விஷூ பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீது தராசு சங்கிலி அறுந்து விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்கு இன்று காலை வந்த எம்.பி. சசிதரூர் தனது எடைக்கு எடையாகத் துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். சசிதரூருடன் அவரின் குடும்பத்தார், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில் சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கியபோது எதிர்பாராவிதமாக இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. அது சசிதரூரின் மேலே விழ, அவரின் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ரத்தமானது.

இதையடுத்து உடனடியாகத் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சசிதரூர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, தலையில் 6 தையல்கள் போட்டுள்ளனர். தற்போது சசிதரூர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துலாபாரம் முடிந்த பின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க சசிதரூர் முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.