அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில்(என்.ஆர்.சி) பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தீ்ர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல்(என்.ஆர்.சி) தயாரிக்கப்பட்டுள்ளது.

2018 ஜூலை 30இல் வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், இறுதி பட்டியல் இன்று(ஆகஸ்ட் 31) வெளியானது. வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே கூடுதல் வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பெயர் விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்கக்கோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு பெயர்ப்பட்டியல் இணையதளத்தில் வெளியானது. 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பெயர்கள் இறுதிப்பட்டியலில் இல்லை. மேலும் பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதால், அசாம் மாநிலத்தில் பதற்றம் நிலவிவருகிறது. இதன்காரணமாக அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிட்டு தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகம் கூறியதாவது, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அசாம் மக்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இறுதிப்பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் ஒரு நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அனைத்து சட்டப் பூர்வ அம்சங்களும் அவர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்திலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்கள், வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் அது குறித்து முறையிடலாம். பட்டியல் வெளியான 120 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட வேண்டும். அங்கும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாநில அரசு அவர்களை கைது செய்யும் என்று தெரிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு உதவும் வகையில் 1,000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 100 தீர்ப்பாயங்கள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் 200 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளது. தீர்ப்பாயத்தில் ஒருவருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்யலாம்.

என்.ஆர்.சி பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அசாம் காவல் துறை தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவானது அசாமில் முதன்முறையாக 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வங்கதேசத்திலிருந்து மார்ச் 25, 1971ஆம் தேதிக்குப் பின்னர் வந்து குடியேறியவர்களைத் தனியாகப் பிரித்தெடுக்கும் நோக்கத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.