நம்பிப் பலரும் அவனிடம் பணி புரிகின்றனர். இந்தக் கிச்சாவின் மறுமுகம்தான் அந்தக் கொள்ளைக்கார வேடம் என்பது தெரியவருகிறது. என்ன பின்னணியில் அந்தக் கொள்ளைகளைச் செய்தான் கிச்சா அவனது முன் கதை என்ன என்பது ஜெண்டில்மேன் படத்தின் மிச்சம்.

ஃபாண்டஸி, த்ரில் என்றொரு வகைமை உண்டு. பார்த்தியா எப்டி எடுத்திருக்காங்க இந்தப் படத்தை என்று தோன்றவைப்பதற்காகக் கதையிலிருந்து நிகழும் சம்பவங்கள் வரைக்கும் எதைப் பற்றிய லாஜிக் யோசனைகளுக்குள்ளேயும் ரொம்ப சிந்திக்கவிடாமல் முழுவதுமாகப் பார்க்கிறவர்களைப் பரவசம் கொள்ள வைப்பதிலேயே குறியாக செயல்பட்டுப் படமெடுக்க விழைவது. தமிழில் அந்த வகைமைப் படங்களின் ஆரம்பமாகவே ஜெண்டில்மேனை சுட்டமுடிகிறது. எப்படி என்பதை யோசிக்கவிடாமல் நம்ப வைப்பதுபோல் அடுத்தடுத்த காட்சிகளை ஆவென்று வாய்பிளக்க வைப்பது. ஷங்கரின் தாரக மந்திரமே இதுதான். ஜெண்டில்மேனில் தொடங்கி இன்றுவரைவிடாமல் அவர் கைக்கொள்கிற லாவக லகான்.

கொள்ளை அடித்தும் கற்கை நன்றே எனத் திருத்தப்பட்ட அறமொழி ஒன்றை அடிநாதமாகக் கொண்டு ஜெண்டில்மேன் உருவானது. இதன் வசனங்களும் நகைச்சுவைக் காட்சிகளும் சண்டைகளும் பாடல்களும் என எல்லாமுமே மக்களின் பெருவிருப்ப மலர்களை மலர்த்திற்று. பாடல்களை உருவாக்க ஷங்கரின் மெனக்கெடுதல்கள் சின்ன பட்ஜெட் படங்கள் அளவுக்கு இருந்தன. இவையெல்லாம் முதல் தடவை நிகழ்ந்து பின்னர் ஷங்கர் பாணி என்றே மாறியது.

சாமான்யனால் செய்ய முடியாத எல்லாவற்றையும் திரையில் ஒரு நாயகனுக்கான சவால்களாக அடுக்குவது காலங்காலமாக திரைப்படங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளில் முதன்மையானது. ஒரு பக்கம் அப்பளம் விற்பவன். இன்னொரு பக்கம் ராபின் ஹூட் என இருவேறுபட்ட தோற்றங்களை ஏற்று சிறப்பாக நடித்தார் அர்ஜூன். அவரது சம்பளத்தையும் செல்வாக்கையும் பலமடங்கு உயர்த்தியது ஜெண்டில்மேன். ஒட்டகத்தைக் கட்டிக்கோ போன்ற சுதந்திரமான சொற்களைக் கொண்டு தமிழின் மெகா ஹிட் பாடல்களை வழங்கினார் ரஹ்மான். இதே படம் பின் நாட்களில் தெலுங்கு இந்தி ஆகியவற்றிலும் பெயர்த்தெடுக்கப்பட்டது.

சினிமா என்பது வழங்குமுறை என்று அதன் திரைமொழியை மாற்றி அமைத்த வகையில் ஷங்கரின் படங்களுக்கு அவற்றின் வணிக முகங்களைத் தாண்டிய மதிப்பொன்று எப்போதும் உள்ளது. ஜெண்டில்மேன் அதற்கான தொடக்க ஊற்று.

முந்தைய தொடர்: https://bit.ly/2Rt1Aeg