டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜி.என்.சாய்பாபாவை உடனடியாக விடுவிக்கக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் இந்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். கடந்த 2014 மே மாதம் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட பேராசிரியருக்கு 2017-ஆம் மார்ச் மாதத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜி.என் சாய்பாபா சத்தீஸ்கரில் சல்வா ஜூடும் அணியினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், மாவோயிஸ்டுகளை வேட்டையாட ஐந்து மாநிலங்களில் இந்திய அரசு மேற்கொண்ட கிரீன் ஹன்ட் செயல்திட்டத்தால் எத்தனைப் பாதிப்புகள், மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளன என்பதைத் தீவிரமாக எடுத்துக் கூறி வந்தவர். அவரின் இந்தச் செயல்பாடுகள் வலுவடைந்த காலத்தில் இப்படியான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பிரஷாந்த் ராஹி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஹெம் மிஸ்ரா, மூன்று பழங்குடியினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் விஜய் திக்ரி என்பவருக்கு மட்டும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

ஜி.என் சாய்பாபா சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர், 90 சதவிகித உடல் முடங்கியிருக்கும் நிலையில் அவர் தீவிர உடல்நலத் தொய்விற்கு ஆளாகியுள்ளார். தனிமைச் சிறையில் இருக்கும் அவருக்குப் போதிய வசதிகள் ஏதும் கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியின் வயது கிட்டத்தட்ட இரண்டு. கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ‘வரப்போகும் இந்த குளிர்காலத்தை நான் தாங்குவேனா என்று தெரியவில்லை’ என்று சொல்லியிருந்தார். குளிரிலிருந்து தப்பிக்கப் போர்வைகள், ஸ்வெட்டர்கள் தன்னிடம் இல்லையென்றும், கடும் காய்ச்சலில் கால்களும், இடது கையும் அதிகமாக வலிக்கின்றன என்று அவர் எழுதியிருந்தார். ‘ஒரு ஆதரவற்ற பிச்சைக்காரனைப் போல உங்களிடம் நான் கெஞ்சிக்கொண்டே இருப்பது என்னைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது. 90 சதவிகித உடல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கையுடன் கம்பிகளுக்குப் பின் நின்று ஒரு மனிதன் உடல் நலிவுகளுடன் போராடிக்கொண்டிருப்பதை உங்கள் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. இது நிச்சயம் இரக்கமற்ற தண்டனைக்குரிய அலட்சியம்!’ என்று கூறியிருந்தார்.

அவருடைய மனைவி வசந்தாவும் ஆரம்பம் முதலே தன் கணவருக்குத் தேவையான அடிப்படை மருந்துகள் கூட கொடுக்கப்படவில்லை என்றும் அவரின் உடல்நலம் தொடர்ந்து மோசமாகி வருகிறது என்றும் ஊடகங்களில் முறையிட்டிருந்தார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்களும் பேராசிரியரை விடுவிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜி.என்.சாய்பாபாவின் உடல்நலம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஜன்னல்கள் அற்ற, அதிக வெப்பம் சூழ்ந்த அறைக்குள் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். 2014-இல் அடிபட்ட அவரின் இடது கை காயம் இன்னமும் சரியாகவில்லை. சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி அவர் கடுமையான வலியில் அவதிப்படுகிறார், அவர் உடல் மயக்க மருந்துகளுக்குப் பதிலுரைக்க மறுக்கின்றது. டாக்டர் சாய்பாபா சிறுபான்மையினர், பழங்குடியினர், தலித்துகளின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களில் முக்கியமானவர். சர்வேதச விதிகளின்படி, அவருக்குச் சரியான மருத்துவ வசதிகளை வழங்கி, அவரின் உடல்நலத்தை உறுதி செய்வது இந்திய அரசின் கடமை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகால தனிமைச் சிறை என்பது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் கூறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை குழு கடந்த 2018 ஜூன் முதல் சாய்பாபாவிற்காக இந்திய அரசிடம் பேசி வருவதாகவும், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். சிறுபான்மையினருக்காக, தலித் மக்களின் உரிமைக்காக, பழங்குடியினரின் தேவைகளுக்காக அரசிடம் நீதி கேட்டு கேள்வி எழுப்புவர்களுக்கு மத்திய அரசு இப்படியான முகம்தான் காட்டுமென்றால், இந்த வன்முறைக்கு எதிராக நமது குரல்கள் உயர்வது உடனடித் தேவையாகும்.