திரைப்படங்களில் தோன்றுகிற கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை பல வருட காலங்களாகவே ஒப்புக்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொருவரையும் வருத்தம் கொள்ளச்செய்வது எதுவெனில் திரையில் வன்முறையின் விளைவுகளை விலாவாரியாகக் காண்பிப்பதுதான்.

—ஸ்டான்லி குப்ரிக்

சுடரும் சூறாவளியும் என்ற தலைப்பினை வைத்திருக்கலாம். ஆளவந்தான் என்று வந்தது. தாயம் என்ற தலைப்பில் எழுத்தாளராக கமல்ஹாசன் எழுதிய தொடர்கதையின் திரைக்கதையாக்க வடிவம் ஆளவந்தான். அபய் என்ற பேரில் இந்தியிலும் வந்தது. அன்றைய காலத்தின் அதிகப்படி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற முதல்மொழியும் இதற்கு இருந்தது. அதிகரித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்பை நல்ல முறையில் பூர்த்தி செய்ததா வசூல் வெற்றியா என்பதெல்லாம் வேறு வினாக்கள். ஆளவந்தான் திரை வழங்கல் முறையில் மிக முக்கியமான இந்தியப் படம்.

அன்பை இழத்தல் என்பதன் ஊற்றுக்கண்ணிலிருந்து தொடங்கி இரட்டையர்களின் மனநிலைப் பகிர்தல் வரை பல நுட்பமான விசயங்களைத் தனதே கொண்டிருந்தது தாயம் கதை. இரட்டையர்களில் ஒருவன் நம்மைப் போன்றவன். அடுத்தவனோ அறிவுஜீவி. தன் அறிவுக்குத் தீனி கிட்டாமல் எப்போதும் தீராத தாகத்தோடு அலைபவன். அப்படியானவன் மனநிலை சமன்படுத்தலுக்கான அசைலத்தில் வளர்க்கப்படுபவனாக நந்து என்கிற ஜீனியஸ் ஆக எழுதியதை சற்றும் எதிர்பாராத மனிதப் பேருரு ஒருவனாக மூர்க்கத்தனத்தின் உச்சமாகத் திரைக்காக மாற்றினார் கமல்.

அவர் எழுதியதை அப்படியே எடுத்திருக்கலாம் அல்லது எடுத்திருக்க வேண்டும் என்பதில் பெரும் ஆதங்கமே எனக்கு உண்டு. தமிழில் எழுதப்பட்ட கதையை திரைக்காக இந்தியப் படமாக ஹிந்தி உள்பட நிலங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது நடிகராக படைப்பாளியாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான் என்றாலும் எழுதப்பட்ட தாயம் உன்னதம். எழுதுவதற்கும் எடுத்ததற்கும் இடையே முற்றிலும் வேறாக மாறிப்போயிருந்தது எழுத்தாளர் கமல்ஹாஸன் எழுதிய கதையின் தனித்துவம்.

கொலை என்பதை இச்சையாகக் கொண்டுவிடுகிற மனப்பிறழ்வாளனைத் தேடி அலைந்து பிடித்துக் கொல்லும் கதைகள் உலகமெல்லாம் அவ்வப்போது வருகிறவைதான் என்றாலும் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் கமல் எழுத்தில் சுரேஷ்கிருஷ்ணா எடுத்த ஆளவந்தான் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக வன்முறை மிகுந்த கதையின் கனம் மிகுந்த பகுதி ஒன்றை கார்ட்டூன் சித்திரங்களின் நகர்தலாக்கிக் கதையைத் தேவையான மறுகரைக்கு நகர்த்திச் செல்லக்கூடிய உத்தி இதில் கையாளப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது. பின் காலத்தில் இந்த ஒன்று இப்படியான நகர்த்துதல்களுக்கான பொதுமுறைமையாகவே கடைப்பிடிக்கவேண்டியதாக மாறியது.

ஷங்கர், எஸான், லாய் மூவரின் இசையில் இந்தப் படத்தின் ஆல்பம் பெரிதும் கவனம் குவித்தது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஒரு எதிர்பாராமையை அதிகரித்து வைப்பதான விளம்பரப் பதாகை போலவே இதன் பாடற் பேழை திகழ்ந்தது. ஆப்ரிக்கா காட்டுப்புலி உற்சாகக் கொண்டாட்டத்தை முன்வைத்தது. உன் அழகுக்கு தாய் பொறுப்பு பாடல் ஆக மென்மையாக வருடிற்று. உன் அழகுக்கு தாய் பொறுப்பு பாடலும் மெல்லிசை பாடியது. ஆனாலும் இந்த ஆல்பத்தில் மின்னி மிளிர்ந்த பாடல் வேறொன்று.

தமிழ்ப் பாடல்களின் தத்துவார்த்த நிரவல் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறதுதான். சமரசம் உலாவும் இடமே, பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல் என்ற பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றது கிட்டத்தட்ட எண்பதாண்டுகளுக்கு முன்னால் என்பது அதன்மீதான வசீகரத்தைக் கூட்டுகிறது. இந்திய அளவில் கண்ணதாசன் தமிழில் முயன்ற பல விடயங்கள் முதன்மையான முயல்வுகளாகவும் கவனம் பெறுபவை. அப்படியான பாடல்களின் வரிசையில் கடவுள் மற்றும் மிருகம் என்ற இரண்டாய்க் கிளைத்தல் குறித்த பல பாடல்களை கண்ணதாசன் எழுதினார். அவரது சமகாலத்தின் கவிஞர்களும் அப்படியான பாடல்களைத் தந்தார்கள். அடுத்த காலத்தின் கவியான வைரமுத்து கடவுளையும் மிருகத்தையும் கொண்டு ஒன்றல்ல பல பாடல்களை உருவாக்கினார். அவற்றில் ஆளவந்தான் படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ பாடல் முதலிடம் வகிக்கிறது.

அறிவின் சிதைவையும் குன்றியும் ததும்பியும் ஆவேசம் காட்டும் சலன மனதின் உக்கிரத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம் இந்தப் பாடல் உருவானது.

கடவுள் பாதி… மிருகம் பாதி… கலந்து செய்த கலவை நான்!
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்…
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க… பார்க்கின்றேன்
ஆனால்…
கடவுள் கொன்று, உணவாய் தின்று, மிருகம் மட்டும், வளர்கிறதே,

ஆளவந்தான் வன்முறையை இசைத்தவன்

முந்தைய தொடர்: https://bit.ly/2KQjWW5