அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று (செப்டம்பர் 3) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.

இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அபாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள்(Apache AH-64E) வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்க நிறுவனமான போயிங் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது.

2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கடந்த ஜூலை 27ஆம் தேதி 4 ஹெலிகாப்டர்கள் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன. இந்நிலையில் இந்த 8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்களும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இன்று பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. மேலும் இன்னும் 10 ஹெலிகாப்டர்கள் விரைவில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எட்டு புதிய அபாச்சி AH-64E தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானப்படையின் போர் சக்திகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கவுள்ளது. ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படுவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

எந்தவொரு மோசமான வானிலையிலும் சிறப்பாகச் செயல்படக் கூடியது இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள். ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதலில் ஈடுபட இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும் என இந்திய விமானப்படைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது