வேலியிடப்பட்ட குடும்பங்கள்

வேலி என்னும் சொல்லுக்குச் சொத்து, எல்லை, வரையறை, பாதுகாப்பு எனப் பருண்மையான பொருள்கள் உண்டு. நாலுவேலி நிலம், பயிரை மேயும் வேலிகள், வேலிதாண்டிய வெள்ளாடு எனச் சொற்கோவைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சொற்கோவைகள் பால் வேறுபாடின்றி இருபாலாருக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால் தாலியே வேலி எனச் சொல்லும்போது பாலடையாளம் பெற்று பெண்ணுக்குரியதாகச் சொற்கோவை மாறி நிற்கிறது. வேலியாக மாறும் தாலிதான் பெண்ணுக்குப் பெரிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் கருத்தியல் தோற்றத்தின் – பரப்பின் – இருப்பின் கருவியாக மாறிப் பெண்களைச் சுற்றி வலம் வருகிறது.

ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை ஏற்றுக்கொள்ளும் சடங்கே திருமணம். தாலிக்குப் பதிலாக மோதிரம் அணிவதை வழக்கமாக ஒரு சமயம் பரிந்துரை செய்யலாம். பெரும் சடங்கின் வழியாக ஏறிய தாலியை / மோதிரத்தை இடம் மாற்றம் செய்வதைப் பற்றிப் பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கருத்தியல் திணிப்புகளும் நம்பிக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தாலியை ஏற்றுக்கொண்டதின் அடையாளம், தாலியின் வடிவங்கள்,   தாலியோடு இருப்பதன் பெருமைகள், தாலியைக் கழற்றுவதின் காரணங்கள், தாலியறுத்தவள் நிலைகள், தாலியிழப்புக்குப் பின்னால் தொலைந்துபோன வாழ்க்கை என நம்பிக்கைகளும் இலக்கியங்களும் பேசி உருவாக்கி வைத்துள்ள கருத்துக்கள் ஏராளம். இக்கருத்துகளை ஏற்று வாழ்தல் என்பது குடும்பத்திற்குள் வாழ்தலின் இயங்குநிலை.

தாலியை/ குடும்பத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள  கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலைப்பாடு பெண்ணியத்தின் தொடக்கம். இதனால் பெண்ணியம் முதன்மையாகக் குடும்ப அமைப்பை விசாரணைக்குரிய அமைப்பாகக் கருதுகிறது. அந்த விசாரணையில் பல கட்டங்கள் உண்டு. அக்கட்டங்களின் பார்வைக்கோணத்திற்கேற்பப் பெண்ணியத்தின் படிநிலைகளும் மாறுகின்றன.  இப்போதுள்ள அதே இறுக்கத்துடன் குடும்ப அமைப்பை நீட்டிக்க வேண்டியதில்லை. பெண்களின் பாடுகளைப் புரிந்துகொண்டு அவளின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் அன்பும் நெகிழ்ச்சியும் நிலவும் எனப் பேசும் தாராளவாதம் அதன் முதல்படி. இந்த முதல் படியிலிருந்து நகர்ந்து கறாரான அளவுகோல்களைக் கொண்டு பால் வேறுபாடுகளற்றுப் பணிகளை குடும்ப வெளியிலும் புறவெளியிலும் மேற்கொள்ளுதலை வலியுறுத்தும் இரண்டாம்படி ஒருவிதச் சமத்துவத்தை முன்வைக்கும் படிநிலை.  இதற்கும் மேலாகத் தனித்திருப்பதையும் தனியாகப் பெண்ணின் உலகத்தை – அகவெளியாகவும் புறவெளியாகவும் பெண்களுக்கே ஆனதொரு உலகத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என நம்புவது மூன்றாவது நிலை. இம்மூன்று நிலைகளுக்குள்ளே வண்ண வேறுபாடுகளே பெண்ணியச் சொல்லாடல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்தியப் பெண்ணெழுத்துகள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெண்ணெழுத்துகள் குடும்பத்தை விசாரணைக்குள்ளாக்குவதின் வழியாகவே தொடங்குகின்றன. அதற்கான காரணம் சமூக உருவாக்கம் குடும்ப உருவாக்கத்தின் பின் விளைவுகளாக இருந்தை முதல் காரணமாகச் சொல்லலாம். ஆணும் பெண்ணும் அவர்களின் வாரிசுகளும் என்பது குடும்ப அமைப்பின் மிகச்சிறிய அலகு. அச்சிறிய அலகின் பின்னால் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்களும் கருத்தியல்களும் பெண்ணுக்குப் பல பாத்திரவார்ப்புகளைத் தருகிறது. அதன் வழியாகப் பெண்ணுக்குப் புனிதங்கள் வந்துசேருகின்றன என்பது குடும்ப அமைப்பின் ஆதரவாளர்களின் வாதம். ஆனால் குடும்ப அமைப்பு பெண்ணை ஒடுக்குகிறது எனவும் அவளது தனித்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது எனவும் பேசும் பெண்ணியவாதிகள் அதன் போதாமையையும் இருப்பையும் பலவிதமாகக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

