ஜூலை 21 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம். இம்மண்ணைவிட்டு அவர் மறைந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் சென்னை சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. சிவகாசி, கோவை என்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் சிவாஜியின் நினைவோடு அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. அவர்களில் ஒருவர்  ‘இன்றும் நான் சிவாஜியை மட்டும்தான் கும்புடுறேன்’ என்றும் 80 வயதான இன்னொருவர் ‘சிவாஜி படத்த தவிர வேறவுக படத்தை இன்னமும் பாக்க மாட்டேன்’ என்றும் உணர்ச்சி பொங்க பேசுவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னும் மகத்தான ஆளுமையின் புகழைப் பறைசாற்றுகிறது. அன்றைய ரசிகர்கள் இன்னமும்கூட நடிகர் திலகம், எங்கள் அண்ணன், சிங்கத்தமிழன், சிம்மக்குரலோன் என்று சொல்லித்தான் அவரது பெயரைச் சொல்கிறார்கள். 

அவரது ரசிகர்கள் பலரும் வைக்கும் குற்றச்சாட்டு: ‘சிவாஜியை எல்லாரும் மறந்துட்டாங்க, அவரோட சினிமாவுல அரசியல்ல இருந்தவங்க இப்போ அவரை நினைக்கிறதில்ல; இப்போவரைக்கும் நடிகர்களோ அரசியல்வாதிகளோ ஒருத்தருகூட இங்க மணிமண்டபத்துக்கு அஞ்சலி செலுத்த வரல, ரசிகர்கள்தான் இங்க இருக்கோம்; அவர் சிலைய மறுபடியும் பீச்சிலேயே வைக்கணும். திருச்சியில அவர் சிலைய துணிபோட்டு மூடி வைச்சிருக்காங்க அதை திறக்கணும்’ என்பதுதான்!

இந்த தலைமுறை சிவாஜியைக் கொண்டாடத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்பின் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் சிவாஜியை அவரது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்குத் திரையுலகம் கொண்டாடவில்லை. அவரது நினைவைப் போற்றும்வகையில் எங்கும் விழாக்களோ நினைவேந்தல்களோ நடத்தப்படுவதில்லை. தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி ஒரு வசனம் பேசுவார், ‘எல்லாப் பயபுள்ளயும் ஒருநாள் சாகப்போறவந்தேன்… வாழ்றது முக்கியந்தான், இல்லனு சொல்லல; ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்துபோறதுதான் அந்த சாவுக்கே பெரும..’ அப்படிப்பட்ட வாழ்வை அவர் வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த நூற்றாண்டில் நாம் காணமுடியாத பல தலைவர்களை நம் கண் முன்னர் நிறுத்தியவர் சிவாஜி கணேசன் என்று சொன்னால் அதுமிகையல்ல. கட்டபொம்மன், வ.உ.சி, பகத் சிங், பாரதி என்று அவர் ஏற்ற பாத்திரங்கள்தான் அந்தத் தலைவர்களின் பிம்பங்களாக நம் மனதில் நிலைபெற்றிருக்கின்றன. குடும்ப வாழ்க்கையானாலும் திரை வாழ்க்கையானாலும் அவற்றுக்கோர் இலக்கணமாய் வாழ்ந்தவர். அடுத்த தலைமுறைக்கு சிவாஜியை கொண்டுசேர்ப்பதும் அவரது புகழை மங்காமல் காப்பதும் மட்டுமே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

அந்தவகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சில முக்கியமானத் திரைப்படங்களைப் பற்றி எழுதுவது அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு சேர்க்கும் முக்கியமான ஆவணமாக அமையும் என்னும் நோக்கில் பராசக்தி முதல் தேவர்மகன்வரை அவரது திரை வாழ்வின் முக்கியமான 10 திரைப்படங்கள் இந்தத் தொடரில் இடம்பெறவுள்ளன.

திரைப்படங்களைப் பற்றி காணும் முன்னர் சிவாஜி பற்றி:

தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டையில் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சின்னைய்யா – ராஜாமணி தம்பதிக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ‘கணேச மூர்த்தி’. கணேசன் பிறந்தபோது அவரது தந்தை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறையிலிருந்தார். அரசாங்கத்து எதிரான செயலில் ஈடுபட்டதால் அவரது ரயில்வே வேலை பறிக்கப்பட்டது. பின்னர் திருச்சியில் வசித்தபோது கணேசனுக்கு நாடகங்களின்மீது ஈர்ப்பு ஏற்பட்டது.  தன்னுடைய நண்பரான காகா ராதாகிருஷ்ணன் உதவியால் யதார்த்தம் பொன்னுசாமியின் நாடகக்குழுவில் இணைந்தார். 7 வயதில் நாடகத்தில் அவர் ஏற்ற முதல் பாத்திரம் சீதை. சீதையாக, இலட்சுமணனாக, பிறகு ராமனாக நடித்து படிப்படியாக தன் இளம் வயதிலேயே நாடக உலகின் புகழின் உச்சியை அடைந்தார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் நினைவாற்றல், அபாரமான உச்சரிப்பு, நடிக்கும்போது கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் தன்மை என்று ஓர் மகா நடிகனாக வளர்ந்து வந்தார் கணேசன்.

கணேசன் – சிவாஜி கணேசன் ஆனார்!

அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு கணேசனுக்கு கிடைத்தது. அந்த நாடகத்தில் காகப்பட்டராக அறிஞர் அண்ணாவும் சத்ரபதி சிவாஜியாக கணேசனும் நடித்தனர். இந்த நாடகத்தைப் பார்த்த தந்தை பெரியார், கணேசனின் நடிப்பை பெரிதும் பாராட்டி ‘சிவாஜி’ என்னும் அடைமொழியை வழங்கி கணேசனை ‘சிவாஜி கணேசன்’ ஆக்கினார்.

கலைஞர் கருணாநிதி திரைக்கதை – வசனம் எழுதி கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார் தயாரிக்கவிருந்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது! 

1950ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டூடியோவில் பராசக்தி படப்பிடிப்பில் “சக்சஸ்…” என்ற வசனத்தில் தொடங்கியது சிவாஜி எனும் சகாப்தம்!

பராசக்தி பற்ற வைத்த நெருப்பு அடுத்த தொடரில்…