திருமண விழா, புத்தக வெளீயிட்டு விழா, கோவில் திருவிழாக்கள், கட்சித் தலைவர் மற்றும் அவர்களின் மகன், மகள் திருமண விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா இப்படி பல பல விழாக்களும் தமிழ்ச் சமூகம் பேனர்களை வைத்து கொண்டாங்களை ஊர் அறிய பெரிதாக்குவது வழக்கம்.

இதில் கட்சித் தலைவர்கள் பெரும்பாலும் தங்கள் செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலைநிறுத்துவதற்கு எப்படியாவது பல லட்சங்களைச் செலவு செய்து தெரு முழுக்க ஏன் ஊர் முழுக்க பல பேனர்களை வைக்கிறார்கள். என்னதான் சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட விளம்பர பேனர் டிசைன்கள் பகிரப்பட்டாலும் பாமர மக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய ஒன்று, தெருவில் ஆங்காங்கே வைக்கும் பேனர்கள்தான்.

இந்த பேனர்கள் ஏங்கே வைக்கப்படுகின்றன? யார் இதற்கான அனுமதி அளிக்கிறார்கள்? எத்தனை பேனர்கள் வைக்கலாம்? அப்படி வைக்கப்பட்ட பேனர்கள் மக்களுக்கு இடையூறாக இருக்கிறதா? என்ற பல கேள்விகளுக்கு எப்போது யாரிடமும் பதில் இல்லை. ஏனென்றால் ஆளும் கட்சியின் செல்வாக்கின் பேரில்தான் இந்த வேலைகளெல்லாம் நடக்கிறது.

தற்போது இந்த பேனர் வைப்பு மூலமாக சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இறந்திருக்கிறார். ஒரு உயிரைப் பறிக்கக்கூடிய அளவிற்கு பேனர்களுக்கு சக்தி இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது என்று இந்தச் சம்பவம் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூரில் ரகு என்பவர் மீது இதேபோல பேனர் விழுந்ததில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் சாலையில் நடுவே உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவரது வாகனத்தில் மோதியது. இதனால், சுபஸ்ரீ லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஒருவர் கூறுகையில், “வழியில் யாருமே நிற்கவில்லை, 100 மீட்டர் நாங்கள்தான் தூக்கிச் சென்றோம்” என்கிறார்.

இந்த சம்பவத்தில் லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேனர் அடித்த பேனர் கடையை அரசு சீல்வைத்து மூடியுள்ளது. மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான 336, 304ஏ பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விளம்பர பதாகைகள் அச்சிடும்போது, அதன் கீழ் அதற்கான அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும், அனுமதியின்றி பேனர் அடித்துக்கொடுக்கும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறியிருந்தது.

சுபஸ்ரீயின் மரணத்தையடுத்து, இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.