‘டக் டக் டக்…’ என்ற காலடி சத்தத்துடன் குதிரை கோட்டையை நோக்கிச் சென்றது. மிக அடர்த்தியான மற்றும் உயரமான மதில் சுவர்களுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி தந்தது தஞ்சை அரண்மனை.

குதிரையின் கால்களுக்கு அடியில் பசுமையாகச் செழித்திருந்தன அழிஞ்சிகை புற்கள். சற்று மேலே நோக்கினால் குன்றுகள்போல உயர்ந்திருக்கும் அரண்மணையின் ஒவ்வொரு முக்குகளிலும் உயர வளர்ந்த மரங்கள். தடிமனான இலைகளால் படர்ந்து அடர்த்தியான கிளைகள் கொண்டு பெரிய பூதம்போல வளர்ந்துள்ள கருநாவல் மரங்களுக்கு இடையே பயணித்த இவர்கள் சற்று குள்ளமாகவே தெரிந்தார்கள்.

மரங்களுக்கெல்லாம் மன்னராக விளங்கி உயர்ந்த கருநாவல் மரங்களுக்கிடையில் சோழ நாட்டு மக்களின் மன்னனைக் காண போய்க்கொண்டிருந்தனர் கண்டராதித்தனும் ரங்கமஞ்ச ஆதித்தனும். அந்தி நேரத்தில் வீசிய காற்றானது ஈரத் தென்றலை இவர்கள் மீது வருடிச் சென்றது.

குதிரையின் மேல் கண்டராதித்தன் பின்னால் அமர்ந்திருந்த ஆதித்தன் பெருமூச்சு விட்டபடி, “கண்டராதித்தரே…. தஞ்சை நகரத்தின் பேரழகை வணிகர்களும் அயல்தேச பிரயாணிகளும் உள்ளூர் மக்களும் வர்ணித்து பேசுமளவிற்கு செப்பனிட்டு உருவாக்கிய உங்கள் கலைத்திறனே! ஒரு மாமாங்கமே பேசுமளவிற்க்கு தஞ்சையின் சிற்பக்கலையை நீங்கள் வடித்துள்ளதாக சேதிகள் வலம் வருகிறதைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறேன். அதேவேளையில் இறை பணியிலேயே மூழ்கியிருக்கும் தாங்கள் தஞ்சை தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதாக உத்தேசம் ஏதும் இல்லையா?” என சிறு புன்னகையுடன் கேட்டான்.

“ஆதித்தா… பொடிவைத்து பேசுவது நமது வம்சத்திற்கே இல்லாத வழக்கம். கேட்க வருகிற விஷயத்தை நேரடியாக கேளப்பா. சுற்றி வளைத்து பேச இது சொற்போர் சபையல்ல…” என நறுக்கென கேட்டு அதே புன்னகையுடன் பதிலுரைத்தார் கண்டராதித்தன்.

“பொடிவைத்து பேசுவதாக எண்ண வேண்டாம். வீடு போகிறவரைக்கும் ஏதாவது பேசிக்கொண்டு போலாமே. குருதையின்மீது அமைதியாக உட்கார்ந்து கொண்டு வருவது என்னம்மோ போலுள்ளது.”

“என்ன தெரிய வேண்டும் உனக்கு? பாளைய தேசத்தைப் பற்றியா? இல்லை இந்த தஞ்சை கோட்டையைப் பற்றியா..?” -கண்டராதித்தர்.

“பாளைய தேசத்தையும் அதன் தளபதிகளின் வீர சரித்திரங்களையும் ஒருவாறு புரிந்துகொண்டுள்ளேன். எனக்கு உள்ள சந்தேகமெல்லாம்… சோழ நாட்டின் மாமன்னரும் உங்கள் தந்தையுமான உத்தம சோழருக்குப் பிறகு. அவரது வாரிசான நீங்கள் தானே முறையாக அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும்.
பிறகெப்படி பெரிய மாமா அருள்மொழி அரியணை ஏறினார்.?”

