ஜோலார் பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது தண்ணீர் எக்ஸ்பிரஸ். கீழ்பாக்கம் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி, சோழாவரம், செம்பரம்பாக்கம், வீரணாம் உள்ளிட்ட ஏரிகள்தான். பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரை ரயில் மூலமாகச் சென்னைக்குக் கொண்டுவர உள்ளதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைக்கும் வேலைப்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குழாய் அமைக்கப்பட்டவுடன் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் (ஜுலை 10) நடைபெற்றது.

ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டு வரும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரயில் வேகன்களில் நீரை நிரப்பினார்கள் அதிகாரிகள். ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி நேற்று கிடைத்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை புறப்பட்டது ரயில். தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கொடியசைத்து ரயிலை அனுப்பி வைத்தார்.

5 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வில்லிவாக்கம் வந்தடைந்துள்ளது. வில்லிவாக்கத்தில் இருந்து கீழ்பாக்கம் நீரேற்று நிலையத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றும் நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் பயன்பாட்டுக்காகக் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.