ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ கூறியபோதும், அவரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கக் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதியளித்த குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடந்த 21ஆம் தேதி கைது செய்தது சிபிஐ. அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 13 நாட்களாக சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்திவந்தது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி ப.சிதம்பரத்திற்கு நேற்றுடன் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பு கோரிக்கையை ஏற்று அவரை 3 நாள்களுக்கு திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யவும், மனு மீது உடனடியாக முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்ற உத்தரவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதால், அதனைத் திரும்பப் பெறுமாறு கோரினார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க விருப்பமில்லை என்றும், எனவே அவரை திகார் சிறைக்கு அனுப்ப உத்தரவிடுமாறும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாளை மறுதினம் வரை அதாவது 5ஆம் தேதி வரை சிதம்பரம் சிபிஐ காவலில் கட்டாயம் இருக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.