எல்லாவகையான கதைகளிலும் தனது நோக்கம் அல்லது ஆதரவு என்பதை நேரடியாகக் காட்டாத எழுத்துக்காரர் பாமா. முதல் நெடுங்கதையான கருக்கில் தன்னிலைக் கதைசொல்லல் வழியாகவும் இரண்டாவது நெடுங்கதையான சங்கதியில் முன்னிலைக் கதைக்கூற்று முறை மூலமும் ஏராளமான பெண்களின் இருப்பை முன்வைத்தவர். தனது சொந்த ஊரிலும் வாழுமிடங்களிலும் தான்பார்த்த பெண்களின் நிலையையும் வாழ்க்கை பற்றிய கோணத்தையும் முன்வைக்க விரும்பும் அவரது எழுத்து எப்போதும் முன்னிலைக் கதைசொல்லலை முதன்மையான கூற்று முறையாகக் கொள்கிறது. தொடர்ச்சியான உரையாடல் வழியாகப் பாத்திரங்களைப் பேச அனுமதித்துவிட்டு ஒன்றிரண்டு சொற்களின் மூலம் கதைசொல்லியின் இருப்பைக் காட்டும் எளிய உத்தி அவரது புனைகதை உத்தி. அதன் காரணமாகவே அவரது எழுத்துகள் மனதின் ஆழத்தைப் பேசாமல் மேல்நிலையில் இருக்கும் எண்ணங்களையே உரையாடல்களாக முன்வைக்கின்றன என்ற விமரிசனத்தைச் சந்திக்கின்றன். அமைப்புக்குள்ளும் தனிமனித நிலையிலும் மனிதர்களின் இருப்பு எப்படி இருக்கின்றது என்பதை முன்வைக்கும் நோக்கம் தனது கதைகளில் எளிய மனிதர்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையே வாசிப்பவர்களின் முன்னால் வைக்கிறார்.  அந்த எளிமை காரணமாகவே கதைக்கான காலம், கதைநிகழும்வெளி என்ற இரண்டையும் தேடி வாசிப்பவர்கள் முன்பின்னாகச் செல்லவேண்டியதில்லை. ஒன்றில் தொடங்கி இரண்டு, மூன்று என நேர்கோட்டில் நகரும் நிகழ்வுகளால் ஆனது அவரது கதைகள். அந்த நேர்கோட்டுத்தன்மை வழியாகவே நடப்பின் குரூரத்தைப் பாமா வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறார் என்றால், அதற்கான காரணமாக இருப்பது அவரின் பாத்திரத் தெரிவுகளே. தனது கதைக்குள் உருவாக்கும் பாத்திரங்களைப் பாதிக்கப்பட்ட பாத்திரங்களாகத் தெரிவு செய்துவிட்டு, அந்தப் பாதிப்பை உருவாக்கும் மனிதர்கள் அல்லது அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை உணரச் செய்கிறார்.

தாலியை மையமிட்ட திருமணம் என்னும் நிகழ்வு ஆண் -பெண் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என நம்பப்படுகிறது. அந்நிகழ்வின் வழியாகப் பெண்ணுக்கும் ஆணுக்கும் உடல்சார் இன்பம் கிடைக்கிறது; அவ்வின்பத்தின் தொடர்ச்சியாகவே உலகத்தின் இருப்பை நீட்டிக்கும் மனித  உற்பத்தி நடக்கிறது எனவும் சொல்லப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க இச்செயலைக் கட்டுப்பாட்டுடன் தொடர்வதற்கான அமைப்பாகவே குடும்பம் இருக்கிறது எனச் சமய நூல்கள் வலியுறுத்துகின்றன. குடும்ப அமைப்பு, பெண்ணுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பையும் தருகிறது என்று பேசுகின்றன அறநூல்களும் அமைப்புகளும். ஆனால் இலக்கியங்கள் இந்த நம்பிக்கைகளின் மீது சந்தேகங்களை எழுப்புகின்றன. அதிலும் பெண்ணெழுத்துகள் இவை வெற்று நம்பிக்கைகள் என நிறுவ முயல்கிறன.  என்பதோடு, பெண்ணுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பைக் குடும்ப அமைப்பு தருவதாகச் சொல்வது எவ்வளவு பெரிய மோசடி எனவும் கேட்கின்றன.

