2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கபடவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜவுளி தொழில்நுட்பத்துறையில் முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற இருந்த வேதியியலர், இளநிலை வேதியியலர் (தொழில் மற்றும் வணிகத்துறை), உதவி புவியியலர், புவி வேதியியலர் (பொதுப்பணித்துறை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் (சமூகநலத்துறை) ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது மே 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை, மதுரை, மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெறும். கணக்கு அலுவலர் தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி மே 5-ம் தேதி கணக்கு அலுவலர் (கருவூலத்துறை) பதவிக்கான எழுத்து தேர்வும், மே 11, 12-ம் தேதிகளில் அரசு குற்றவியல் உதவி வழக்கரிஞர் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வும் நடைபெறும். அதில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.