கவிதா சொர்ணவல்லி: தாயை எழுதிய மகள்

அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகுகாலத்துக்குத் தெரியாது. எனக்கு அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா என்பதைத் தவிர. ‘வாட் இஸ் யுவர் ஃபாதர் நேம்? என்ற கேள்விகளினால் அப்பாவுக்குப் பெயர் உண்டு என்பது நன்றாகவே தெரிந்து இருந்தது. அம்மாவைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். ஆனால் அடிக்கடி கேட்டு நினைவில் பதியவைத்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

எனத் தொடங்கி,

ஊரிலிருந்து கிளம்பிவந்து அம்மாவைத் தேடினேன். தோட்டத்தில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் எங்கோ. எதை நினைத்துக் கொண்டிருப்பாள் இப்போது? தொலைத்ததை எல்லாமா? தெரியவில்லை.

“பொசலு.. யேய் பொசலு தாயோவ்” என்றேன்.

சடக்கென்று தலை திரும்பிய அம்மாவின் கண்ணில் ஓராயிரம் சூரியன்களின் ஒளி தெரிந்தது.

என முடிகிறது கவிதா சொர்ணவல்லி எழுதிய ‘அம்மாவின் பெயர்’ எனத் தலைப்பு வைத்துக்கொண்ட கதை. தலைப்பில் இருக்கும் அம்மாதான் எழுதப்படும் அம்மா. அந்த அம்மாவை அப்படியே கதையை எழுதிய கவிதா சொர்ணவல்லியின் அம்மா என்று சொல்லிவிட வேண்டியதில்லை. அப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த அம்மாவின் கதையைச் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட மகளின் பெயர் பாரிஜாதம். இந்தப் பாரிஜாதம் என்ற பெயர் கவிதா சொர்ணவல்லியின் கதைகளில் திரும்பத் திரும்ப வரும் பெயராகவும், அவளது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரவருணிக் கரையிலிருக்கும் கிராமமொன்றாக இருப்பதால் அந்தப் பாரிஜாதம் தன்னையொத்த இன்னொருத்தியாக உருவாக்கப்படும் புனைவுக் கதாபாத்திரம் என்பதாகவும் வாசிக்கலாம்.

அம்மாவின் பெயர் என்னவென்று தெரியாமலேயே 27 வயதைக் கடந்துவிட்ட அவளது பெண்ணாக வரும் பாரிஜாதத்திற்கு அம்மாவின் பெயரைத் தேடித் தெரிந்தே ஆக வேண்டிய நெருக்கடிக் காரணம் அவளது அம்மாவை ஊரும் உறவினரும் இப்போது பைத்தியம் என்று அழைக்கிறது. எதையும் சொல்லாமல் – பேசாமல் வெறித்துப் பார்த்து நிற்கும் அம்மாவின் பெயர் பைத்தியம் அல்ல; அவளுக்கு உண்மையான பெயரொன்று இருந்தது என்பதைச் சொல்லியாக வேண்டும் என்று ஆவேசம் அதற்காகவே அம்மாவின் பெயர் என்னவாக இருக்கும் என்று தேடலைத் தொடங்குகிறாள் மகள் பாரிஜாதம். அவள் தன்னைப் பைத்தியக்காரியாக ஆக்கிக்கொள்ளக் காரணமே அவளது அழகுதான் என்பதை உணர்ந்தவள் மகள் பாரிஜாதம். அவளுக்கே அம்மாவின் அழகின்மீது பொறாமை இருந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்கிறாள் பாரிஜாதம்.

