இன்று (ஜுன் 18) நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பிக்கள் அனைவரும் வாழ்க தமிழ், தந்தை பெரியார் வாழ்க, டாக்டர் அம்பேத்கர் வாழ்க, மார்க்சியம் வாழ்க, காமராஜர் வாழ்க என்று கூறி தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜுன் 17) தொடங்கியது. இதில், மக்களவையின் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில், வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர், எம்.பி.யாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். திமுகவின் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் இன்று தமிழில் பதவி பிராமணம் எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ‘வாழ்க தமிழ், வாழ்க பெரியார்’ என்றும் கரூர் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, ‘வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழ்’ என்றும் முழங்கினர். தர்மபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி. செந்தில்குமார் நாடாளுமன்றத்திற்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்து, ‘திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ் ஓங்குக’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.

தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ‘வாழ்க தமிழ், வாழ்க தலைவர், வாழ்க தளபதி’ என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் து.ரவிக்குமார் ‘வெல்க தமிழ், வாழ்க அம்பேத்கர்’ என்றும் குறிப்பிட்டனர். மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ‘தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க’ என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘வாழ்க அம்பேத்கர் பெரியார், வெல்க ஜனநாயகம் சமத்துவம்’ என்று குறிப்பிட்டார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரான ராமலிங்கம், ‘வாழ்க தமிழ், வெல்க பெரியாரின் கொள்கை’ என்றும் நாகை செல்வராஜ், ‘வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தொழிலாளர் ஒற்றுமை’ என்றும் முழங்கினர். மேலும் மற்ற தமிழ்நாட்டு எம்.பிக்களும் தமிழ் மொழியில் உணர்ச்சி பொங்கப் பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழ் வாழ்க என்று தமிழக எம்.பி.க்கள் கூறும்போதெல்லாம் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோ‌ஷமிட்டனர். அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டார். மக்களவையில் தமிழக எம்.பிக்கள் தமிழ்மொழியில் பதவியேற்று, வாழ்க தமிழ் என்று கூறியது தற்போது இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.