பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாக்ஷி மஹாராஜ் வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றால் அவர்களைச் சபிப்பேன் என்றார்.

“நான் ஒரு சன்னியாசி. என்னை நீங்கள் வெற்றிபெற வைத்தால் நான் ஜெயிப்பேன். இல்லாவிடில் நான் கோவிலில் பஜனைகளையும், கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டிருப்பேன். ஆனால் இன்று உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் வீடு முன்பு யாசகம் கேட்டு நிற்கும் ஒரு சன்னியாசியை நீங்கள் விரட்டினால் உங்கள் குடும்பங்களில் இருக்கும் மகிழ்ச்சியை அபகரித்து உங்களைச் சபித்து விடுவேன்.” என்றார்

சாக்ஷி மஹாராஜின் இந்த அறிக்கைக்கு பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை. இவர் உன்னாவோ தொகுதியின் தற்போதைய எம்பி ஆவார். இதற்கு முன்பும் இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் பல முறை பேசி இருக்கிறார். ஆனால் இப்போது எல்லோரையும் அதிர வைக்கும் வகையில் இப்படி ஒரு வினோதமான முறையில் வாக்கு சேகரிக்கிறார்.

உன்னவோ தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெல்வதற்குச் சாக்ஷி மஹாராஜ் கடுமையாக முயல்கிறார். இந்த தொகுதியில் நான்காம் கட்டமாக வரும் ஏப்ரல் 29 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று தெரிந்துவிடும் யார் சாபம் பெற்றார்கள் என்று!