குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளுக்குநாள் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதன் ஒருகட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. ஆனாலும் தடையைமீறி அனுமதியின்றி போராட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

வழக்கமாக, சட்டப்பேரவை கூடும் நாள்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இந்நிலையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் போராட்டம் காரணமாக சட்டமன்ற வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 துணை ஆணையர்கள் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், வணிகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று (19.2.2020) காலை முதலே போராட்டக்காரர்கள் கடற்கரை சாலையில் திரண்டனர். இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா சாலை, வாலஜா சாலை ஆகிய இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை முழுக்க பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், 15 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே சட்டமன்றத்தை நோக்கி பயணிக்கின்றனர்.