அம்மா… எல்லாருடைய அம்மாவையும்போல அவளும் அழகானவள்தான். பேரழகி. கண்ணை உறுத்தாத மெலிதான ஆனால் பொறாமை ஏற்படுத்தும் அழகி. அவளைவிட அழகாகக் காட்டிக்கொள்ள முயற்சித்து முயற்சித்து தோற்றுப் போனவர்களே அதிகம். அவர்களில் நானும் ஒருத்தி
என்பன அந்த வரிகள். ஒருநாள் , ‘எப்படிம்மா இவ்ளோ அழகா இருக்க? இந்த ஆரஞ்சு கலர் நம்ம குடும்பத்தில யார்கிட்டயுமே கிடையாதே? இத்தனை அழகையும் எங்க இருந்து கொண்டுவந்தேம்மா?’ என்று கேட்டு அவளிடம் பதிலை எதிர்பார்த்த மகள் அவள். அதற்கு அம்மா நேரடியாகப் பதில் சொல்லாமல், ஊரில் எல்லாரும் என்னை ஜெயலலிதாமாதிரி இருக்கிறதாச் சொல்வாங்க. ஆனா எனக்கு ஜெயலலிதாவைவிட சரோஜாதேவிதான் பிடிக்கும் என்று திசை திருப்பியவள். அதற்கான காரணங்களாக சரோஜாதேவியின் பொட்டையும் கொண்டையையும் கொஞ்சல் பேச்சையும் சொல்லித் தனது அழகின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திய அம்மாவுக்கு என்னென்ன பெயர்கள் இருந்தன என்று நினைத்துப் பார்க்கிறாள் பாரிஜாதம்.

பாரிஜாதத்தின் சின்ன வயதில் அம்மாவை வீட்டில் அம்மாவை எல்லாரும் செல்ல்லம்மா என்று அழைத்தது நினைவுக்கு வருகிறது. ஆச்சி, தாத்தா, தியாகு மாமா, ராஜம் அத்தை, சுமதி நர்ஸ், வீட்டு வேலைக்காரப்பாட்டி என எல்லாரும் அழைத்தச் செல்ல்லம்மா என்பது அம்மாவின் உண்மையான பெயர் அல்ல. எதிர்வீட்டு செட்டியார் ஆச்சி ஆசையோடும் இசையோடும் அழைக்கும் செல்லப்பெயர். அதற்குப் பிறகு பாரிஜாதம் பிறந்த வளர்ந்தபோது பாரிஜாதம் அம்மாவாக ஆனாள். பாரிஜாதத்திற்கு ஒரு தம்பி பிறந்து அவனுக்குச் சரவணன் என்று பெயர் வைத்தபோது சரவணன் அம்மாவாக ஆனவள் அம்மா. இவை எதுவுமே அம்மாவின் பெயர்கள் உண்மையான பெயர் அல்ல. மற்றவர்கள் தந்த பெயர். இரண்டு பிள்ளைகள் பெற்றும் குறையாத அம்மாவின் அழகில் மகள் பாரிஜாதத்திற்குப் பெருமை இருந்தது. அணிகலன்களைக் குறைத்து காட்டன் சேலைக்கு மாறிய அம்மாவை அவளது நண்பர்களும் தோழிகளும் அழகம்மா என்று அழைத்ததை நினைவுபடுத்திக் கொண்டாள். அதற்குப் பின்னால் அம்மாவின் அழகு மட்டுமில்லை; எளிமையும் அன்பும் இருந்தன என்பதில் கர்வமும் இருந்தது.

பாரிஜாதம் அம்மாவாக இருந்து சரவணன் அம்மாவாக மாறிய போதும், அழகம்மாவாக வலம் வந்தபோதும் பெயர்கள் மட்டும் மாறவில்லை. ஒவ்வொரு காலத்திலும் அவளது உடைகள் மாறின; உடுத்தும் முறைகள் மாறின. நகைகளும் அவற்றை அணியும் மாறின. அப்படி மாறியது எல்லாம் அவளது விருப்பங்கள் அல்ல. அவளைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுகளும் பொறணிகளும்தான் அப்படி மாற்றம் அடையச் செய்தன. பாரிஜாதம் கல்லூரிக்குப் போனபோது மாறாத இளமையை வம்படியாக மாற்றி வயதானவள் என்று காட்ட விரும்பியவள், தனது நீண்ட தலைமுடியை வெட்டிக் குறைத்துத் தனக்குள் குற்றவுணர்வைத் தேக்கிக் கொண்டவளாக ஆனாள் என்கிறாள் மகள் பாரிஜாதம். அந்தக் குற்றவுணர்வுதான் அவளை மனநிலை தப்பியது எனச் சொல்லிவிட்டு இந்த அழகிய அம்மாவுக்குப் பெயர் ஒன்று இருந்திருக்குமே என்று தேடிப்போகிறாள் மகள்.

