மதுரை சித்திரை திருவிழாவிற்க்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சித்திரை திருவிழாவும், தேர்தலும்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 2019 மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 10ஆம் தேதி அறிவித்திருந்தது. மதுரை சித்திரை தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும் என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் மக்களவை தேர்தலைத் தள்ளிவைக்கக்கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, மதுரையில் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றமுடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.

தேர்தல் நேரத்தை அதிகபடுத்த முடியும்

இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரின் அறிக்கைகள் அனைத்தையும் பெற்று, அதன்பின்னரே, இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை முடிவு செய்தது.” எனத் தெரிவித்தார்.

தேர்தல் தேதியை மாற்றக் கூடாது?

மேலும், பேசிய அவர், “ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் பாதுகாப்பு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டும். மதுரையைபோல இந்தியா முழுவதும் தேர்தல் தேதியை மாற்றிவைக்கக் கோரினால் என்ன செய்ய முடியும். இதனால், மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க முடியாது. தேர்தல் நேரத்தை இரண்டு மணிநேரம் அதிகப்படுத்த முடியும்.” என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற எண்ணத்தில் இருந்து பின்வாங்குகிறதா? என எண்ணத் தோன்றுகிறது என்று தெரிவித்தனர்.

“மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அப்படியான சூழலில், வாக்குப்பதிவு நடத்தினால், எப்படி முழுமையான வாக்குப்பதிவு சதவிகிதத்தை எட்ட முடியும்? தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச் சாவடிகள் உள்ளன. களநிலவரம் தெரியாமல் எதுவும் பேசாதீர்கள். நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதுதான் இறுதியா? தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக்கூடாது?” என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவும் நாளை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.