“ஆதித்தா… நமது குடும்பத்தின் வரலாறு பல விசித்திர சம்பவங்களையும் சரித்திர திருப்பங்களையும் அவ்வப்போது சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளது. அதுபோல்தான் உத்தமசோழர் ஏறிய அரியணையும் அதற்கு முன்பாக, ஈழ தேசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள், ஈழ நாட்டின் தலைநகராக விளங்கும் அநுராதபுரம் முழுவதும் நாரி, கள்ள காலனா, துலாந்தனா, மஹா ஸ்தூபி என புத்த விகாரங்களால் நிரம்பி வழிந்த காலம் அது.
அப்போது அங்கு ஆட்சிப் புரிந்த ஈழ மன்னனை விரட்டி ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிய தமிழ் அரசர்கள் தங்களது ராஜ்ஜியத்தை விரிவாக்குவதற்கு முன். அவர்களுக்குள்ளேயே எழுந்த பதவி மோகத்தாலும் துரோகத்தாலும் தங்களுக்குள் போரிட்டு மாண்டனர். அதன்படி, குலகா என்கிற மன்னன் பாகியா என்கிற தளபதியின் உதவியோடு அரசாண்டு கொண்டிருந்தான். பாரியா என்கிற அரசன் குலகாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற… பனையமாகா என்ற படைத்தலைவன் பாரியாவைக் கொன்று தனது அரசாங்கத்தை நிர்மாணித்தான். அதன் பிறகு பிலயமகா அரசன் பனைய மாகாவைக் கொன்று ஆட்சியை கைப்பற்ற… பிலய மாகாவின் தளபதியான ததிதா என்பவன் மன்னன் பிலயமாகாவைக் கொன்று ஆட்சியைப் பிடிக்க, இப்படி பதினான்கு ஆண்டுகளில் ஏழு மன்னராட்சியைக் கண்டது அநுராதபுரம் சாம்ராஜ்யம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கு பதவிக்காக கொலையாளிகளாக மாறி ஆட்சியைப் பிடித்தவர்கள் அனைவரும் தந்தை மகன்கள் மற்றும் சகோதரர்கள்.”

“ஆக, பதவி ஆசை ஒருவனுக்கு வந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களைகூட ஈவுஇரக்கமின்றி பலி கொடுக்கும் கல் நெஞ்சமாக மாறிவிடுகிறது மனித மனம்.”

“அதுபோல் நடந்ததுதான், ஆதித்த கரிகாலனின் துர் மரணமும். அந்த மரணத்திற்கான விடை இதுவரை தெரியவில்லை. விடை தெரிந்தவர்களும் சொல்லவில்லை. இந்தக் கொலை விவகாரத்தில் எனது தந்தையின் பெயரும் பலமாக இழுக்கப்பட்டதையும் நாடறியும். அதற்காக சதுர்வேதி மங்கல சபையினர் மேற்கொண்ட முயற்சிகளும் அதற்குப் பிறகு இன்னமும் நடந்துவரும் பல்வேறு தேடல்களுக்கு விடை தெரியாததால், சுந்தர சோழருக்கு பிறகு நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது சாட்சாத் அந்த சிவனே வழி சொன்னதுபோல அனைத்து அரசர்களும் எனது தந்தைக்கு ஆதரவளித்தது இன்னமும் வியப்பாகவே உள்ளது.!”

“சிவ நாமத்தையே உச்சரித்து உயிர் வாழவேண்டி பிறப்பெடுத்த எனது தந்தை உத்தம சோழர். இந்த தேசத்தின் அரியணையில் ஏறியதும் ஒரு விசித்திர சம்பவம்தான்.”

“காலம் பல சரித்திர நிகழ்வுகளை நமக்கு பாடமாக புகட்டிவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதில் நாம் எல்லோரும் மாணவர்கள் என்பதை மறந்து விடுகிறோம். அது சொல்லிக்கொடுத்த படிப்பினையில் நாம் என்ன கற்றுக்கொண்டோம். அதன்மூலம் என்னவிதமான சாதனையைத் தக்கவைத்துள்ளோம் என்பதை ஒரு மன்னன் தர்ம சாசன சபையை வழிநடத்துவதிலும் போர் வீரன் போர்க்களத்தில் வாள் பிடிப்பதிலுமே தெரிந்துவிடும்.”

“எனது பாட்டனார் முதலாம் பராந்தகர் ஆசையின்படி என் தந்தை ஒரு சிவபக்தராகவே வளரவேண்டும் என்று எனது பாட்டியார் செம்பியன் மாதேவியார் வலியுறுத்திய போதும், அரச பதவியின் மீதுள்ள ஆசையினாலும் சோழ தேசத்தை ஆட்சிசெய்ய தன்னாலும் முடியும் என்கிற ஒரு எண்ணத்தினாலும் சில ஆண்டுகாலம் சோழ ராஜ்யத்தை கட்டிக்காத்தார் எனது தந்தை உத்தம சோழர். களத்தில் ஆயுதம் எடுத்தால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் வலிமையான உடற்கட்டும் வாள்,வேல்,வில் வித்தைகளில் கைதேர்ந்த பரோபகாரியாகவும் சீராக சிந்திக்கக்கூடிய ப்ருஜாபுத்திக்கு இணையான திறமையுள்ளவராக திகழ்ந்தார். ஊர் சபைகளை தோற்றுவித்தது. சபை முன்னோர்களை தேர்ந்தெடுக்க குடவோலை முறையை பரிசீலித்து நடைமுறைக்கு உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாது புதிய சோழ நாட்டிற்கான நாணயத்தையும் உருவாக்கியது உத்தம சோழர்தான். அப்படி வீரம் பொருந்திய வெற்றிவேந்தனாக இருந்து பரகேசரி என்றழைக்கப்பட்ட எனது தந்தையார் உத்தம சோழர் தனது வாழ்நாளின் இறுதித் தருவாயில் என்னை அழைத்து, ‘வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தில் தாம் இருப்பதாகவும் தனக்குப் பிறகு தனது வாரிசுகள் யாரும் இந்த அரியணையில் அமரக்கூடாது’ என்பதை மட்டும் என்னிடம் திரும்ப திரும்ப கூறினார்.

“அருள்மொழிவர்மருக்கு கிட்ட வேண்டிய ஆட்சிப் பொறுப்பினை தாம் அபகரித்து, அரச பதவியில் அமர்ந்து உள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தம்மை பல ஆண்டுகாலம் வருத்தி உள்ளதாகவும் அதனால் அவருக்குப் பிறகு ஏற்படப்போகும் ஆட்சிப் பொறுப்பை அருள்மொழிவர்மரே அரச பதவியில் அமர வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டார். உத்தம சோழரின் புதல்வனான நான், மாமன்னர் அருள்மொழிவர்மருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்றும் பஞ்சவன் மாதேவியார் விட்டுச்சென்ற சைவநெறி வளர்த்த சமயத்தை நாடு முழுவதும் பரப்ப, ஒரு ஆன்மீகவாதியாக திகழ வேண்டும். அதுவும் அருள்மொழிவர்மராலேயே முன்மொழியப்பட்டு உலகெங்கும் சைவத்தை கொண்டு செல்லும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டு அதன் மூலம் சோழ தேசத்தையும் நாட்டிலுள்ள இறையாண்மையும் வளர்க்க இன்றுவரை உத்தமசோழன் மகனாகவும் அருள்மொழிவர்மரின் தமையனாகவும் மாமன்னரோடு பணிந்து உள்ளேன்.”

“அரச பதவியோ! அரசாங்கத்தின் வேறு எந்த பதவியோ! வேண்டாம் என்றே தீர்மானித்துள்ளேன். இறைபணியில் மூழ்கியுள்ள எனக்கு அரசனுக்கு இணையாக தர்ம சாசன சபையில் இடமளித்து. உரிய கௌரவத்தை மாமன்னர் கொடுத்ததே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இவ்வளவு உயரிய மரியாதை கிடைக்கும்போது வேறென்ன தேவைப்படும் எனக்கு.”

“எனக்கு தந்தையாகவும் தாயுள்ளம் கொண்ட சகோதரனாகவும் இருந்து நாட்டினைப் பொற்கால ஆட்சியாகப் பார்போற்ற நடத்திவரும் அருள்மொழிவர்மரின் இந்த அத்தியாயத்தில் நானும் ஒரு பத்தி வாரியாக தொடர்கிறேன் என்று நினைத்தால் பெருமையாக தான் உள்ளது ஆதித்தா.” என தனது வரலாறை முழுவதுமாக எடுத்துரைத்த கண்டராதித்தர். வீரம்மிக்க தனது தந்தையின் வலிமையை நினைவு கூர்ந்து. பின்னால் உட்கார்ந்திருந்த ஆதித்தனை திரும்பிப் பார்த்தார்.