எதிர்வீட்டுச் செட்டியார் அம்மாவின் செல்ல்லம்மாவாகவும் பாரிஜாதம், சரவணன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் அம்மாவாகவும், நண்பர்களின் – தோழியர்களின் அழைப்பில் அழகம்மாவாகும் இருந்த தனது அம்மா என்ற பாத்திரத்திற்கு என்ன பெயர் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை இந்த வீட்டில். அவளது தந்தையின் மனைவியாக இருந்த அவளுக்கு உரிய பெயரோடு ஒரு ஆதாரத்தை அவரும் உண்டாக்கவில்லை என்பதை அறிந்து அந்தப் பெண் அம்மா, மனைவி என்ற பாத்திரங்களைத் தாங்கியதற்கு முன்பு இருந்த பாத்திரங்களின்போது – தாத்தாவின் மகளாக இருந்தபோது அவளுக்கு என்ன பெயர் இருந்திருக்கும் என்று தேடிப்போகிறாள். அந்தத் தேடலில் கிடைத்த பெயர் திராவிடச் செல்வி. தாத்தாவின் வீட்டில் அவள் தேடிய மூன்று டிரங்குப் பெட்டிகளில் இருந்த ஆதாரங்கள் அம்மாவின் உண்மைப் பெயரான திராவிடச் செல்வி என்பதை மட்டும் சொல்லவில்லை. அவள் பேச்சுப்போட்டி, கவிதை, ஓவியம், பாடல் எனக் கலைப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றவள் என்பதைச் சொல்கின்றன. அந்தச் சான்றிதழ்களில் தான் அம்மாவின் பெயர் செல்வி. திராவிடச் செல்வி என எழுதப் பெற்றிருந்ததைக் கண்டு மகிழ்கிறாள். அதற்கும் மேலாக அவளின் அம்மா ஒரு இலக்கிய வாசகி என்பதையும் அறிகிறாள். ஒரு டிரங்குப் பெட்டியில் ஜெயகாந்தன், லா.சா.ரா,. அசோகமித்திரன் ஆகியோர் எழுதிய நாவல்களோடு சோவியத் யூனியனின் மாஸ்கோ பதிப்பக மொழிபெயர்ப்பு நூல்களும் ஸ்புட்னிக் இதழ்களும் இருந்ததைக் கண்டு தனது அம்மா, இந்த ஊரிலிருந்து தனது தந்தையின் மனைவியாகி, தனக்கும் சரவணனுக்கும் அம்மாவாக ஆனதால் தொலைத்த வாழ்க்கையையும் நினைத்துக்கொண்டே வந்தவளுக்கு தனது தேடலின் முடிவு அம்மாவின் வாழ்க்கையின்மீதான பரிவும் ஆதங்கமும்கூட உடனடியாகக் கிளம்பியவளைத் தடுத்து நிறுத்தி திராவிடச் செல்விக்கு அந்த ஊரில் இன்னொரு பெயரும் இருந்ததை உணர்த்துகிறது இன்னொரு குரல். அந்தக் குரலுக்குரியவள் பொலமாடி பாட்டி.

சின்னவயதில் தன்னைப் பார்த்திருந்த பொலமாடி பாரிஜாதத்தைப் பார்த்து ‘யாரு இது பொசலு மகளா’ என்று கேட்க, இல்லை நான் ‘ திராவிடச் செல்வி மகள் பாரிஜாதம்’ என்கிறாள். திராவிடச் செல்வியா? அது ஏது புதுப்பேராக இருக்கு. உங்க அம்மையோட பேரு பொசலு என்று சொல்கிறாள். தொடர்ந்து இருவரும் நட த்திய உரையாடலை இப்படித் தருகிறாள்:

அசலு பொசலு தாயி

ஆரஞ்சு கலரு தாயி

தங்கம் யாரு தாயி

எங்க பொசலு தாயி

என்று சிரித்தவள் கண்களில் திடீரென கண்களில் ஒரு துளி.

“எப்படி இருக்கா உங்க அம்மை எங்க பொசலு” என்றார்.
அது என்ன பொசலு என்றேன்

அவ பொறக்கும்போதே பொசலு மாதிரி பொறந்தா. அத்தன வேகம். வலிகூட வரல. அதுக்குள்ள இவவந்து குதிச்சிட்ட வெளில. உங்க ஆச்சி வயித்துல இருந்து வந்துட்டா..

