சேலத்தில் நேற்று (23.07.2019) நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டார். 31000 பயனாளிகளுக்கு 112கோடிரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், சுய உதவிக் குழுக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வழங்கினார். பெருநிறுவன சமூகப்பொறுப்புத் திட்டத்தின் (Corporate social responsibility – CSR) கீழ் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 4 இலட்சம் ரூபாயை வழங்கினார்.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகள் பலன்பெறும் வகையில் ஓசூரில் 20கோடி ரூபாய் செலவில் சர்வதேச மலர் ஏல மையம் தொடங்கப்படவுள்ளதால் விவசாயிகள் தங்கள் மலர்களை ஆன்லைனில் விற்பனை செய்யமுடியும். சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கூட்ரோடு பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா 1000கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவிரியில் 4 தடுப்பணைகள்:

ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கேரளா மற்றும்  கர்நாடகா மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால்,  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்  90 அடியை எட்டியவுடன் சம்பா சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும். காவிரி ஆற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவில் புதிதாக தடுப்பணை ஒன்று அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.  மேலும்,  3 இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் ஏரிகளில் நீர் நிரப்பப்படும்:

“காவிரி – கோதாவரி இணைப்புக்குப் பின்னர்,  அதிலிருந்து வரக்கூடிய உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் மட்டுமே மடைமாற்றப்படுவதால் டெல்டா பகுதிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

எட்டுவழிச்சாலைக்கு மக்கள் ஆதரவைத் தர வேண்டும்:

மேலும் “சாலைகள் அமைக்க மக்கள் தங்கள் நிலங்களை முன்வந்து வழங்கவேண்டும்; இளைஞர்களின் எதிர்காலம், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில்கொண்டு மக்கள் செயல்படவேண்டும்” என்றும் முதல்வர் தெரிவித்தார்.