தமிழக-கேரள எல்லையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக அதிரடிப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் வந்தது, இதையடுத்து அவர்கள் அங்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் கோழிக்கோடு – பெங்களூர் நெடுஞ்சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ‘உபாவன்’ என்ற ரிசார்ட்டில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள மக்களிடம் பணம் மற்றும் உணவுகளை வழங்க வேண்டுமென மிரட்டி  கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர், அதற்குள் மாவோயிஸ்ட்டுகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களை தேடிச்சென்ற அதிரடைப்படையினர் மாவோயிஸ்ட்டுகள் மறைந்திருந்த இடத்தை நோக்கி துப்பக்கிச் சூடு நடத்தினர். இரவு முழுவதும் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார், மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மலப்புரம் பண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பிபி ஜலீல் என்பதும் அவர் மாவோயிஸ்ட் தலைவர் என்பதும் தெரியவந்தது, அவரது உடலை கைப்பற்றிய அதிரடிப்படையினர் தப்பியோடிய மற்ற மாவோயிஸ்ட்டுகளையும் தேடி வருகின்றனர். இந்த சண்டையில் போலீசார் இருவர் காயமடைந்துள்ளனர் .