இவ்வளவு நேரமாக ஒரு பிரளயத்தையே நேரில் கண்டதுபோல பிரமை உண்டானது ஆதித்தனின் உள்ளத்தில்.

திரும்பிய கண்டராதித்தன், “ஆதித்தா… ஆதித்தா… உடல்தான் இங்குள்ளது போலும். மனது ரெக்கை கட்டி பறக்கிறதோ” என கேட்க. நிதானத்திற்கு வந்த ஆதித்தன்.

“கண்டராதித்தரே… என் விழிகளே நம்ப முடியாத ஒரு வரலாற்று சரித்திரத்தையே கணப்பொழுதில் சொல்லிவிட்டீர்கள் போங்கள். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் என் செவிகளில் வந்து சேரும்போது, மனதில் அந்தப் பிம்பங்கள் நிழலாடியதைக் காண முடிந்தது, அந்தப் பிம்பத்திலிருந்து இப்போதுதான் விடுபட்டுள்ளேன்” என ஆதித்தன் பேசி முடிக்கவும்.

ராஜராஜ சோழரின் லட்சுமி விலாசத்திற்கு அருகே குதிரை நெருங்கவும் சரியாக இருந்தது. பெரு வாயிலருகே வந்தடைந்த வெள்ளை புரவியில் இருந்து எகிறி கீழே குதித்த ஆதித்தன். கண்டராதித்தனுக்கு இறங்க கைக்கொடுத்து உதவி செய்தான். வாயிலில் நின்றிருந்த காப்போன் ஒருவன் ஓடிவந்து, குதிரையின் மூக்கு கயிற்றைப் பிடித்து ஓரமாக ஓட்டிச் சென்றான். வாயிற் படியில் காலடி எடுத்துவைத்த ஆதித்தனின் கண்கள், மீட்டாத அந்த அழகு வீணையை மிரட்சியோடு தேடியது. அந்த விழிகளில் தெரிந்த பதைபதைப்பை கண்ட கண்டராதித்தன்,

“உள்ளே போகலாம் ஆதித்தா…” எனக் கூற. சுய நினைவுக்கு வந்தவன் சோழப் பேரம்பல இல்லத்திற்குள் நுழைந்தான். உள்ளே பெரிய தூண்களுக்குப் பின்னால் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதுபோல, பல குரல்கள் கேட்டன. இவனுக்கோ… மாடத்தில் மலர்ந்த மல்லிகையை காண மனம் துடித்தது. இவர்களைக் கண்டதும் அங்கிருந்தவர்களின் இரைச்சல் சத்தம் தீடீரென நின்றது.

“ஆதித்தா! உனது வருகையால் அனைத்தையும் மெய்மறந்தேனப்பா…” என மலையமான் தேவர் இரு கைகளையும் உயர்த்தி வரவேற்று, “இந்த சோழநாட்டின் ஊர்தோறும் நகரந்தோறும் நாடுதோறும் உம் புகழ் பரவ வேண்டும்” என்று ஆசீர்வதித்தார்.

தேவரின் காலடியில் விழுந்து வணங்கிய ஆதித்தன், “உங்கள் எண்ணம் ஈடேறும் வகையில் என்னுடைய செயல்பாடு இருக்கும் பாட்டனே” என்று தலைகுனிந்து வணங்கி விடை பெற்றான்.

அருகிலே அமர்ந்திருந்த மற்ற மூத்த முன்னவர்களைக் கண்டு அவர்களிடம்‌ சென்றான் ஆதித்தன். திடீரென ஆதித்தனின் தோளில் யாரோ கை போட்டதுபோல உணரந்து திரும்பி பார்க்க, அருகில் நின்று கொண்டிருந்தான் இளவரசன் ராஜேந்திரன்.

“மும்முடிச் சோழனின் களிறு என்று பார் போற்றும்! கங்க மண்டல தனாதிகாரியான பட்டத்து இளவரசன் ராஜேந்திரனா தனது தோளில் கை போட்டுள்ளார்” என்று ஒரு நாழிகை நிசப்தமானான் ஆதித்தன்.