இரண்டு தொகுதிகளாகக் கிடைக்கும் பாமாவின் சிறுகதைகளில் முள்வேலி எனத் தலைப்பிட்ட கதை எளிய கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையில் திருமணம் என்னும் புனிதமான – பாதுகாப்பு தரும் நிகழ்வு என்னவாக இருக்கிறது என்பதை முன்வைக்கின்றது. திருமண நாளில் கட்டப்பட்ட தாலியைக் கழற்றவேண்டிய நாள் கணவனின் இறப்பு நாள். அவன் இருக்கும்வரைதான் தாலியும் இருக்கும்; அவன் இல்லையென்றால் அவளது கழுத்தில் தாலியும் இருக்காது. தாலியறுக்கும் சடங்கைச் செய்து இறக்கிவிடுவார்கள். தாலி இருக்கும்போது இன்னாருடைய மனைவி என்ற அடையாளத்தோடு இருப்பவள் தாலியை அறுத்த பின் ‘முண்டச்சி’ என அழைக்கப்பட்டு எல்லா நிகழ்வுகளிலிருந்தும் விலக்கிவைக்கப்படுவாள். இது பெரும் தண்டனை. இந்தத் தண்டனைக்கு – சமூகம் வழங்கும் ஆகப் பெரும் ஒதுக்குதலுக்குப் பயந்துதான் முள்வேலி கதையின் மையப்பாத்திரம் கனியம்மா கணவன் என்னும் ஆணைச் சகித்துக் கொண்டாள் எனக் காட்டும் வரிகளை எழுதுகிறார் பாமா. கனியம்மாவின் தெருக்காரியும் அவளது தைரியமான முடிவுகளை ஏற்றுக்கொண்டவளுமான இன்னொருத்தியின் கூற்றாக கதையைச் சொல்லும் பாமா, கதை சொல்லியின் இடத்தை -தனதாக்கி -முன்னிலையாக்கி, கனியம்மாவின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

“அதாவது ஊர்ல ஒரு பழமொழி சொல்வாகளே….”

“என்ன பழமொழி?”

“வெயிலுக்குப் பயந்துக்குட்டு வெந்நிப் பானைக்குள்ள விழுந்தது கணக்கா.” 
கனியம்மா கம்முனு இருந்தா.

கனியம்மா இந்தநிலைக்கு ஏன் வந்தால் என்பதே கதை. கனியம்மாவும் அவளது கணவன் மலையப்பனும் ஒன்றாக இல்லை; தனித்தனியாகவே வாழ்கிறார்கள் எனத் தொடங்கும் கதையின் ஒரு முடிச்சாக அமைவது மலையப்பனுக்கு வந்த அந்த நோய். அவனது சிறுநீரகங்கள் பழுதடைந்ததால்  உடல் குறுகி, நடக்க முடியாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்.

“அவருக்கு கிட்னி பெயிலாப் போச்சாம். அத்தோட கொடலு வேற கீழாமெ எறங்கிப் போச்சாம். அதென்னமோ எரனியாவும்ல? அந்த நோயும் வந்துருக்காம். பொழைக்குறது கஸ்டமாம். ஒன்னுக்கே போகலன்னா எப்பிடிக்கூடி பொழைக்க முடியும்? அந்தண்ணனப் பாத்தாப் பாவமா இருக்கு. டவுனு ஆஸ்பத்திரின்னு சொன்னாக. ஆனா எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. அந்தக்கா கனியம்மாதான் கூடப்போயிருக்காக. வேற யாரு போவா? அவுக போகாட்டி இந்த ஊரு ஒலகம் அவுகளச் சும்மா உட்டுருமா?” கேள்வியோட முடுச்சா சந்திரா.

“இந்த பத்து வருசுமா அவுகென்ன புருசம் பொண்டாட்டியாவா இருந்தாக? அந்தக்கா அந்தாள உட்டுட்டு தனியாத்தானெ கெடந்தாக.

