இந்திய நாடாளுமன்றத்திற்கான  தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாகவே நிலவி வந்தது. புல்வாமா தாக்குதல், மற்றும் போர்ப்பதட்டம் காரணமாக தேர்தல் குறித்த காலத்தில் நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இப்போது இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நாடாளுமன்றத்திற்கும், ஆந்திர பிரதேசம்,  சிக்கிம்,  அருணாச்சல பிரதேசம் ஒரிசா ஆகிய நான்கு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.  இதோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது . இந்த தேர்தல் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடைபெறலாம் என்று தெரிகிறது

2014 நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் 5 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. கான்பூர், வாரணாசி, காஸியாபத் உள்ளிட்ட பல இடங்களில் அவரது பிரச்சார பயணம் இந்த வாரம் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தில் பீகார், உத்திர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு முப்பத்தோராயிரம் கோடி  ரூபாய் மதிப்பிலான மின் திட்டங்கள்,  ஐம்பது கேந்திரவித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி, ஒரிஸா –மேற்குவங்கத்திற்குm ஒரிஸாவிற்கும் இடையே 1,866 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்பாதை அமைக்கும் திட்டம் என முப்பது  திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு முன் குஜராத் உள்ளிட்ட சில மாநில தேர்தல்களும் மோடியின் பயணத்திட்டத்திற்கு ஏற்ப தாமதமக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.