அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி மதுரையில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேட்ச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வரும் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கே.கே.ரமேஷ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அதிமுக சார்பில் மதுரையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவால் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதால் மதுரையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.” என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தபோது, பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டாமெனக் கூறிய, தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஏற்கனவே, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், தேர்தலைத் தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.