உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகும் பாகிஸ்தான் அரசை கண்டித்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அந்நாட்டை சாம்பல் பட்டியலில் ஏற்கனவே வைத்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் இருக்கும் என நிதி நடவடிக்கை பணிக்குகுழு அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டம் நடைபெற்று வருகிறது. 205 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் பயங்கரவாத அமைப்புள் மீது எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு 27 பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அவற்றில் 14 பரிந்துரைகளை மட்டும் நிறைவேற்றியிருக்கிறது. மேலும் பல பரிந்துரைகளை அலச்சியப்போக்கில் ஓரளவுக்கே செய்திருக்கிறது.

இதனைக் கவனித்த பணிக்குழு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி திரட்டப்படுவதை தடுக்க பாகிஸ்தான் அரசின் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், இப்போது சாம்பல் பட்டியலில் உள்ள பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை அந்த நிலையிலேயே நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. ஜூன் மாதத்துக்குப் பின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாவிட்டால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறும்போது, பிப்ரவரியில் பாகிஸ்தான் சாம்பல் பட்டியலிலிருந்து வெளியேறிவிடும் என அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தார். ஆனால், பணிக்குழுவின் முடிவால் அது சாத்தியமில்லை தீர்மானமாகிவிட்டது.

தங்கள் நடவடிக்கைகளையும் தீவிரவாதிகளுக்கு உதவும் போக்கும் நாளுக்கு நாள் பாகிஸ்தான் அரசிடம் வெளிப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து வந்தன. அதன் ஒரு அங்கமாக இந்த முடிவு இருப்பது வரவேற்க்கத்தக்கது.