2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெள்யிட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.

ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே நான் கேரளாவில் போட்டியிடுகிறேன் எனக் கூறினார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களிலும் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்

விவசாயத்துக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

விவசாயக் கடன் திருப்பி செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தால் நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழைக்குடும்பங்கள் பயனடையும்.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

ரஃபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.

இரண்டு ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி முறைக்குள் கொண்டுவரப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சில்போன்று விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

இலங்கையுடனான மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்.

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

பொது துறைகளில் உள்ள சில துறைகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.