இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கவே முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அது ஒட்டுமொத்த இந்தியர்களையும் கிளர்ந்தெழ செய்தது. சுதந்திர களத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பல மனித உயிர்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியாவில் மூலைமுடுக்குகள் எங்கும் நிறைந்திருந்த இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்தமாக இணைத்ததென்றால் மிகையாகாது.

பிரிட்டிஷ் ஆளுகையிலிருந்து விடுதலை கோரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் நடத்தப்பட்ட கோர தாக்குதல்களில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தனி இடம் எப்போதுமே உண்டு.

1919-ம் ஆண்டு ரவுலட் என்ற சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி, யாரையும் எந்த விசாரணையுமின்றி போலீசார் கைது செய்யலாம். இந்தச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறையைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அடுத்து நடக்க இருக்கும் அபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் தலைவர்கள், ரவுலட் அடக்குமுறை சட்டத்தைக் கண்டித்து பேசி வந்தனர்.

அப்போது, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் டயர், தனது படைபரிவாரங்களுடன் ஜாலியன் வாலாபாக் நோக்கி வந்தடைந்தார்.
வழக்கமான அச்சுறுத்தல்கள் என்று நினைத்த மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகக் குண்டுமழை பொழிந்தது. ஈவு இரக்கமின்றி மக்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

என்ன நடக்கிறது என்று புரியும் முன்னரே அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.
சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின், உத்தம் சிங் என்ற ராணுவ வீரர், இச்செயலுக்கு பழிவாங்கும் எண்ணத்தோடு இங்கிலாந்து சென்று டயரை சுட்டுக்கொன்று பழி தீர்த்துக்கொண்டார்.

நூற்றாண்டைத் தொட்டுள்ள இந்தக் கொடூரத்தின் நினைவு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜாலியன் வாலாபாக்கில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.