ஆளுமை என்பது கிடைப்பதல்ல, கண்டடையப்படுவது. விருப்ப பெறுப்புகளைக் கடந்து இன்று தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இயங்கும் எல்லோருமே ஏதோ ஒரு துறையில் ஆளுமைகள்தான். நல்லகண்ணு தொடங்கி  கலைஞர் வரை யாரை பற்றி விவாதித்தாலும் அவர்களின் தனியாளுமையில்தான் அவரின் பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருவருடைய துணைவி என்பதால் மட்டுமே உருவாக்கப்பட்ட பிம்பத்திடம் முடிவெடுக்கும் அதிகாரம் செல்லும்போது அதன் கனம் தாளாமல் தடுமாறி தத்தளித்து தாழ சரிகிறார்கள். அன்று ஜானகி எம்.ஜி.யார், இன்று பிரேமலதா.

தன்னுடைய கணவர் உடல் நலிவுற்று  கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவு பிரமலதா தன்னாளுமையை வெளிக்காட்டியிருக்க வேண்டும். அதைத்தான் தேமுதிகவின் கடைக்கோடி தொண்டனும் எதிர்பார்த்திருப்பான். ஆனால் தன்னுடைய தம்பி  ஒருபுறம், தன் மகன் ஒருபுறம் என அதிகார பரவலை கொடுத்து தன்னாளுமையை வீணடித்திருக்கிறார். குறிப்பாக தன்னுடைய மகனை தேர்தல் களத்திற்கு அவர் கொண்டு வந்திருக்கவே கூடாது. தனியனாக அவர் கடக்க வேண்டிய தூரமும், சவாலும் நிறைய இருக்கிறது.  இளங்கன்று பயமறியாதுதான். ஆனால் அது திசையுமறியாது.

கட்சியின் பொருளாளராக ஆக்கப்பட்ட பின் தேமுதிகவின் அதிகாரபூர்வ முகமாக பிரேமலதா மாறினார். அதற்கு முன் அவர் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு நடந்த பல பொதுப்பிரச்சினைகளில் அவரின் குரலே ஒலித்திருக்காது. தேர்தலுக்கு முன்பு வரைகூட தேமுதிக பற்றி நீங்கள் செய்திகளையே படித்திருக்க மாட்டீர்கள். பொதுப் பிரச்சினைகளின் களம் அவர்களுக்கானதல்ல என நினைத்துவிட்டார்கள் போல.  பிரச்சினை நேரங்களில் திமுக தொடங்கி, விடுதலை சிறுத்தைகள், சீமான், திருமுருகன் காந்தி வரை போராடிக்கொண்டிருப்பார்கள். தேமுதிகவிலிருந்து  என்ன அறிக்கை வருகிறது என பார்ப்பேன், கிணத்தில் போட்ட கல்லாக இருப்பார்கள். விஜயகாந்த் அற்ற நேரங்களில் அது பிரேமலதாவின் செயலின்மையாகவே பார்க்கப்படும்.

இப்போது ஊடகங்கள் கட்டமைக்கும் பிரேமலதாவின் பிம்பம் கூட மிகைபடுத்தப்பட்டதுதான். ஒருவேளை விஜயகாந்த் மீண்டும் திரும்பும்போது இந்தப் பிம்பத்திற்கு வேலையில்லை. அதுவரையிலாவது அவர் கட்சியைக் காக்க வேண்டும். ஆனால், அவரின் வார்த்தைப் பிரயோகங்கள், உடல் மொழியில் உள்ள பதட்டம், நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது. பொது வெளியில் கோபப்படுவது, மரியாதைகுறைவான வார்த்தைப்பிரயோகங்கள் ஒருவரை படுகுழியில் தள்ளும் என்பதை அறியாத அளவு சுற்றி இருப்பவர்களால் ஊதி பெருக்கப்படுகிறாரா பிரேமலதா? டவுன் ஃபால் -லை தவிர்க்க பிரேமலதா உண்மையில் தான் யார் என்பதை உணர வேண்டும். தனக்கான ஆளுமையை கண்டடையவேண்டும். அப்போதுதான் பொதுத்தளத்தில் அவர் கவனிக்கப்படுவார்.

