2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, செப்டம்பர் 22ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என மத்திய உள்துறை அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக மக்களும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 ஆகிய இரு சட்ட மசோதாக்களும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அனுப்பி வைத்தது தமிழக அரசு. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் பெற்று தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார்.

2017ஆ ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழக அரசு அனுப்பிய இரண்டு மசோதாக்களையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது மத்திய அரசு.

இந்த இரு சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை துணைச் செயலாளர் ராஜீவ் எஸ்.வைத்யா உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், “தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தது. அந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

அந்த மசோதாக்களை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்தார். நிறுத்திவைக்கப்பட்ட மசோதா செப்டம்பர் 22ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது.