தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதைக் கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்வதற்கு எதிராகவும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளைத் தமிழக அரசு விதித்தது. இதனால், தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதைக் கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்தத்தால் அடுக்குமாடி வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுமுகமான தீர்வை எட்ட இருதரப்பினரும் விரைந்து செயல்படவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் சென்னை மக்கள்.