ஊரில் உள்ள அனைவரும் போய்ப் பார்க்கிறார்கள். ஆனால் கனியம்மா போய்ப் பார்க்கவில்லை.

“அதெப்பிடி பழசெல்லாம் ஒடனே சட்டுனு மறந்து போக முடியும்? கனியம்மா அவா புருசனப்பத்திச் சொன்னதை எல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தாலும் அந்தாளச் சாவடிக்கனும்னுதான் தோணும். கலியாணமாகி மொதல் நாளுலருந்தே அவா யாருட்டப் பேசுனாலும் சந்தேகம். அசிங்க அசிங்கமா பேசி அடிதடி. கால்காசு சம்பாதிச்சு கொண்டாந்து குடுக்காட்டாலும், இவா எதுனாச்சும் கூலி வேல செஞ்சு வாங்குற காசையும் புடுங்கிட்டுப் போயி ஊத்திக்கிட்டு வந்து மாட்ட அடிக்கிறமாதிரி அடிச்சு தொவச்சு எடுப்பான். அவங்கூட வாழ்ந்த சாட்சிக்குப் பெறந்தது ஒரு பொம்பளப் பிள்ளை. அதக்கூட யாருக்கோ பெத்தான்னு வாய் கூசாமச் சொல்லி அடிப்பான். அந்தப் பிள்ளையையும் அவதான் வளத்து, ஆளாக்கிட்டு வாரா. கண்ணெதுர இம்புட்டையும் பாத்த இந்த பொம்பளைகளே இப்பிடிச் சொல்றாகளே.

இவளுக வாயிக்குப் பயந்து தான் அவா போயிருப்பா. சே. எப்பிடித்தான் மனச கல்லாக்கிட்டு போறது? அந்தாளு மொகத்துல முழுச்சு, அவங்கூட இருந்து அவனுக்குப் பணிவிடை செய்றது? அவனுக்கு அதுக்கு என்ன தகுதி இருக்கு? இப்பிடியே இந்தாளு செத்துப் போனாக்கூட அவா என்னைக்கும் நிம்மதியா இருந்துட்டுப்போவா. இந்த மஞ்சக் கயத்த ஒன்னக் கட்டிட்டுத்தான காலம்பூராம் கொத்தடிமைக் கணக்கா இருக்க வேண்டியதா இருக்குது.”

காரணங்களும் காரியங்களும் சலிப்பும் வெறுப்பும் கொண்ட கனியம்மா மலையப்பனைப் போய்ப் பார்க்காமல் இருந்தாள். அப்படிப் போகாமல் இருக்கும் கனியம்மாவின் நிலைபாட்டை மனதிற்குள் பாராட்டவும் செய்கிறாள் கதைசொல்லியான அந்தப் பெண். கதைசொல்லியின் நினைப்புக்கு மாறாகக் கனியம்மா மலையப்பன் இருந்த ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அருகில் இருந்து தேவையான உதவிகளைச் செய்திருக்கிறாள். ஆபரேசன் செய்து ஊர் திரும்பியபின் மலையப்பனைப் பார்க்கச் செல்கிறார்கள் ஊரார். கதைசொல்லியான பெண்ணும் அங்கே செல்கிறாள். போகும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது கனியம்மா தான் கணவனோடு இருந்து உதவுகிறாள் என்ற விவரம். இதனால் கனியம்மாவைப் பற்றிய அவளின் எண்ணங்கள் சிதறிப்போகின்றன. இதெப்படி நடந்தது என்ற கேள்விகள் அவளது மனதிற்குள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

கனியம்மாள வீட்டுல காணுமே. எங்க போயிட்டா? நானும் அவளப் பாக்கனும் பாக்கனும்னு இருக்கேன். பாக்கவே முடியலையே…..”

“அந்தக் கொடுமைய ஏங்கேக்குற. அவாள்ளாம் ஒரு பொம்பளையா? அவன அறுத்து, தச்சுக் கொண்டாந்து போட்டுட்டு ஒடனே கௌம்பிப் போயிட்டாளாம். இங்ன இருந்து கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்ல? வந்ததும் வராததுமா ஓடிப் போயிட்டா.” 
“யாருக்கு ஒத்தாசை?”

