மே 22 தமிழகத்தின் கருப்பு தினம். தமிழகத்தையே உலுக்கிய தினம். தமிழனுக்குத் தமிழனே துரோகம் இழைத்த தினம். தமிழகத்தின் வரலாற்று குறிப்புகளில் எழுதப்பட்ட யுத்தத் தினம். அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிரைக்குடித்த தினம் இன்று. ஆம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவேண்டும் என்பதற்காக நம்முடைய சகோதர, சகோதரிகளை பலிகொடுத்த தினம்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த மக்களின் 100ஆம் நாள் போராட்டம் ஒரு ஓலமாக மாறும் என்று யாரும் அறியவில்லை. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரும் கண்கலங்காதவர்கள் இல்லை. ஒரு நிமிடம் ஈழத்தில் இருக்கிறோமோ என்று கூட என்ன தோன்றியது அன்று.

தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம்

மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கும், சுற்றுப்புற சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக்கோரி 99 நாட்கள் அமைதியாகப் போராடி வந்த தூத்துக்குடி மக்கள், 100ஆவது நாள் (கடந்த ஆண்டு மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எந்த ஆயுதமின்றி நிராயுதபாணியாக அகிம்சை வழியில் போராடிய தூத்துக்குடி மக்களின் மீது, ஆயுதம் ஏந்திய காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் சுவடுகளை தாங்கி நிற்கும் தினம் இன்று.

அன்று துப்பாக்கிச் சூட்டில் மாணவி வெனிஸ்டா ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேரின் உயிர்கள் மண்ணில் சரிந்தது. நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. சிபிஐ இந்த வழக்கினை விசாரித்து வருகிறது.

சீல் வைக்கப்பட்ட ஆலையும் ,உடல்களும்

13 பேரின் உயிரை இந்த ஸ்டெர்லைட் ஆலை குடித்த பிறகே, இந்த ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவுகளும் அவர்களில் வீடுகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அவர்களின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

”அம்மா நான் போராட்டத்திற்குச் சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போன வெனிஸ்டா ஸ்னோலினிடம், ”சீக்கிரம் வந்துவிடு நான் உனக்காகச் சமைத்து வைத்துவிட்டுக் காத்திருப்பேன்” என்று சொன்ன அவரின் அன்னைக்கும், அப்பா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வரும்போது, எனக்கு சாக்லெட் வாங்கிக்கொண்டு வாங்க என்று சொன்ன இறந்தவரின் குழந்தைக்கும் நம்மால் சொல்ல முடிந்தது வெறும் ஆறுதல் மட்டுமே.

நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தப்படுகிறது. தூத்துக்குடியில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்படுவதால், கிட்டத்தட்ட 3 ஆயிரம் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடரும் படுகொலைகள்

தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலையைத் தொடர்ந்து தூத்துக்குடி படுகொலை. கலவரத்தை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என தாமிரபரணி படுகொலைக்கும், பரமக்குடி படுகொலைக்கும் மிகவும் சர்வசாதாரணமாகப் பதில் சொல்லிவிட்டுச் சென்றது தமிழக அரசு. அதே பதிலைதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் சொல்கிறது.

தொடர்ந்து தமிழக மக்கள் மீது தமிழக அரசாலும், காவல் துறையாலும் நிகழ்த்தப்படும் வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசு நடத்திய வன்முறைகளை விசாரிக்க அரசே ஒரு விசாரணை குழுவை அமைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவது, திருடன் கையில் சாவியைக் கொடுப்பது போன்று.

ஸ்னோலினும் மேலும் 12 பேரும்

‘ஸ்னோலினும் மேலும் 12 பேரும்’ என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை என்னை மட்டும் அல்லாது படிப்பவர்களின் அனைவரின் நெஞ்சையும் உருக்கும். அவற்றிலிருந்து சில வரிகள்….

“ஒரு வருடமாகிறது
இறந்தவர்கள்
இன்னும் இறந்தவர்களாகவே இருக்கிறார்கள்
இதுதான் அந்த 13 பேரும்
கடைசியாக தூங்கப்போன
கடைசி இரவு
விடியும் பொழுதில்
அவர்களுக்கு படுகளம் காத்திருப்பது அறியாமல்
அவர்கள் அமைதியாக தூங்கினார்கள்

கொலைகாரர்கள் வீடு திரும்பிவிட்டார்கள்
இறந்தவர்கள் எவரும்
இன்னும் வீடு திரும்பவில்லை
கல்லறைத் தோட்டங்களில்
கண்ணீருடன் அமர்ந்திருப்பவர்கள்
இன்னும் வீடு திரும்பவில்லை”

ஸ்னோலின் நினைவிடத்தில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளனர். “தவறை தட்டிக் கேட்க வேண்டும். இந்த உலகில் பிறந்ததற்கு நம்மால் முடிந்த ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அதற்காக வழக்கறிஞர் பணியைத் தேர்வு செய்து, அதற்காக படிக்கப் போகிறேன்” என்று கூறியவர் ஸ்னோலின்.

இந்த வார்த்தைகள் அவளைச் சார்ந்தவர்களிடம் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த மக்களிடமும் மீண்டும், மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் பல ஸ்னோலின்கள் இம்மண்ணில் பிறக்கட்டும். வீழ்வதற்காக அல்ல. மக்களின் வாழக்கையை உயர்த்துவதற்க்காக…