ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் கூடாரம் ஒன்று சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் உள்ள பார்மர் என்னும் மாவட்டத்தில் சுமார் 300 பேர், ஒரு திருவிழாவுக்காக கூடியுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாலை 5 மணியளவில் பந்தலின் ஒரு பகுதி திடீரென்று சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதையடுத்து இரும்பு உத்திரங்களும் கீழே சாய்ந்தன. இதைப் பார்த்த மக்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் பலர்மீது இரும்பு உத்திரங்கள் விழுந்ததில் படுகாயமடைந்தார். இருப்பினும், 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடியுடன்கூடிய மழையின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் காரணமாக மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாநில இயற்கை பேரிடர் மற்றும் நிவாரண அமைச்சர் பன்வார் லால் மேக்வால் மழை பொழிவு அதிகமானதும் ஏன் மின்சாரத்தைத் துண்டிக்கவில்லை என ஒருங்கிணைப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.