மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாதுகப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவடைகிறது.

2019 மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சித்திரை தேரோட்டத்துக்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பொது மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் என பொதுமக்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தெரிவித்திருந்தனர். மதுரையில் தேரோட்டமும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுரையில் மக்களவைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட நிர்வாகத்திடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் தடையில்லா சான்று பெற்று, உரிய ஆய்வுகளுக்குப் பிறகே ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலை வேறு தேதிக்கு மாற்றமுடியுமா?

தமிழகத்தின் மிகமுக்கியமான திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்காக மதுரையில் 5 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என சுட்டிக்காட்டினர். நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்திற்கு ஆர்வமில்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சித்திரை திருவிழா நாளில் தேர்தலை நடத்தலாம் என மாவட்ட நிர்வாகமும், காவல் கண்காணிப்பாளரும் தடையில்லா சான்று வழங்கியது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

சித்திரை திருவிழா நாளில் மதுரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மக்கள் எப்படி வாக்களிக்கச் செல்வார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரையில் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றமுடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.