வளரும்போதும் பொசலுமாதிரிதான் வளர்ந்தா… என்னா வேகம்… பத்து வயதிலேயே இருபது வயசுக்கு அறிவு இருக்கும் இல்ல அவளுக்கு, அப்படியே அதே வேகத்துல போயிட்டா எங்கள விட்டுவிட்டு ஆச்சி சொல்லச்சொல்லப் புரிந்தது. அம்மா புயல் போல இருந்திருக்கிறார். இதுதான் அந்தப் பெயர்.

திராவிடச் செல்வி என்று எழுதப்பெற்ற பெயருக்குப் பின்னால் அவளது ஊரில் – இளமைக்காலத்தில் ஊரார் வைத்த பெயர் – பிறந்த பிறப்பிலிருந்தே வந்த பெயர் புயல் என்பதைத் தெரிந்துகொண்ட பின் பாரிஜாதத்தின் மனநிலையைக் கவிதா சொர்ணவல்லி,

“எங்கோ அறுந்து பறந்துகொண்டிருந்த காத்தாடி நூலின்முனை என் சுண்டுவிரலுக்குள் வந்து சிக்கியதுபோல் இருந்தது”

அம்மாவின் பெயரைத் தேடும் விதமாக எழுதப்பெற்ற இந்தக் கதை இந்தியப் பெண்களின் இருவேறு வெளிகளில் -இருவேறு பாத்திரங்களைப் பற்றிய வேறுபாடுகளைத் துல்லியமாகக் காட்டுகிறது.

திருமணம் என்னும் ஆக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்குப் பின் பெண்களுக்குக் கிடைக்கும் பாத்திரங்களின் பெயர் மனைவி. அப்புறம் அம்மா. அதன்பிறகு பாட்டியாகலாம். திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணின் பாத்திரமாக இருப்பது மகள். மகள் என்னும் பாத்திரமாக ஒரு குடும்பத்தில் இருக்கும் அவளுடைய திறமைகளையும் சுதந்திரத்தையும் தடுப்பவர்கள் குறைவு. மகளாக இருக்கும்போது அவள் மாணவியாக இருக்கிறாள். மாணவப்பருவத்தில் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். விரும்பிய நூல்களைப் படிக்கலாம். திராவிடச் செல்வியாகப் பலவற்றையும் படித்தாள்; பலபோட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறாள். அத்தோடு தனது அறிவின்மூலம் அந்த ஊரின் பொதுவெளிக்குத் தேவையான செயல்பாடுகளில் ஈடுபடலாம். அப்படித் துள்ளித்திரிந்த பெண்ணுக்கு ஊரார் தந்த பெயர் பொசலு.

வேறுபாடுகளை உருவாக்கும் நிகழ்வாக இருப்பது திருமணம். திருமணம் என்னும் நிகழ்வே பெண்ணொருத்தியைக் குடும்பப் பொறுப்புள்ளவளாக மாற்றுகிறது என்று மரபான நம்பிக்கைகளும் சமூகத்தின் இருப்பும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நடப்பில் பெண்ணின் திறமைகளையும் அழகையும் அறிவையும் அழித்துத் தொலைத்துவிடத் தூண்டும் ஒன்றாக இருக்கிறது என்பதைத் துல்லியமாக எழுதிக் காட்டியுள்ளார் கவிதா சொர்ணவல்லி.

