பருவமழை பொய்த்துபோன நிலையில் தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரிக்கொண்டேவருகிறது. அவ்வப்போது மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் தமிழகத்தின் எங்கோ ஓர் மூலையில் மழை பெய்கிறது. வறண்ட பிரதேசமாக தண்ணீருக்கு தவிக்கும் மாநிலமாக தமிழகத்தின் நிலை மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம்.

பெரும்பாலான இடங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை மக்கள் காசுகொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. மக்களின் இந்த தண்ணீர் தேவையை சிறிது கணக்கில் கொள்ளாத அதிமுக அரசைக் கண்டித்து திமுக-வினர் மாவட்ட தலைநகரங்களில் இன்று (22.06.2019) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. தயாநிதிமாறன், சேகர்பாபு எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர்ஏ.வ. வேலு, திருச்சியில் கே.என். நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் உதகை ஐந்து லாந்தர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலளர்கள், பேரூராட்சி, ஊராட்சி செயலர்கள், என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதான கோயில்களில் மழை வேண்டி அதிமுகவினர் யாகங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

அதேபோன்று கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கோயில்களில் அதிமுக அமைச்சர்கள் யாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.