வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 16) மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் செய்யத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்ட பிரச்சாரங்கள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை தவிர்க்கவும் தேர்தலை நியாயமான முறையில் வழிநடத்தவும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் புதுச்சேரி ஆட்சியர் டி.அருண்.

இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19ஆம் தேதி காலை 6 மணிவரையில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது பொது இடங்களில் ஒரே இடத்தில் ஐந்து பேருக்கும் மேல் கூடுவதும் ஆயுதங்கள், அரசியல் பேனர்கள், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டி.அருண் தெரிவித்துள்ளார்.