“யாருக்கா? அவா புருசனுக்குத்தான். கட்டுன பொண்டாட்டிக்கு அக்கர வேண்டாமா?” 
“அதான் வீட்டுல அவுகம்மெ இருக்கா. அவனோட அண்ணந் தம்பி, அக்கா, தங்கிச்சின்னு அம்புட்டுப் பேரும் இருக்காகள்ள. பின்ன என்ன? அம்புட்டுப் பேரு இருக்கைல இவா என்னத்துக்கு? இவ்வளவு தூரம் செஞ்சதே பெரிய காரியம். நானா இருந்தா ஆஸ்பத்திரிக்கே போயிருக்க மாட்டேன். இப்ப கனியம்மா எங்க போயிட்டாளாம்?”

கனியம்மாளின் இடத்தில் தன்னை வைத்துப் பேசும் கதை சொல்லியின் நிலைபாட்டை நிலைகுழையச் செய்த அந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. கணவன் இல்லையென்றால் தலையில் பூ வைக்கும் உரிமையைக் கூட வழங்காத சமூகம் இது. கனியம்மாவைக் குறித்தே அவளைச் சுற்றியிருப்பவர்கள் அப்படித்தான் பேசினார்கள். ஆனால் கனியம்மா அதைத் தைரியமாகச் சமாளித்தவள் என்பதும் இவளுக்குத் தெரியும்.

ஒரு கலியாணத்துல கனியம்மா தலைல பூ வச்சதுக்கே எவளோ சாடமாடையாச் சொன்னாளாம், ‘புருசன் வேண்டாமாம்ஙீ ஆனா பூ மட்டும் வேணுமாம்’. கனியம்மாளும் சும்மா உடல. பதுலுக்கு நல்லாச் சொல்லியிருக்கா, ‘பூவு நானு சின்னப் புள்ளையா இருக்கைல இருந்து வச்சுட்டு வாரேன்ஙீ புருசன் இப்ப எடவழில வந்தவன்.”

அப்படித் தைரியத்தை வெளிப்படுத்திய கனியம்மாவின் இன்னொரு நியாயம் – இந்தச் சமூகத்திற்குப் பயந்தே ஆகவேண்டிய நியாயம் இருக்கவே செய்கிறது. அதனால் அவள் சொல்கிறாள்  

“சாகட்டும்னு சொல்ற. பெறகு ஏம்போயிக் காப்பாத்துன?”

“சத்தியமாச் சொல்றேன். இத உங்கிட்ட தான் சொல்லமுடியும். மத்தவுக கிட்டச் சொல்லமுடியாது. இதுதான் உண்மெ. அவெம் பொழச்சு எந்துருச்சு வரனும்னு எனக்குத் துப்பரவா ஆசையே கெடையாது. ஆனா ஒன்னே ஒன்னுமட்டுந்தான் ஏம்மனசுக்குள்ள ஓடுச்சு” ஏங்காதோரம் மெதுவாச் சொல்லிட்டு நிப்பாட்டுனா.

“என்னது?”

“என்ன தெரியுமா? இவஞ்செத்துப் போனாம்னா, இந்த ஊரு ஒலகத்துல எனிய முண்டச்சின்னு சொல்லி, எந்த ஒரு நல்ல காரியத்துலயும் பங்கெடுக்க உடாமெ ஒதுக்கி வச்சிருவாங்களேங்ற எண்ணந்தான் என்னைய வேதனப் படுத்துச்சே தவுர, வேறெத்த கவலையும் எனக்கில்ல.”

சமூகத்தில் ஒவ்வொருவரின் இருப்பையும் தீர்மானிப்பதில் அவரவரின் நியாயங்கள் மட்டுமே காரணிகளாக இருப்பதில்லை. சமூகத்தின் ஏற்பும் ஒதுக்குதலும் காரணிகளாக இருக்கின்றன. இவை மட்டும் இல்லையென்றால் விடுதலை வேட்கையும் போராட்டங்களும் இருக்கப்போவதில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர்கள் வாழ்ந்து விடுவார்கள். அப்படி வாழ விடாமல் தடுப்பன சமூகத்தின் விதிகளே. மனிதர்களை ஒடுக்கிப் பரவசம் அடையும் சமூக விதிகளை மீறுவதின் முன்னெடுப்புகளே விடுதலையின் பாடுகளாக இருக்கின்றன. முண்டச்சி எனப் பட்டம் சூட்டித் தள்ளிவைக்காது இந்த சமூகம் என்பது உறுதியானால் கனியம்மாக்கள் ஏன் மலையப்பன்களின் அடாவடித்தனத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்.

முந்தைய தொடர்: https://bit.ly/2R8ZKPu