அம்மாவின் பெயர் கதையை நம்பகத்தன்மை கொண்ட கதையாக வாசிப்பவர்களுக்குத் தருவதற்குக் கவிதா சொர்ணவல்லி உருவாக்கிய சொல்முறை முன்னிலைக் கூற்று முறை. முன்னிலைக் கூற்றுமுறையில் சொல்லப்படும் கதைகளில் சொல்லப்படுபவரும் சொல்பவரும் சம அளவில் இடம்பெறும்போது இரண்டு பாத்திரங்களும் அதனதன் இயல்பைக் காட்டுபவர்களாக அமைவார்கள். அப்படியில்லாமல் சொல்பவர்களின் இருப்பைக் குறைத்துக்கொண்டு சொல்லப்படும் பாத்திரத்தை விரிவாக எழுதிக் காட்டுவதும் உண்டு. பெண் எழுத்துகளில் பலரிடம் இந்தத் தன்மை உண்டு. அப்படி எழுதும்போது எழுதும் பெண்களின் கோணம் எழுதப்படும் பெண்களின் பாத்திரங்களை லட்சியப்பாத்திரங்களாகவே – எதிர்நிலைப்பாத்திரங்களாகவே ஆக்கிவிடுவதுண்டு. அத்தகைய பாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையற்ற பாத்திரங்கள் என்ற குற்றச்சாட்டு எழும்போது மறுத்துச் சொல்ல கதைகளில் அகச்சான்றுகள் எவையும் இருக்காது.

***

கவிதா சொர்ணவல்லி முன்னிலைக் கூற்று முறையில் சிறப்பான கதைகளை எழுதுபவர் என்பதற்கு இன்னொரு கதையையும் காட்ட முடியும். அந்தக் கதையின் தலைப்பு; டிரங்குப் பெட்டி புகைப்பட பெண். அந்தக் கதையைப் பொன் வாசுதேவன் தொகுத்த விளிம்புக்கு அப்பால் (மே,2017) தொகுப்பில் வாசிக்கலாம். புதிய படைப்பாளிகளின் சிறுகதைகளாகத் தொகுக்கப்பெற்றுள்ள இடம் பெற்றுள்ள அந்தக் கதையும் கதை நிகழும் வெளியாலும், கதையின் ரகசியத்தை மூடி வைத்திருக்கும் பொருளாக டிரங்குப் பெட்டியைக் கொண்டிருக்கிறது என்பது சுவாரசியமான ஒன்று.

சாதிய வேறுபாடுகள் கூர்மையாக வெளிப்படும் – சாதிக்கலவரங்களைக் கொண்டாடும் திருநெல்வேலி மாவட்டப் பின்னணியில் அந்தக் கதை நாலாஞ்சேரிப் பையன், மேலத்தெருக்காரப் பெண்ணொருத்தியைக் காதலித்துத் தோல்வியுற்ற துன்பியல் கதையைச் சொல்கிறது. அந்தக் கதையைச் சொல்லும் பெண்ணாக இருப்பவள் அந்தப் பையனின் – வள்ளி மச்சானின் முறைப்பெண்ணாக இருப்பவள். நகரத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்தாலும் கோடை விடுமுறைக்குத் தாமிரபரணிக் கரைக் கிராமத்துக்குப் போய் வருபவள். இப்போது அமெரிக்காவில் இருக்கும் அவளது நண்பனோடு ‘பேஸ்புக் சாட்டில்’ பேசும் நவீனப்பெண். தனது பேவரைட்டான ‘மெரில் ஸ்ட்ரீப்’ நடித்த “ ப்ரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கவுன்ட்டி” படம் பார்த்தபோது தனது வள்ளி மச்சானின் கதை நினைவுக்கு வந்ததாகச் சொல்லுகிறாள்.
முன்னர்ச் சொன்னதுபோல் முன்னிலைக் கதை கூற்றுமுறையின் நம்பகத்தன்மையை –சாதிய மனம் கொண்டோர் உண்டாக்கும் அச்ச உணர்வின் தீவிரத்தையும் சாதிய வெளிகளில் நிலவும் வேறுபாடுகளையும் இந்தக் கதையிலும் வாசிக்கலாம்.

அம்மாவின் பெயர் எனத் தலைப்பு வைத்துக் கவிதா சொர்ணவல்லி ஆனந்தவிகடன், பெப்ரவரி, 2011 இல் எழுதிய கதையை சிறுகதைகள் இது உங்களுக்கான தளம் இணையதளம் டிசம்பர், 7, 2012 இல் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த இணையத் தளத்தில் கவிதா சொர்ணவல்லியின் 7 கதைகள் கிடைக்கின்றன. http://www.sirukathaigal.com/.

கவிதா சொர்ணவல்லி எழுதிய கதைகள் அனைத்தும்  ‘பொசலு’ என்ற சிறுகதைத் தொகுப்பாக சமீபத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.

முந்தைய தொடர்: https://bit.ly/2HaGPk1