“ரங்கமஞ்ச ஆதித்தா… நிலா முற்றத்தில் இருந்து இங்குவர இவ்வளவு நேரமா…” என ராஜேந்திரன் கேட்க.

கண்டராதித்தன் முந்திக்கொண்டு, “ராஜேந்திரா…. வரும் வழியில் எனது தந்தை உத்தமசோழரைப் பற்றி ஆதித்தன் கேட்க… அவரின் கதையை சொல்லிக்கொண்டு வந்ததில் நாழிகை கழிந்தது தெரியவில்லையப்பா” என்றார்.

“உத்தம சோழரைப் பற்றி பேசுவதென்றால் யுகம் காணாதே கண்டராதித்தா” என்றது ஒரு குரல்.  திரும்பிய திசையில் நின்றிருந்தார் வந்தியத்தேவன் தொடர்ந்து,

“குதிரையில் பயணித்த நேரத்திலா அவ்வளவையும் சொல்லிவிட்டீர்கள்?” என கேட்க.

“ஓராயிரம் யுகமானாலும் சொல்லி முடிக்க முடியாது எனது சிற்றப்பனின் வலராற்றை” என்றார் அருகிலிருந்த குந்தவை தேவி.

“ஆம் தேவியரே. ஒரு நாழிகையில் சொல்லக்கூடிய கதையல்ல அது. இருப்பினும் சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் பட்டியலிட்டேன்” என்றார் கண்டராதித்தன்.

“தேவருக்கு பின்னாலிருந்து வந்த கொடும்பாளூர் வேளிர். வந்தியத்தேவர் பெற்றெடுத்த பாளைய தளபதி ஆதித்தா. சிவனின் அருளால், எல்லாம்வல்ல சுகங்களை பெற்று நீடூழி வாழ்வாயாக” என்று வாழ்த்தினார். தடி ஊன்றிக்கொண்டு நடந்துவந்த அவரது அருகில் சென்று பாதத்தில் விழுந்து வணங்கி எழுந்தான் ஆதித்தன்.

அருகிலேயே ராஜேந்திரன் புன்னகைத்தபடி நின்றிருக்க. “மாலை உடற்பயிற்சி மனதுக்கு நல்லதென்பர். நமது அத்தையின் மைந்தனுக்கு காலில் விழுந்து வணங்கும் சாக்கில் உடற்பயிற்சி செய்கிறார் போலும் அப்பா” என்று கூற…. அருகிலிருந்த தந்திசக்தி தேவியார். “ராஜேந்திரா…. நம் மூத்த குடும்ப தலைவர்களை இப்போதுதான் ஆதித்தன் பார்க்கிறார். வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதை கேளி செய்யாதேயப்பா” என்று கூற. “அன்னையே. நான் ஆதித்தனை கேளி செய்யவில்லை. இந்த மூத்தோருக்கு முன்னமேயே நான்கிட்டே வந்துவிட்டேன். ஆனால் ஆதித்தன் என் காலில் விழுந்து வணங்கவில்லையே. நான் வேண்டுமானால் வயதான தோற்றத்தோடு மாறுவேடம் பூண்டு வரவா” என கூற. அருகில் இருந்த அனைவரும் கல கல வென சிரித்தனர்.

ராஜராஜன் மெல்ல எழுந்து ஆதித்தன் அருகில் வந்து, “சோழ சிம்மாசனத்தில் சிங்கம்போல சூரிய சத்திரிய குலத்தில் உதித்த ஆதவனாக நீ வலம் வர வேண்டும் ஆதித்தா…. குலக்கொழுந்தாக, மலர்ந்த குங்குமத் தமிழாக, பாரெங்கும் பவனி வர இந்த அரையன் ராஜராஜனின் வாழ்த்துக்கள்” என்று கூற அருகிலிருந்த அனைவரும் வாழ்த்தியது.

