ஒரு நாடு வல்லரசாவதற்கு அந்நாட்டின் மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் நேர்மையுடன் பணி செய்ய வேண்டும். ஊழலை ஒழிப்போம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச்செல்வோம் போன்ற வெற்று கூச்சல்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்நாளெல்லாம் லஞ்சம் வாங்காமல் ஏதோ ஓர் அரசு அதிகாரி இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறான், அவ்வப்போது பலர் தங்கள் சுயநலத்திற்காக சாமானிய மக்களைப் பகடை காய்களாக்கி ஊழலை பரப்புவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மிக சுலபமாக நடந்துகொண்டே இருக்கிறது.

அரசு அலுவலகங்களுக்குள் செல்லும்போது, முக்கியமான சில கோப்புகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பதைவிட அதிகாரிகள் கேட்கும் பணத்தை நம்மால் கொடுக்கமுடியுமா என்று மக்கள் தங்கள் பாக்கெட்டை சரிபார்த்து கொள்கிறார்கள். இந்த ஆண்டில் வல்லரசாகிவிடும், அடுத்த ஆண்டில் ஆகிவிடும், ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் இன்னும் கொஞ்சம் காலம்தான் என என இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பொதுமக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்ற கேள்விக்கு விடை காணுவது அவ்வளவு எளிதல்ல.

எத்தனை ஆட்சிமாற்றம் வந்தாலும் ஊழல், திறமையற்ற அதிகாரிகள், பொறுபின்மை, சோம்பேறித்தனம் உள்ளிட்ட இந்தியாவின் தேசிய வியாதிகள் நாளுக்குநாள் தலைமுறை தலைமுறையாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற பணியாளர்களையும் பணி நீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணி நீக்கம் என்பது சரியான முடிவா என்றால் இல்லை, இருந்தாலும் பணியாளர்களுக்கு இந்த பணி நீக்கம் ஏதோ ஒரு வகையில் பொறுப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு இந்தமுடிவை எடுத்துள்ளது. இதற்காக ஊழியர்களின் பணிப் பதிவேடுகளை ஆய்வு செய்யுமாறு அனைத்துத் துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது வாழ்க்கை மற்றும் அரசுப் பணிகளில் இருந்து ஊழலை ஒழிக்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக ஊழலில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டுமன்றி, செயல்திறன் இல்லாத ஊழியர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒவ்வொரு மத்திய அரசு வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், ஒருவரின் நேர்மை சந்தேகத்துக்குரிய வகையிலோ அல்லது செயல்திறன் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டாலோ அவர்களைக் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டுமென்றும், அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.

சமீபத்தில் இந்த ஆணையின் அடிப்படையில்  27 வருவாய்த்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.