சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியதாக பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

மே 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துவந்தார் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன். அப்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியிருந்தார் கமல். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கமலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன.

இதைதொடர்ந்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் இப்படி பேசியதற்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றும், இன்றும் அரசியல் களம் பிரச்சாரத்தைக் காட்டிலும், கமல், ராஜேந்திர பாலாஜி குறித்துதான் அதிகமாகச் செய்தி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டுவருகின்றன.

இதனிடையே கமலின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “தமிழ்நாட்டில் நடந்த விவகாரத்திற்கு டெல்லியில் ஏன் வழக்கு தொடர்கிறீர்கள்? சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அத்துடன் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.