“பார் மகிழ வாழும் பழையாறையில், ஒன்று சேர்ந்து அருள்பாலிக்கும் மேற்றளி, வடதளி, தென்னீசன் தளி, பட்டீச்சரம், தரிசக்தி முற்றம்.” அருள்மொழி தேவேச்சுரம் ஆகிய அனைத்து ஆலயங்களும் ஒன்று சேர்ந்து வாழ்த்துவது போலிருந்தது ஆதித்தனுக்கு. ஆதித்தன் காதில் பிரணவ மந்திரம்போல அங்கம்மா தேவியின் பெயர் திரும்பத் திரும்ப கேட்டது, ஆதித்தன் முகத்தில் செம்மையொளி பளிச்சிட மேனி சிலிர்க்க மெய்யெல்லாம் உருக அருள்தேவியை காண துடித்தது மனது. அருகிலிருந்த ராஜேந்திரன். “பாளைய தளபதி… இந்த தஞ்சையின் அரண்மணையில் எனக்கினையாக பேசிக்கொள்ள ஆளில்லையே என்று தவித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீர் வந்தீர்” என ஆதித்தனிடம் கூற.

“தங்களுக்கு பக்கபலமாக இருக்க ஏழேழு ஜென்மங்கள் காத்திருக்கிறேன் இளவரசே!” என்றான் ஆதித்தன்.

“போச்சுடா. என்னைச் சுற்றி இருப்பவர்கள்தான் என்னிடம்‌ ராஜாங்க தோரணையில் பேசுகின்றனர் என்றால் நீயுமா…!” என்று ஆதித்தனின் முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டான் இளவரசன் ராஜேந்திரன்.

“ஆ… இளவரசே… உங்கள் பலத்திற்கு முன்னால் என் புஜம் ஈடாகுமா!” என்று வலிப்பதுபோல பாசாங்கு செய்தான் ஆதித்தன்.

மான் விழி கண்ணழகி. மீன் போல இடையழகி. வண்ணமயில் நடையழகி. வானத்தின் நிறத்தழகி என ஆதித்தனின் விழிகளில் வலம்வந்த அங்கம்மா தேவி. பெரிய தூணுக்கு அருகில் நின்று ஆதித்தனை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் இருந்த தோழியர்கள்: “தேவி… தேவி…” என பலமுறை அழைத்தும் பேச்சில்லை இளவரசியிடம்.

“அது சரி. அந்தக் காவிரியே கரைபிரண்டு வந்தாலும் கன்னி இவளின் கனவைக் கலைக்க முடியாதுபோல” என கொடும்பாளூர் இளவரசி கூற அருகில் இருந்த தோழியர்கள் “ஆமா… ஆமா…” என்று கலகலவென சிரிக்க ஆரம்பித்தனர். சுயநினைவுக்கு வந்த இளவரசி. “ச்சீ… போங்கடீ…” என்று பொய்க் கோபமுற்று முகத்தை மூடிக்கோண்டு முற்றத்திற்க்குள் ஓட. அவளைப் பின் தொடர்ந்து தோழியர்கள் ஓடினர்

இளஞ் சிட்டுக்களின் ரீங்காரத்தைக் கண்ட ராஜராஜனும் மற்ற குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கதிரவனின் ஒளியில் சந்திரனின் ஒளியும் கலந்ததுபோல இரண்டறக் கலந்த சந்தோசத்தில் திளைத்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு வந்த பெரியோர்கள் ராஜராஜனின் இல்லத்திற்க்கு வந்து வாழ்த்தியும் வாழ்த்துக்கள் பெற்றும் சென்று கொண்டிருந்தனர். அதன்படி கோடும்பாளூர் வேளிர். மலையமான் தேவர் என அனைவரும் ராஜராஜனின் இல்லக் காரியங்களை சுகபடுத்திக் கொண்டு புறப்பட்டனர்.

ஆதித்தன் தோள் மீது கை போட்டபடி பேசிய இளவரசன் ராஜேந்திரன், “ஆதித்தா. சந்தோஷம் பொங்க நம் குடும்பம் இப்படி இருப்பதைப் பார்த்து வெகு காலமாகிறது. நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில் எனது தந்தையும் நாடுநாடாகச் சுற்றி பல அனுபவங்களைப் பெற்ற நானும் குடும்பத்தோடு உண்டு உறங்கி பல காலமாகிறது. இன்று உன் தயவால் அனைவரும் மகிழ்ச்சியானத் தருணத்தை அனுபவித்துக் கொண்டிருகக்கிறோம். நீ மேன்மேலும் வளர்ந்து இந்தக் குடும்பத்தின் சந்தோஷத்தை பெருக்க வேண்டும்” என்று நா தழுதழுக்க பேசினான் இளவரசன்.