கோவை துடியலூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே பன்னிமடை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 25ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதில், கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது நான்தான்” என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை வருகின்ற 15ஆம் தேதி வரை காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்குக் கோவை சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பன்னிமடையில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.