இப்படி பொதுத்தளத்தில் இயங்குகிற ஒருவர் ஜனநாயகத்தையும், சுய மரியாதையையும் தாங்கிப் பிடிக்கிற மண்ணிலிருந்து, பத்திரிகையாளர்கள் மீது சல்லீசான வார்த்தைகளை வீசி எறிவதன் பின்னணி என்ன? எது அவர்களுக்கு இந்த ஆத்திரத்தையும் அசட்டு தைரியத்தையும் கொடுக்கிறது?

“தமிழகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்சலாவண்யத்தையும் ஊழலையும், அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது”  என தேமுதிக கொள்கை சொல்கிறது. இப்படி கொள்கை கொண்ட ஒரு கட்சி எப்படி அதிமுகவுடன் கூட்டணி சேர்கிறது? கொள்கை என்பது பஜ்ஜி மடிக்கும் அச்சுத்தாள் என நினைத்துவிட்டார்களா என்ன? இது எல்லாவற்றையும் விட கேலிக்கூத்து பிஜேபியை எப்படி நம்புகிறார்கள்? தமிழகத்தில் பிஜேபியின் நிலை என்ன என்று அனைவரும் அறிந்தது. அவர்களின் பாவத்தில் பங்கு கேட்பது சுயவதை.

கட்சியின்  கொள்கைகளையும் பொதுபிரச்சனைகளுக்கு ஒரு கட்சி எவ்வாறு குரல் கொடுக்கிறது, மக்கள் பிரச்சனையில் அந்த கட்சியின் நிலைபாடு என்ன என பல கோணங்களை  அலசி ஆராய்ந்து ஓட்டு போடாமல், சாதி,பணம், பின்புலத்தை வைத்து வாக்கு செலுத்தினால் பிரேமலதா போல ஒருவரில் தான் அது முடியும். அவர்கள் பேசும் அசட்டு வார்த்தைகள்தான் உங்கள் முகப்புத்தக சுவர் முழுதும் விரவிக்கிடக்கும். இது அவர்களின் அறிவிலித்தனத்திற்கு நாம் தரும் நேர விரயம்.

திரும்பத் திரும்ப பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தனிப்பட்ட விவாதங்களிலும் தேமுதிகவின் கொள்கை என்ன என விவாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் வாக்காளன் தான் வாக்களிக்கும் கட்சி தன்னுடைய கொள்கை அளவிலாவது நேர்மையுடன் இருக்கிறதா என அறிய முற்படுவதுதான். பிரேமலதா இதை உணர்ந்து கட்சிக்கும் தன் தொண்டனுக்கும் செய்ய வேண்டியது, கட்சிக் கொள்கைகளை பிரஸ்தாபப்படுத்தி, எப்படி நேர்மையுடன் இந்த தேர்தலை அணுகவேண்டும் என விவாதிப்பதுதான்.

காலம் தாழ்த்திய அணுகுமுறை, கொள்கையின்மை, நேர்மையற்ற தலைமைப் பண்பு, மதச்சார்பு கட்சியுடன் கூட்டணி இவற்றின் பலனை இந்தத் தேர்தலில் தேமுதிக அறுவடை செய்யும். வீராவேசம் பேசி, தேர்தலிலும் தோல்வியுறும் அந்தப் புள்ளியில் இருந்து பிரேமலதாவின் போலி பிம்பமும் சரியத் தொடங்கும். இதை அவர் நேர் செய்ய தவறும்பட்சத்தில் விரைவிலேயே கேலி மீம்களில் விஜயகாந்தின் இடத்தை பிரேமலதா பிடிப்பார்.

சட்டசபையில் நாக்கை மடித்து வீராவேசம் பேசி தன்னுடைய எம்எல்ஏக்களை அதிமுகவிடம் தாரைவார்த்து பின் மீண்டும் அதே கட்சியுடன் கூட்டணி வைக்க ஹோட்டல் ஹோட்டலாக பேச்சுவாத்தை நடத்துவதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?  ஏதோ ஒன்றின் அடிப்படையில் உங்களை நம்பி வாக்கு செலுத்திய வாக்காளனுக்கு தேமுதிக செய்யும் மரியாதை இதுவல்ல பிரேமலதா. கட்சி சாராமல் உங்களுக்கு வாக்கு செலுத்தியவன் உங்களை இன்னும் அதிகமாய் கவனித்திருப்பான். அவன்தான் உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவன்.