ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் இனி ஆந்திர மக்களுக்கே முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் என அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு நேற்று (ஜூலை 22) நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75% பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவருக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அச்சட்டத்தின்படி, தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் அனைத்துமே, மொத்தப் பணியிடங்களில் 75% இடங்களை ஆந்திர மாநிலத்தவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும். இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லையெனில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று அதிரடியாய் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்து, ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு மூன்று மாதமும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இப்படியொரு சட்டம் இயற்றியதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பலரும் பாராட்டி வருகின்றனர்.