கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ்ப் படங்களின் கதை சொல்லும் முறையில் குறிப்பிடத்தகுந்த திருப்பங்களை நிகழ்த்தியவர்களில் ஒருவர். தனது முதல் படத்தைக் கண்களும் மனசும் பிழியப் பிழியக் காதல் கசிதல் படமாகத் தந்தார் தன்னை யாரென்று நிறுவிய அடுத்த கணமே காக்க காக்க என்ற ரெண்டாம் படத்தை சூர்யா ஜோதிகா இருவரையும் கொண்டு காவல் துறைப் படமாக ஆரம்பித்தார். அதுவரைக்குமான சூர்யாவின் ஏறுமுக வரைபடத்தில் ஜிவ்வென்று மேலேற்றிக் காட்டியது காக்க காக்க. எல்லாமே நன்றாக அமைவது சினிமாவில் அபூர்வமாய்த்தான் நிகழும். இது மூட நம்பிக்கைபோலத் தோன்றக்கூடும். ஆனால் இதன் பின்னால் ஒரு படத்தை இப்படியான பெருவெற்றியை நோக்கி இட்டுச் செல்வதன் பின்னால் உறைந்திருக்கக்கூடிய மகா மகா உழைப்பு எத்தனை பேரின் கடின வியர்வை கண்ணீர் ரத்தம் இத்யாதிகளைக் கலந்து சொரிவது என்பதை உணர்கையில் அதன் அரிய வருகை புரியவரும்.

காமிரா வழியாக எதையெல்லாம் சொல்லப் போகிறோம் என்பதில் தெளிவு கொண்ட இயக்குனராக கௌதம் மேனன் தன் கதைகளைத் திரைநோக்கி நகர்த்தினார். மணிரத்னத்தின் பட்டறையிலிருந்து கிளம்பியவர்களில் முதன்மையானவர் கௌதம். வணிக அந்தஸ்தும் அதே நேரத்தில் விரும்பத்தக்க படங்களும் என்பதில் ஆணித்தரம் காட்டும் இயக்குநர் இந்தப் படத்தில் BLACK MAIL TERRORISM எனப்படுகிற ஆள் கடத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் சமூகவிரோத மனிதர்களின் சின்னஞ்சிறு அசைவுகளைக்கூட சமரசம் இன்றிப் படமாக்கித் தந்தார்.

நாலு போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் எனப் பேர் பெற்றவர்கள் சென்னையில் எல்லை மீறிக் கொண்டிருக்கக்கூடிய ஆள் கடத்தல் பேர்வழிகளை ஒருவர்விடாமல் ஒழித்துக்கட்டியே விடுகையில் கடைசி ஒருவன் சேதுவின் தம்பி எனப் புதிதாய் முளைத்து வருகிறான் பாண்டியா. யாரும் எதிர்பாராதவகையில் யாரென்றே தெரியாமல் இருளில் ஒளிந்துகொண்டு தன் அண்ணனைக் கொன்ற போலீஸ் அதிகாரிகளை சின்னாபின்னமாக்கத் துடிக்கிறான். அன்புச்செல்வன் என்ற பேரிலான நாயகனுக்கும் பாண்டியாவுக்கும் நடக்கிற யுத்தமும் முடிவில் நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் எனும் நல் முடிவும் காக்க காக்க கதைக்களன்.

இந்தப் படம் வெளிவருவதற்குமுன் தினம் யாருக்கும் ஜீவன் என்ற பெயர் கூட சரிவரத் தெரிந்திருக்காது. அவர் நடித்து யுனிவர்ஸிடி என்ற படம் வெளியான சுவடற்றுக் காணாது போயிருந்தது. வந்தது காக்க காக்க எத்தனைக்கெத்தனை சூர்யாவை ரசித்தார்களோ அதைவிட ஒரு சதவீதம் அதிகமாகவே யார்றா இந்த வில்லன் என்று அந்தப் பக்கம் சரிந்தார்கள் எதிர் நாயகனை ரசித்தல் என்பதெல்லாம் எளிதில் நடந்து விடுகிற காரியமில்லை. ஒரு ரஜினி அப்புறம் ஒரு ரகுவரன் அதற்கப்புறம் ஒரே ஒரு ஜீவன் தான் அதில்கூட மேற்சொன்ன மூவரையும் ரசிக்கும் சதவீதமும் அவர்கள் மேல் பொழியும் அன்பும் வித்யாசப்படும்… சர்வ நிச்சயமாக இது ஜீவனின் படம். அவரை அகற்றிவிட்டு யோசிக்கவே இயலாத அளவுக்கு ஆக்ரமித்தார் ஜீவன்.

ஜீவன் தன் சுருள் கேசத்தினுள்ளே முகத்தை மறைத்துக் கொண்டார் யூகிக்க முடியாத அமைதியோடு அவரது குரல் துணை கதாபாத்திரமாகவே உடன் வந்தது. சொற்களைப் கடித்துப் பற்களுக்கு நடுவே வைத்து கரும்பை முறித்து சாறெடுக்கிறாற்போல் ஜீவன் பேசியதில் மனங்கள் மயங்கின.

தன் அண்ணனிடம் “சேதுண்ணே எங்க போனாலும் அந்த ஊரை நம்ம ஆளணும். அந்த ஊரை ஒரு கலக்கு கலக்கணும். இந்த ஊருக்கே நாம யார்னு காட்டணும்ணே” என்பார்.அள்ளிக்கொண்டு போகும். சண்டைக்காட்சிகளில் அவரை ஏன் அடிக்கிறீங்க சூர்யா என்று கதையை மீறி கத்தியவர்களில் நானுமொருவன். ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்குமான காதல் இந்தப் படத்தின் வருகைக் காலத்தை ஒட்டி அவர்கள் வாழ்வில் நிசமாயிற்று என்பது இந்தப் படத்தைப் பற்றிய மேலதிகப் புள்ளி விவரங்களில் ஒன்று.

பணம் ஆள் கடத்தல் குற்றவுலகம் அதிகாரம் மனித உரிமை சட்டம் காவல்துறை சீருடை பிறப்பிக்கும் கர்வம் பெண் குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற சமூகப் பாதுகாப்பு நகர்ப்புறங்களில் ஈவ் டீஸிங் எனும் க்ரூரத்தை எதிர்கொள்வதில் தோன்றும் இடர்கள் என காக்க காக்க சமூகம் சார்ந்த பல முக்கிய விசயங்களைப் பேசிற்று.

ஹாரிஸ் ஜெயராஜ் தாமரை கூட்டணியில் உருவான பாடல்கள் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு என எல்லாமே ப்ளஸ் பாயிண்டுகளாகின. உறுத்தாத சலிக்காத நற்படமாயிற்று காக்க காக்க.

காக்க காக்க சூப்பர்ஹிட் போலீஸ் ஸ்டோரி.

முந்தைய தொடர்: https://bit.ly/2J2edc9